அரசாங்கம் தான் இனவாதத்தை தூண்டுகின்றது” நீதிமன்றில் பகிரங்கமாக கூறிய எம்.ஏ.சுமந்திரன்

கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ரம்ஸி ராஸிக் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக தொடர்ந்தும் குரல் கொடுத்த ஒருவர் என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரபல சமூக வலைத்தள எழுத்தாளராக கருதப்படும் ரம்ஸி ராஸிக், சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த வழக்கு நேற்று கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மேற்படி விடயங்களை நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
இதில் “மனநிலையை மாற்றவே முயற்சிப்பதாகவும், ரம்ஸி ராஸிக்கும் அவ்வாறான சில சொற்களைப் பயன்படுத்தி இனங்களுக்கு இடையே குரோதம் ஏற்படும் விதத்திலான சமூக வலைத்தள பதிவுகளை அனைவரும் பார்க்கும்படியாக (பப்லிக்) பதிவிட்டு வந்துள்ளார்” என்று குற்றப் புலனாய்வுப் பிரிவு சார்பாக ஆஜரான உப பொலிஸ் பரிசோதகர் துசித குமார நீதவான் முன்னிலையில் தெரிவித்தார்.
இதன்போது சந்தேகநபரான ரம்ஸி ராஸிக் சார்பில் சட்டத்தரணி டிலன் டி சில்வாவுடன் ஆஜராகி பதிலளித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்,
“சந்தேக நபர் ஒரு பிரபலமான எழுத்தாளர். அவர் ஒரு முஸ்லிம். அவர் தொடர்ந்தும் இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் இனவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்த அது குறித்து எழுதிவந்த ஒருவர் எனத் தெரிவித்து அதனை உறுதிப்படுத்துவதற்காக பல சமூக வலைத்தள பதிவுகளின் பிரதிகளையும் நீதிமன்றத்தில் முன்வைத்தார்.
அவர் ஒரு போதும் இனவாதத்தை தூண்டவில்லை. நாட்டில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத போக்கொன்றே உள்ளது. இரு ஊடகங்கள் பொதுக்களத்தில் இனவாதத்தை தூண்டுகின்றன.
குறிப்பாக இந்த கொவிட் தொற்று நிலைமையை எடுத்து பாருங்கள். முதல் தொற்றாளர் அடையாளம் காணப்படும் போது அவர் வெறும் தொற்றாளர்.
முஸ்லிம் ஒருவர் தொற்றாளராக அடையாளம் காணும் போது அவரின் இனத்தை குறிப்பிட்டு பல்வேறு பிரச்சாரங்கள் இடம்பெறுகின்றன.
இங்கு முஸ்லிகளுக்கு எதிராகவே இனவாதம் தூண்டப்படுகின்றது என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக் காட்டினார்
இதன்போது நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக யார் இனவாதத்தை தூண்டுகிறார்?” என நீதிவான் லங்கா ஜயரத்ன கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், “அரசுதான்” என பதிலளித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள ரம்ஸி ராஸிக் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் என்பதோடு ஏனைய அவரது ஆரோக்கிய நிலைமையையும் கருத்திற் கொண்டு பிணை வழங்கப்பட வேண்டும்.' என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நீதிமன்றைக் கோரினார்.
அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்ட நீதவான்,
“கைது செய்யப்பட்டுள்ள ரம்ஸி ராஸிக் வேண்டுமென்றே குற்றம் புரிந்துள்ளாரா என்பதைத் தேடி ஆராய்ந்து, அவரது முகநூல் கணக்கையும் முழுமையாக ஆராய்ந்து , ஒரு விரிவான பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு” குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், சந்தேக நபரான ரம்ஸி ராஸிக் மே மாதம் 14 ஆம் திகதி தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments