About Me

header ads

ஈரான் - அமெரிக்கா போர்ப்பதற்றம்; அடுத்து என்ன? - அரசியல் நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்?

The Hindu-
அமெரிக்க வான்வழித் தாக்குதலில் ஈரானின் புகழ்பெற்ற தளபதி சுலைமான் கொல்லப்பட்டதையடுத்து, இராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தியதை அடுத்து இருநாடுகளுக்கு இடையேயேயும் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சுலைமானி கொல்லப்பட்டதற்கான பழிவாங்கும் செயல்தான் இந்த அமெரிக்கா மீதான தாக்குதல் என்று ஈரான் கூறி அமெரிக்காவை மேலும் சீண்டியுள்ளது.
இதில் பதற்றத்திற்குக் காரணம் என்னவெனில் முதன் முறையாக அமெரிக்கத் துருப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதோடு அதனை தானாகவே அறிவித்தது.
சுலைமான் கொல்லப்பட்டதும் ஈரான் பதிலடி கொடுத்திருப்பதும் போர்ச்செயல்கள் என்று கூறலாம், ஆனால் அதிகாரப்பூர்வ போர் அறிவிப்பு எதுவும் அல்ல. ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஜரீப் ஐநா விதிமுறை 51ன் படி இது தற்காப்புத் தாக்குதலே என்கிறார். அவர் மேலும் கூறும்போது ‘ஈரான் போர் விரும்பி நாடல்ல, ஆனால் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டியுள்ளது’ என்றார்.
சுலைமானியின் இறுதிச் சடங்கில் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற குரல்கள் வலுவாக ஒலித்தன. ஈரானில் உள்ள ஷியா புனித நகரான குவாமில் மசூதி ஒன்றில் சிகப்பு வர்ணக்கொடி ஏற்றப்பட்டது, இது போருக்கான அறிகுறியாகும். கொல்லப்பட்ட சுலைமானியினால் உருவாக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்ட ஷியா படையின் கதைப் ஹெஸ்புல்லா யூனிட் இராக் படைகள் அமெரிக்கப் படைகள் இருக்கும் பகுதியில் இருக்க வேண்டாம் என்று எச்சரித்தது. ஈரானின் தாக்குதல் போர்ப்பதற்றத்தை உருவாக்குவது ஆனால் முழு மூச்சு போருக்கானதல்ல என்றே கூறப்படுகிறது.
இராக் எர்பிலில் அமெரிக்க ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் வாஷிங்டனுக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளது ஈரான். இந்த இராக் குர்திஸ்தான் பகுதியில் அமெரிக்காவுக்கு நிறைய பாத்யதை உண்டு. இராக்கின் மற்ற பகுதிகளிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டால்ம் குர்திஸ்தான் பகுதியான எர்பிலில் இருந்து அமெரிக்கப் படைகள் நகராது என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் எர்பில் நகரத்தில் உங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை மறைமுகமாக இந்தத் தாக்குதல் மூலம் ஈரான் அமெரிக்காவுக்கு உணர்த்தியுள்ளது.
சாத்தியமாகும் காட்சிகள்:
ஆகவே அடுத்து என்ன? அமெரிக்கப் படைகளில் 80 பேர் பலியானதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்தாலும் அதை அமெரிக்கா உறுதி செய்யவில்லை, அதிபர் ட்ரம்ப் ‘ஆல் இஸ் வெல்’ என்று அதை மறுத்து விட்டார், மேலும் அமெரிக்கப் படையினர் பலியாகியிருந்தால் ட்ரம்ப் நிச்சயம் ஆத்திரமடைந்திருப்பார், அப்படியில்லாததால் போர்ப்பதற்றம் குறைய வாய்ப்புள்ளது. ஆனால் இதைத் தவிர பிற சாத்தியங்கள் முழு முற்றான போருக்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்கின்றனர் சில நிபுணர்கள். முதலில் ஈரானின் உட்பகுதியில் தாக்குதல் நடத்த ட்ரம்ப் உத்தரவிட்டால் இது ஈரானிடமிருந்து மேலும் ராணுவ எதிர்வினைகளையே உருவாக்கும். உடனடியாக நிலைமைகள் கட்டுக்கடங்காமல் போக வாய்ப்புள்ளது.
இரண்டாவதாக அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவில் எழுந்துள்ள போருக்கு எதிரான குரல்களுக்கு செவிமடுத்து பழிவாங்கும் தாக்குதலுக்கு உத்தரவு பிறப்பிக்காவிட்டாலும் இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகளை விரட்டுவதை குறிக்கோளாகவே ஈரான் கொண்டுள்ளது. ஈரான் தன் பிராக்சி படைகளான பாதர் பிரிகேட், கதைப் ஹெஸ்புல்லா படைகளை விட்டு அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. மூன்றாவதாக ஷியா மிலிஷியாஸ் படையினர் அவ்வப்போது அங்கு தன்னாட்சி செலுத்தி வருகின்றனர். இவர்கள் சுலைமானியை இழந்ததால் ஈரான் அதிகாரப்பூர்வ அனுமதி அளிக்காமலேயே ஆத்திரத்தில் இராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்த அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தக் காரணிகளெல்லாம் அமெரிக்காவை முழு நேர போருக்குத் தூண்டலாம்.
போர் மூண்டது என்றால் ஈரானுக்குள் புகுந்து அதிசேதம் விளைவிக்கக் கூடிய பயங்கர வான் வழித் தாக்குதலில் அமெரிக்கா ஈடுபடலாம். அனைத்திற்கும் மேலாக இஸ்ரேலை சீண்டும் விதமாக புதிதாகப் பதவியேற்றுள்ள ஈரானின் புரட்சிப்படையின் கமாண்டர், “அமெரிக்கா மிகவும் நேசிக்கும் இடத்தை ஈரான் தீவைத்துக் கொளுத்தும்” என்று இஸ்ரேலை சூசகமாகக் குறிப்பிட்டதும் போர் பதற்றத்தை அதிகப்படுத்தவே செய்துள்ளது. எதுவாக இருந்தாலும் அமெரிக்கா முழுநேரப்போர் முடிவை எடுத்து விட்டால் அது நிச்சயம் பேரழிவை அப்பகுதிகளில் ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை.

Post a Comment

0 Comments