சதிகாரர்களுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள் ; சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரிஸ்


-அபூ ஜாஸி-

கடந்த 70 வருட முஸ்லிம் அரசியல் வரலாற்றில் இவ்வாறு மிக இக் கட்டான நிலை இருந்ததில்லை, இதற்காக சர்வ முஸ்லிம் அரசியல் தலைமைகள் பொதுத் தளமொன்றில் ஒன்றிணைய வேண்டும்  என முன்னாள் ராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரிஸ் தெரிவித்தார். 

ஐக்கிய மக்கள் சக்தி அணியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரான எச்.எம்.எம்.ஹரிஸ் மேலும் கருத்து வெளியிடுகையில், 

முஸ்லிம்கள் கடந்த காலங்களை விட இப்போது பல்வேறு நெருக்குதல்களை சமாளிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இறுதிக் கிரிகைகள் கூட மார்க்க ரீதியில் செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

விசேடமாக முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்று பட்டு "சர்வ முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கான பொதுத் தளம்" ஒன்றில் முஸ்லிம் களின் எதிர்காலத்திற்கான திட்டமிடல்கள் செய்யப்படல் வேண்டும் இதற்கான அழைப்பை இந்த இடத்தில் நாம் விடுக்கின்றோம்.

விசேடமாக உளத்தூய்மையுடன் நமது மக்களுக்காக நாம் ஒன்றினைய வேண்டிய கடப்பாட்டினை காலம் நமக்கு ஏற்படுத்தியுள்ளது. Covid-19 இன் தாக்கம் ஒரு புறம் இருக்க மறுபுறம் கண்ணுக்கு புலப்படா பல்வேறு மறைமுக சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அண்மைய காலங்களில் பொத்துவில் பிரதேசத்தில் முஸ்லிம்களின் வாழிடங்கள் கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் நாம் தொல்லியல் திணைக்களம் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு பிரதேச முன்னிலை செயற்பாட்டாளர்களுடன் இணைந்த செயற்பாடு ஒன்றினை திட்டமிட்டுள்ளோம்.

முஸ்லிம் தேசியம், மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகள் தொடர்பில் நாம் மிக தெளிவான நிலைப்பாட்டினை கொண்டிருக்கின்றோம். முஸ்லிம்களின் தேவைகளை நாம் முன்னிலைப்படுத்த நினைக்கின்றோம். விசேடமாக முஸ்லிம்களின் மீதான திணிப்புக்களை நாம் எதிர்க்கின்றோம். நரித்தனமான காய் நகர்த்தல்கள் ஊடாக கல்முனை முஸ்லிம் பிரதேசங்களை கபளீகரம் செய்கின்ற எந்த ஒரு அமைப்புக்கும் அதன் திட்டங்களுக்கும்  ஒரு துளியேனும் நாம் இடம் கொடுக்க முடியாது.

இதனாலேயே தமிழ் அரசியல் தலைமைகள் என் மீதான சேறு பூசல்களை தொடர்கின்றன. இது பல்வேறு வடிவங்களை பெறுகின்றது. விசேடமாக நமது சில சகோதரர்களை பயன்படுத்தி இத்தேர்தலில் தமது இலக்கினை அடைய அவர்கள் முயற்சிக்கின்றார்கள்.

அதற்காக நமது சமூகத்திற் கூடாக சில மறைமுக முகவர்களை அவர்கள் நமக்கெதிராக பயன்படுத்துகின்றார்கள், இவ்வாறான சதிகளுக்கெதிராகவும் சதிகாரர்களுக்கு எதிராகவும் நமது மக்கள் எதிர்வரும் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்  எனவும் தெரிவித்தார். 

Post a Comment

0 Comments