பிரதமர் மஹிந்தவின் அழைப்பை ரணிலும் புறக்கணித்தார்பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (04) நடைபெறவுள்ள கூட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சியும் பகிஷ்கரிப்பதாக அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார். 
கடந்த நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களையும் இன்று விசேட கலந்துரையாடலுக்கு அலரி மாளிகைக்கு பிரதமர் அழைத்திருந்தார்.
மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி  உள்ளிட்ட எதிரணியினர் இந்த கூட்டத்துக்கு செல்வதில்லை என, முன்னதாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி முன்னதாக அறிவித்திருந்தது.
எனினும், தற்போது இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
இந்த கலந்துரையாடலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட செயற்பாட்டு அரசியலில் ஈடுபடும் சகல அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சூழலில் அர்த்தமுள்ள கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட முடியாது எனவும் அதனால் குறித்த கலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சி கலந்துக்கொள்ள போவதில்லை  என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, கொவிட் 19 வைரசை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments