அம்பன் சூறாவளியின் வேகம் அதிகரிக்கிறதுஅம்பன் சூறாவளியின் தாக்கமானது, நாட்டின் பல்வேறுபட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில்  காற்றின் வேகமானது உயர்வாக உணரப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தைப் பொருத்தவரை, இந்தக் காற்றின் தாக்கத்தின் காரணமாக, 66 குடும்பங்களைச் சேர்ந்த 229 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரென, யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர்  என்.சூரிராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், ஞாயிறு, திங்கட்கிழமைகளில் (17, 18), வீசிய காற்றின் தாக்கத்தின் காரணமாக, இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, நெடுந்தீவு பகுதியில்,14 குடும்பங்களைச் சேர்ந்த 54 அங்கத்தவர்களும் உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 அங்கத்தவர்களும் நல்லூர் பிரதேச செயலகத்தில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று அங்கத்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
அத்துடன், பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 166 குடும்பங்களுமாக மொத்தமாக 66 குடும்பங்களைச் சேர்ந்த 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரெனத் தெரிவித்த அவர், மேலும், காற்றின் தாக்கத்தின் காரணமாக, 47 வீடுகள் இதுவரை பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் கூறினார். 
“அத்துடன், இன்னும் ஓரிரு நாள்களுக்குள் குறித்த காற்றின் தாக்கமானது கூடுதலாக காணப்படுவதன்  காரணமாக, கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு, வளிமண்டலத் திணைக்களத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக,  மீனவர் சமூகத்தினர் விழிப்பாக செயற்பட வேண்டும்” எனவும் காற்றின் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சூரிராஜ் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments