அரசாங்கத்திற்கு தயாகமகே சவால் ; முடிந்தால் வெளியிடுங்கள்


அரசாங்கம் வழங்கி வரும் 5000 ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொண்டவர்களின் பெயர்ப் பட்டியலை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக தற்போது நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம் என்பன முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் அரசாங்கம் அனைத்துக் குடும்பங்களுக்கும் வாழ்வாதார உதவியாக 5000 ரூபா கொடுப்பனவு வழங்குவதாக அறிவித்திருந்தது. அதனையடுத்து அவ்வாறு வழங்கியவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த தயா கமகே,
இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அறிய முடியாமல் உள்ளது. எனவே நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் பரிசோதனை செய்ய வேண்டும். இதற்கு உதவுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்த போதும் அதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. எமது பேச்சுக்களை தட்டிக்கழித்தது.
ஆகவே பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி தேவையான முன்னெடுப்புக்களை செய்வதற்கு ஜனாதிபதி முன்வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். தற்போது நாட்டில் எலிக்காய்ச்சல் நோயினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் இதில் சந்தேகம் உள்ளது.
நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. வர்த்தகர்கள், நடுத்தர வர்த்தகர்கள் சிறுவர்தக வியாபாரிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதாரம் பின்தங்கிய நிலையில் நாடு பின்னோக்கி செல்லும் நிலை உருவாகியுள்ளது. 5000 ரூபா கொடுப்பனவில் பெரும் ஊழல் இடம்பெற்று வருகின்றது.
இதுதொடர்பாக ஜனாதிபதியுடன் பேசி இருக்கின்றோம். பரீட்சை பெறுபேறுகளை இணையத்தில் வெளியிட முடியுமென்றால் ஏன் 5,000 ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொண்டவர்களின் பெயர்களை வெளியிட முடியாது. இதனை வெளியிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments