சாய்ந்தமருதில் நடந்தது என்ன ? -நேரடி றிபோர்ட் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, April 28, 2019

சாய்ந்தமருதில் நடந்தது என்ன ? -நேரடி றிபோர்ட்


முகம்மத் இக்பால் -சாய்ந்தமருது
நிந்தவூரில் வெடிபொருட்களும், குண்டு தயாரிக்கும் உபகரணங்களும் பொலிசாரினால் கைப்பற்றபட்டிருந்தது. அந்த இடத்துக்கு அடிக்கடி வந்து சென்ற வாகனமொன்று அடையாளம் காணப்பட்டு பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.
குறித்த வாகனத்தினைக் கண்டுபிடிக்கும் பணியில் பொலீசார் மும்முரமாக ஈடுபட்டனர். இது சாய்ந்தமருது கரைவாகு பிரதேசத்திலுள்ள சுனாமி குடியேற்ற பள்ளிவாசலுக்கும் தெரிவிக்கப்பட்டது.
அதேநேரம், குறித்த பள்ளிவாசலுக்கு அண்மித்த பகுதியிலுள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கிடமான நபர்கள் ஒரு வாரமாக வாடகைக்கு குடியிருக்கும் விடயம் தெரியவந்தது.
பின்பு அதன் உண்மையைக் கண்டறிவதற்காக சிலர் சந்தேகத்துக்கிடமான குறிப்பிட்ட வீட்டுக்குச் சென்ற போது, அங்கு ஆயுதத்துடன் சிலர் இருந்ததனைக் கண்டதும் சென்றவர்கள் பயத்தில் பின்வாங்கியதுடன், அது படையினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அந்த இடத்தில் பதற்றம் ஏற்பட்டு அப்பிரதேச மக்கள் ஒன்றுகூடத் தொடங்கினார்கள். அதன் பின்பு மக்களைக் கலைப்பதற்காக எடுத்த எந்த முயற்சியும் கைகூடாத நிலையிலும், அங்கிருந்து தங்களது வாகனத்தில் தப்பிச்செல்ல முடியாத நிலையும் ஆயுததாரிகளுக்கு ஏற்பட்டது.
பின்பு “அல்லாஹ் அக்பர், அல்லாஹ் அக்பர்” என்று கூறிக்கொண்டு வானத்தை நோக்கி ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். துப்பாக்கி சத்தத்தினால் ஊர் முழுவதும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் மக்கள் குழம்பிய நிலையில், பதற்றத்துடனும், அச்சத்துடனும் காணப்பட்டார்கள்.
அதே நேரம், இராணுவத்தினர்கள் வருகை தந்ததுடன், கரைவாகு பிரதேசத்தை சுற்றி வளைத்தார்கள். அப்போது ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக அப்பிரதேசத்திலுள்ள மக்கள் அங்குமிங்குமாக தப்பி ஓடத்தொடங்கினார்கள்.
அப்போது ஓர் முச்சக்கர வண்டியில் சாய்ந்தமருதைச் சேர்ந்த ஓர் குடும்பத்தினர் அவ்விடத்திலிருந்து பதற்றத்துடன் வெளியேற முற்பட்ட போது, இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகளுக்கு இலக்காகி மனைவி இறந்ததுடன், முச்சக்கர வண்டி செலுத்தி வந்த கணவர் படுகாயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நேரத்தில் ஆயுததாரிகள் தங்கியிருந்த வீட்டுக்குள் குண்டொன்று வெடித்தது. பின்பு சிறிது நேரத்தில் இன்னுமொரு குண்டு வெடித்தது.
இந்தச்சந்தர்ப்பத்தில் பரஸ்பரம் துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டது. இது பல மணி நேரமாக நீடித்தது. இராணுவத்தினர்களால் தாங்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளோம் என்பதனை அறிந்ததும் வீட்டுக்குள் இருந்த ஆயுததாரிகள் முகநூல் மூலமாக நேரடி ஒளிபரப்புச் செய்தவாறு தங்களை காபீர்கள் சுற்றி வளைத்துள்ளார்கள் என்று கூறிக்கொண்டு தக்பீர் முழக்கத்துடன் குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டதாக அறியப்படுகின்றது.
ஆயுததாரிகளிடம் இராணுவத்தினரை எதிர்த்து சண்டை செய்வதற்காக ஒரே ஒரு T56 ரக துப்பாக்கி மட்டுமே இருந்துள்ளதாகவும், மற்றவைகள் குண்டுகளும், அதனைத் தயாரிக்கும் உபகரணங்களும் என்றே அறிய முடிகின்றது.
இந்த தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஆயுததாரிகளைச் சேர்ந்த 13 பேர்கள் கொல்லப்பட்டார்கள். அதில் அவர்களது குழந்தைகளும், பெண்களும் அடங்கும்.
இராணுவத்தினர்களை எதிர்த்து சண்டைசெய்த ஆயுததாரிகளில் ஒருவர் துப்பாக்கியுடன் இறந்து கிடந்தார். இவர் தற்கொலை செய்ததாக தெரியவில்லை. இவரின் தலையில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில், அவரது உடல் காணப்பட்டது. வீட்டுக்குள் தற்கொலை செய்து கொண்டவர்களின் உடல்கள் சிதைந்த நிலையில் கிடந்தது.
வீட்டுக்குள் எத்தனை பேர்கள் உள்ளார்கள், என்ன நிலையில் உள்ளார்கள் என்று தெரியாத நிலையில், இராணுவத்தினர்கள் முன்னெச்சரிக்கையுடன் மிகவும் தாமதித்தே அவ்வீட்டுக்குள் பிரவேசித்தார்கள். அதுவரைக்கும் துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டபடியே முன்னேறினார்கள்.
துப்பாக்கிதாரிகள் தப்பிக்க நினைத்தால் மக்களை கொலை செய்து விட்டு தப்பித்திருக்கலாம். ஆனால், மக்களுக்கு எதுவும் செய்யாது தற்கொலை செய்து கொண்டார்கள் என்று சம்பவத்தை நேரில் கண்ட அப்பிரதேசவாசி தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் பொது மக்கள் சிலரும் காயமடைந்து அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages