முஸ்லிம் M.P க்கள் குறையப்போகும் இக்கட்டான சந்தர்ப்பத்தில் யார் நமது பிரதிநிதிகள் ???

- அபூ ஜாஸி -
இலங்கை முழுவது பரவி வாழும் முஸ்லிம்களில் கணிசமான முஸ்லிம்கள் கிழக்கிலேயே வாழ்கின்றனர். கிழக்கு மாகாணம் முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட மாகாணமாகும். இருப்பினும் தமிழ் மக்களும், சிங்கள மக்களும் கணிசமான தொகையினர் இங்கு வாழ்கின்றனர். 

இந்நிலையில் எதிர்வரப்போகும் பொதுத்தேர்தலில் முஸ்லிம் தலைவர்களைக் கொண்டுள்ள கட்சிகளான  முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் என்பன தனித்துப் போட்டியிடுகின்றனர். அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பானது தனியாக சுயேட்சைக்குழுவில் களமிறங்கியுள்ளது.

இனவாதம், மற்றும் முஸ்லிம் விரோத மன நிலையை அடிப்படையாக கொண்ட தேர்தலாக கணிக்கப்படுகின்ற இத்தேர்தலில், பிரதமர் மஹிந்த தலைமையிலான மொட்டு கட்சியும், சஜித் தலைமையிலான டெலிபோன் சின்ன கூட்டு அணியும் பலப்பரீட்சையில் களமிறங்கியுள்ளன. பிரதான பேசு பொருளாக முஸ்லிம்களையும் தமிழர்களையும் யார் அதிகம் அடக்கியாள்வதாக பிரச்சாரம் செய்வது என்கின்ற போட்டி தென்னகத்தில் ஏற்பட்டுள்ளது. எனவே கிழக்கிற்கு வெளியே முஸ்லிம் அபேட்சகர்களுக்கு ஏனைய இனத்தவர்கள் வாக்களிப்பு என்பது மிக அரிதாகவே இடம்பெறலாம். 

முஸ்லிம்கள் மத்தியில் முஸ்லிம்களை எரிய விட்டுள்ள ஜனாஸா எரிப்பு சம்பவங்கள் ஆளும்கட்சிக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான நீண்ட விரிசலை ஏற்படுத்தும் அபாயத்தையும் ஏற்படுத்தி வருகின்றது. அது நிரந்தரமாக மாறும் நிலை மிக கஷ்டமானதாகும்.

இந்நிலையிலேயே. சஜித் அணியில் மட்டகளப்பில் ACMC. யும் அம்பாறையில் SLMC யும் இணைந்து களமிறங்கியுள்ளன.

ஏற்கனவே மு.கா 6 ஆசனங்களை(2 தே.ப உட்பட) கிழக்கில் கொண்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 3 ஆசனங்களை கிழக்கில் கொண்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரப்போகும் பொதுத்தேர்தலில் முஸ்லிம் பா.உ களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படலாம் என கருதப்படுகிறது. 

அம்பாறையில் மு.கா இணைந்த அணி 2 ஆசனங்களையும், ACMC -1 ஆசனத்தையும், தேசிய காங்கிரஸ் 1 ஆசனத்தையும் பெறலாம். அதேவேளை மட்டகளப்பில் எவ்வாறாயினும் ஒரே ஒரு முஸ்லிம் ஆசனம் கைப்பற்றபட வாய்ப்புகளுள்ளன.

அவ்வாறு எல்லா மாவட்டங்களிலும் மு.கா ஆசனகளை கைப்பற்ற முடியுமாக இருந்தாலும் மொத்தமாக நான்கு ஆசனங்களையே கிழக்கில் கைப்பற்ற முடியுமாக இருக்கும், அதேவேளை ACMC கிழக்கில் மூன்று ஆசனங்களை ஏற்கனவே கொண்டிருந்தது (1 தே.ப உட்பட ) இக்கட்சியும் தனது ஆசனங்களில் சரிவினை எதிர்கொள்ள வாய்ப்புகளுண்டு.

இவ்வாறு எண்ணிக்கையில் குறைவான அளவில் பா.உ க்கள் தெரிவு செய்யப்பட்டாலும் முஸ்லிம்களின் உரிமைகள், ராஜதந்திர நகர்வுகளை கையாளக்கூடிய தகுதியுள்ளவர்களுக்கு முன்னுரிமையளிக்க வேண்டிய கடப்பாடு எல்லா முஸ்லிம்களுக்கும் உள்ளது. பிரதேச பாகுபாடுகளுக்கு அப்பால் கவனமாகவும், அழுத்தமாகவும் இவ்விடயம் தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது.

எவ்வாறெனினும் தேசிய ஆளும் கட்சியில் முஸ்லிம் வேட்பாளர்கள் இல்லாத இச்சந்தர்ப்பமானது மொத்தமாக இலங்கையில் முஸ்லிம் பாராளுமன்ற ஆசனங்களை குறைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. 

Post a Comment

0 Comments