About Me

header ads

இலங்கை முஸ்லிம்கள் மீது திணிக்கப்படுவது என்ன ??? - ஆய்வு-அன்வர் நௌஷாத் -

கடந்த காலங்களைப் போலல்லாது இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசானது தன்னை பௌத்த நாடாக நிலைநிறுத்துவதற்கான செயற்பாடுகளில் பெரிதும் வெற்றி கண்டு வருகின்றமையை அண்மைக்கால சம்பவங்கள் கோடிட்டு காட்டி வந்துள்ள போதிலும் ரத்ன தேரரின் போராட்டம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. 

பலரும் தமது இலக்குகளை நோக்கி நகர்த்தக் கூடிய சமூகமாக முஸ்லிம்களை குறிவைத்துள்ளனர். விசேடமாக கடந்த காலங்களில் முழு முஸ்லிம்களையும் ஆயுதாரிகளாக சித்தரிக்கும் பெரும்பான்மை அமைப்புக்கள், அரசியல் தலைமைகள் முஸ்லிம்களின் வாழ்விடம், பொருளாதாரத்தினை இலக்கு வைக்கும் தீவிரவாத கும்பல். 

இந்நிலையில் முஸ்லிம் கட்சிகள், அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளை ராஜினாமா செய்துள்ளமை சமூகத்தின் நெருக்கடி நிலைமையை தவிர்ப்பதற்கான மிக சாத்வீக போராட்டமொன்றின் பொறிமுறை. 

கடந்த ஏப்ரல் 21 ம் திகதிய மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு IS எனும் தீவிரவாத அமைப்பு உரிமை கோரியிருந்த போதிலும் அதில் பங்குபற்றியவர்கள் முஸ்லிம்கள் என்பதால் இலங்கை முஸ்லிம்களை குறிவைத்து பல வசைபாடல்களும், தாகம் தீர்த்துக் கொள்ளும் முயற்சிகளும் அரங்கேறி வருகின்றன. பாதுகாப்பு தரப்பு இதுவரை பயங்கரவாதத்துடன்  சம்பந்தப்பட்டவர்கள் என்கிற வகையில் 2000ற்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளது. அநேக சந்தேக நபர்கள் முஸ்லிம்களால் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதை பாதுகாப்பு வட்டாரங்கள் தெளிவாக ஒப்புக்கொள்கின்றன. 


அதேவேளை முஸ்லிம் பெயர்தாங்கிகளை இவ்விடயத்திற்கு பயன்படுத்தியவர்கள் யார் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதே இச்சமூகம் இப்பொறியில் இருந்து வெளிவர உள்ள பிரதான வழியாகும் 

இருப்பினும் முஸ்லிம்களை வலிந்து இவ் விசச் செயற்பாடுகளுக்குள்  இழுத்துவிட வேண்டும் என்கின்ற கைங்கார்யத்தை யார் செய்கின்றார்கள் என்கின்ற தெளிவு முஸ்லிம்களிடம் எட்டப்பட வேண்டும்.  இலங்கைப் பெரும்பான்மை பௌத்தர்களிடம் முஸ்லிம்கள் குறித்த மிகப் பிழையான  அபிப்பிராயம் பரப்பப்பட்டுள்ளது. இதில் இருந்து எவ்வாறு மீளலாம் என்கிற நிலையில் இவ்வமைச்சுகளின் ராஜினாமா மிகப் பலமான நடவடிக்கையாகும். அதிலும் ஆளுங்கட்சி பின்வரிசை உறுப்பினர்களாக இருக்கத் தீர்மானித்தமை மிக சாணக்கியமான நகர்வு. 


எவ்வாறிருப்பினும் முஸ்லிம் சமூகத்தின் தனி நபர்களின் பொறுப்புக்கூறல் மிக இன்றியமையாததாகும். முஸ்லிம்கள் இலங்கையில் மிக தெளிவான அரசியல் மற்றும் சமய ரீதியிலான செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளனர். சில தனி நபர் மற்றும் மார்க்க முரண்பாடுகள் இவ்வாறான அசந்தர்ப்ப வாத நிலையை முழு முஸ்லிம்கள் மீதும் திணித்துள்ள நிலையை அனைவரும் அனுபவிக்க வேண்டிய கட்டாயத்தை திணித்துள்ளது. 

இந்நிலையில் நம்மை சுற்றியுள்ள முஸ்லிம் விரோத அல்லது பயன்பெறு செயற்பாட்டாளர்களின் பின்னணியும் நம்மால் மிக நிதானமாக நோக்கப்பட வேண்டியுள்ளது. 
  • அடுத்து வரும் தேர்தல் ஒன்றில் ஆட்சி மாற்றம் அல்லது தொடர்ச்சி 
  • ஜனாதிபதி பதவிக்கான போட்டி 
  • தாம் சார்ந்த இனம், பிரதேசம் தொடர்பிலான மக்களின் அனுதாபம்
  • தமது சொந்த துரோகங்களை, பிழைகளை  மறைக்க மக்களை தூண்டுவது அல்லது பிழையாக வழிநடத்துவது
  • வெளிநாட்டு நிகழ்ச்சி நிரல்கள், வசதிகள், தேவைகள் 
என்பவற்றினை பிரதான பின்னணியாக கொண்டுள்ளமையினை அனுமானிக்க முடிகின்றது. இதில், இஸ்லாமிய சமூகத்தவர்களின் நிலைப்பாடு மிக மிக அத்தியாவசியமானதாகும்.  விசேடமாக பொது தளங்கள், சமூக ஊடகங்கள், ஊடகங்கள், பொது மேடைகள் எல்லாவற்றிலும் அவதானத்துடன் கூடிய கையாள்கை மிக இன்றியமையாது. விசேடமாக தாம் அரசியல் கட்சி ஒன்றின் அல்லது மத கொள்கை ஒன்றின் மீதான அதீத பற்று அல்லது கண் மூடித்தனமான பற்றுதல்களை விடுத்து சுயாதீமான முஸ்லிம்களாக மாற வேண்டியுள்ளது. 

நிரந்தரமான போர் ஒன்றின் பின்னரான இயல்பு வாழ்க்கையில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றமையை கருத்திற்கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருக்கின்றது Post a Comment

0 Comments