அரசாங்கத்தின் தீர்மானத்தால் அதிகரிக்கவுள்ள கொரோனா தொற்று



அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்காகவே தற்போது மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் ஒருபோதும் மதுபானசாலைகளை திறக்குமாறு கோரிக்கை விடுக்கவில்லை எனவும் அரசாங்கத்தின் இந்த தீர்மானம் கொரோனா வைரஸ் பரவலை அதிகரிக்கச் செய்யும் எனவும் ஓமல்பே சோபித தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது நாட்டில் முழுமையாக கொரோனா வைரஸ் பரவல் இல்லாதொழிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதால் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைவதற்கு அதிக சாத்தியம் காணப்படுகின்றது.
அத்தியாவசிய தேவைகள் மற்றும் பாதுகாப்பான பொது போக்குவரத்து சேவை உள்ளிட்ட விடயங்களை மாத்திரமே மக்கள் முன்வைத்தார்கள்.மாறாக மதுபானசாலைகளை திறக்குமாறு கோரிக்கை முன்வைக்கவில்லை.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஜனாதிபதி முன்னெடுத்த நடவடிக்கைகள் பிற நாடுகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக காணப்பட்டன.ஆனால் மதுபானசாலைகள் திறக்கப்பட்டமை முற்றிலும் தவறான தீர்மானமாகும்.
மதுபோதையில் உள்ளவர்கள் எவ்வாறு சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவார்கள். மதுபானசாலைகளின் முன்னிலையில் வரிசைகரமாக இருந்தவர்கள் செயற்பட்ட விதம் வெறுக்கத்தக்கது.
ஊரடங்கு சட்டத்தை தளர்த்தி உலக நாடுகள் பாதுகாப்பான முறையில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் சுற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மிகவும் நெருக்கடியான நிலையில் மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளமை கொரோனா வைரஸ் பரவலை தீவிரப்படுத்தும்.
எனவே மதுபானசாலைகளை மீள திறக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை ஜனாதிபதி மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments