அக்கரைப்பற்று யாரோடு ? அதாவுல்லஹ்வா /தவமா ???


-அபூ ஜாஸி -
பொதுத் தேர்தல் ஒன்றினை எதிர் நோக்கி இருக்கின்ற நிலையில் அக்கரைப்பற்று அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக சமூக வலைத்தளங்கள் வாயிலாக கருத்துக் கணிப்புக்களும் இடம்பிடிக்கத் தொடங்கியுள்ளன. 

எவ்வாறெனினும், முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்களின் பதவி வெற்றிடம் அக்கரைப்பற்று மக்களிடையே ஒரு வகையான ஏக்கத்தினை கடந்த காலங்களில் ஏற்படுத்தி வந்தது உண்மையானதே. 

இருப்பினும் அதாவுல்லாஹ் அவர்களின் ஆஸ்த்தான பீடம் முஸ்லிம் ஜனாசாக்களை எரிக்க உத்தரவிட்டதன் பின்னரான நிலைமை மாறுபட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். கருத்து கணிப்புக்களில் இந்தச் செய்தியை மக்கள் வெளியிட தலைப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சரை எதிர்த்து முஸ்லிம் காங்கிரஸ் தனது வேட்பாளரை அதே களத்தில் களமிறக்கி இருப்பதானது பெரிதும் சவாலான விடயம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. மாறுபட்ட கொள்கைகளை கொண்ட இரு தலைமைகள் ஒரே ஊரில் ஏக காலத்தில் போட்டி என்பது சிக்கலான நிலைமையே. 

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் முஸ்லிம் காங்கிரசின் மாவட்ட மட்ட போராளிகளின் அன்பினை வென்றவர், சமூக ரீதியிலான எதிர்பார்ப்புகளை அடிப்படையாக கொண்டு முன்னே நிற்கின்ற அரசியல் தலைமை. இளைஞர்களை பெரிதும் கட்டி வைத்திருக்கின்ற வசீகரம். அத்தோடு முஸ்லிம் காங்கிரசில் அக்கரைப்பற்று தனது பிரதிநிதித் துவத்தை தக்க வைக்க வாய்ப்புக்களும் அதிகமாகவே காணப்படுகிறது.

அதேவேளை, எவரிடமும் மண்டியிடாத, தனது கொள்கையில் விடாப்பிடியான, அதிகார அனுபவமும், முதிர்ச்சியும் கொண்ட ஒருவரே முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ். முதன் முறையாக தனது சொந்தக் கட்சியில் தனித்து களமிறங்கியுள்ளார். மாவட்டத்தில் சுமார் 40,000 வாக்குகளை திரட்டி தனது வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தல் மிகவும் சவாலுக்கு உட்படுத்தப்படும் விடயமாகவே காணவேண்டியுள்ளது. 

அக்கரைப்பற்று வாக்காளர்கள் தமது தேவைகளையும், சமூகத்தின் இருப்பு தொடர்பிலான அக்கறையினையும் இத்தேர்தலிலும் வெளிக்காட்டுவார்கள் என்பதில் உடன்பாடு காண வேண்டியுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக நீண்டகாலம் அக்கரைப்பற்று அதிகாரத்தை கையாண்டுள்ளதுடன், அக்கரைப்பற்றின் தலைமைகள் அவ்வூரால் முதலில் நிராகரிக்கப்பட்டு பின்னரே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது என்பதும் வரலாற்று உண்மையாகும்.

நாட்டிலுள்ள முஸ்லிம்களின் இக்கட்டான இச்சந்தர்ப்பத்தில், அக்கரைப்பற்று மக்களின் தெரிவு தேசிய முஸ்லிம் நீரோட்டத்தோடு கலந்திருக்க வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கின்ற நிலையில் அவர்களும் அதனை சரிவர புரிந்து கொண்டே செயலாற்றுவார்கள் என்றே நம்பப்படுகிறது. 

Post a Comment

0 Comments