சீனா உலகத்திற்கே துரோகம் செய்துள்ளது ; கொரோனா சதியா ?


கொரோனா வைரஸ் தொடர்பில் உண்மைகளை மறைத்து உலக நாடுகளுக்கு சீனா துரோகம் இழைத்திருக்கிறது என அமெரிக்க அதிபர் உட்பட அந்நாட்டு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் கடுமையாக சீற்றமடைந்தள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா தற்போது முதலிடத்திலிருக்கிறது.
இந்நிலையில், அனைத்துக்கும் சீனா தான் காரணம் என இப்போது பகிரங்க குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. சீனா தான் உலகம் முழுவதும் கொரோனாவை வர்த்தக நடவடிக்கைகளுக்காக பரப்பியதாக ஒரு சில ஊடகங்கள் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.
சீனா முழுமையாக கொரோனா தொடர்பில் வெளிப்படுத்தாமல் மறைத்துக் கொண்டிருப்பதாகவே சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிடுகின்றன.
இது தொடர்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசியதாவது, “நமக்கு எப்படி தெரியும்? அவர்கள் பலி எண்ணிக்கை கொஞ்சம் குறைவாகக் காட்டப்படுகிறது. மறைக்கிறார்கள், ஆனால் சீனாவுடனான நம் உறவு நல்ல முறையில்தான் உள்ளது” என்று கூறினார்.
அமெரிக்க இராணுவம்தான் கொரோனா பரவலுக்குக் காரணம் என சீனா குற்றம்சாட்ட அமெரிக்காவோ சீனாதான் கொரோனா பரவலுக்குக் காரணம் என்று எதிர்க்குற்றச்சாட்டுகளை வைத்து இதன் மூலம் எழுந்த சர்ச்சைகளை நாம் அறிவோம். சதிக்கோட்பாட்டாளர்கள் சீனா தன் வர்த்தக நலன்களுக்காகவே இந்த வைரஸை பரப்பியது என்ற குற்றச்சாட்டுகளை வைத்தாலும் ஆதாரபூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை.
இந்நிலையில் அமெரிக்க காங்கிரஸில் உள்ள குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் அமெரிக்க உளவுத்துறையை மேற்கோள் காட்டும் புளூம்பர்க் அறிக்கையைச் சுட்டிக்காட்டி சீனா உலக நாடுகளை தவறாக வழிநடத்தி விட்டது என்று குற்றம் சாட்டியுள்ளது.
சீனாவின் கொரோனா செய்திகள் அனைத்தும் பூர்த்தி பெறாதவை என்றும் அதன் பலி எண்ணிக்கை போலியானது என்றும் ப்ளூம்பர்க் இரகசிய உளவு ஆவணம் ஒன்றை வெள்ளை மாளிகைக்கு கடந்த வாரம் அனுப்பியதில் தெரிவித்துள்ளது.
சீனா அதிகாரபூர்வமாக 82,361 பேர்தான் உறுதி செய்யப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்கள் என்றும் நேற்றைய புள்ளிவிபரங்களின்படி 3,316 பேர் பலியானதாக குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில் இதற்கு எதிர் திசையில் அமெரிக்கா நிற்கிறது. கொரோனாவின் பிறப்பிடமான சீனாவிலேயே தொற்று எண்ணிக்கை குறைவாக காட்டப்பட அமெரிக்காவில் 2 லட்சத்து 6, 207 பேர் பாதிப்படைந்து 4,542 பேர் மரணமடைந்துள்ளனர். குடியரசுக் கட்சியின் செனட்டர் பென் சஸ்ஸே, சீனாவின் எண்ணிக்கைகளை “குப்பைப் பிரச்சாரம்” என்று ஒதுக்குகிறார்.
“அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பலி சீனாவை விட அதிகம் என்பது பொய். சீன கம்யூனிஸ்ட் கட்சி பொய் சொல்லியது, இன்னும் பொய் சொல்லி வருகிறது. மேலும் பொய்யையே தொடரும்” என்று கடுமையாக சாடியிருக்கிறார்.
அதேபோன்று, குடியரசுக் கட்சி உறுப்பினர் மைக்கேல் மெக்கவுல் என்பவர் உளவுத்துறை அறிக்கையைச் சுட்டிக்காட்டி, “கோவிட்-19க்கு எதிரான போரில் சீனா நம்பத்தகுந்த கூட்டாளி அல்ல” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.
“மனிதனிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் வைரஸ் குறித்து உலகத்திற்கு சீனா பொய்யுரைத்துள்ளது. உண்மையை கூற விரும்பும் பத்திரிகைகள், மருத்துவர்கள் வாயை அடைத்து விட்டது. தற்போது உண்மையான எண்ணிக்கையை மறைத்து வருகிறது” என்று ஆவேசப்பட்டுள்ளார்.
இதேவேளை, அமெரிக்க கொரோனா மருத்துவ ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டெபோரா பர்க்ஸ் கூறும்போது, “நமக்கு சீனாவிடமிருந்து முக்கியமான தரவுகள் கிடைக்கவில்லை” என்று கைவிரித்திருக்கிறார்.
எவ்வாறாயினும் தற்போதுள்ள நிலவரப்படி, அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பல மடங்காகிக் கொண்டிருக்கிறது. முன்னதாக 2 லட்சம் அமெரிக்கர்களை நாம் இழக்கப் போகிறோம் என்று வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments