கருத்து வேறுபாடுகளுடன் இனவாதத்தைப்பரப்பி வருவது கவலைக்குரியது -அமைச்சர் ஹக்கீம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, April 4, 2019

கருத்து வேறுபாடுகளுடன் இனவாதத்தைப்பரப்பி வருவது கவலைக்குரியது -அமைச்சர் ஹக்கீம்நாட்டில் சமய நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடியதாக ஒரு சாரார் குறுகிய கருத்து வேறுபாடுகளைத் தூண்டுகின்ற விதத்தில் இனவாதத்தைப் பரப்பி வருவது கவலைக்குரியது எனக்குறிப்பிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வியமைச்சர் ரவூப் ஹக்கீம், ஆன்மீகத்தில் அதிகம் கவனஞ்செலுத்துவதுடன்; சகிப்புத்தன்மையும் அவசியமானது என்றார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் பலாபத்தலவில் புதன்கிழமை (03) யாத்திரிகர்கள் ஓய்வெடுக்கும் இரண்டு மாடி விடுதிக்கட்டடத்தை மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு உரையாற்றுகையில் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,
எனது அமைச்சினூடாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசித்த போது, இரத்தினபுரி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரான எ.எ.விஜயதுங்க இந்தப் பிரதேசத்தில் யாத்திரிகர்களுக்கான ஓய்வெடுக்கும் விடுதியொன்றை அமைக்க வேண்டுமென்று வித்தியாசமான ஆலோசனையொன்றை எனக்கு வழங்கினார்.
இந்நாட்டில் சிவனொளிபாத மலை என்பது சமய நல்லிணக்கத்தின் அடையாளச் சின்னமாகக்கருதப்படுகின்றது. அவ்வாறான தலமொன்றிற்கு பிரவேசிக்கக் கூடியதோர் இடத்தில் இத்தகைய யாத்திரிகர்களுக்கான ஒரு விடுதி அமையப்பெறுவது அவசியமானதாகும்.
இந்த நாட்டில் சுதந்திரம் கிடைத்ததன் பின்னர், நாட்டின் தேசியக் கொடியைத் தயாரிக்கும் போது பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் ஒன்று தான் சிவனொளிபாத மலையை தேசியக்கொடியில் இடம்பெறச்செய்வது என்பதாகும். அது தொடர்பாக நீண்ட விவாதங்கள் கூட நடந்தன.  தேசியக் கொடியை நாங்கள் அனைவரும் மதிக்கின்றோம். ஏற்றுக் கொள்கின்றோம். அதில் மாற்றுக் கருத்துக்கிடமில்லை. ஆனாலும், இந்த மலையைப்பற்றி வெவ்வேறு சமயங்களைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் ஒரு வித விசுவாசம் இருந்து வருகின்றது.
பௌத்தர்கள், இந்த மலையில் புத்த பெருமான் தடம் பதித்ததாக நம்புகின்றார்கள். அவ்வாறே முதல் மனிதர் ஆதம் நபி சுவர்க்கத்தில் தவறிழைத்ததன் காரணமாக அங்கிருந்து உலகிற்கு அனுப்பப்பட்ட போது பாவா ஆதம் மலையில் கால் பதித்ததாக முஸ்லிம்களில் சிலர் நம்புகின்றனர். அவ்வாறே கிறிஸ்தவர்களும் ஆதாம் என்ற இறைத்தூதர் இங்கு வந்திறங்கியதாகக் கூறுகின்றனர். அவ்வாறே இந்துக்களும் சிவ பெருமானைச் சம்பந்தப்படுத்தி இது பற்றிக்கூறி வருகின்றனர்.
அண்மையில் இரத்தினபுரிக்குச் சென்றிருந்த போது, அங்குள்ள சமன் தேவாலயம் என்ற வணக்கஸ்தலம் முற்றிலும் புனரமைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். நான் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அந்தப்பகுதிக்கு சென்றிருந்த போது, தூர்ந்து விடக்கூடிய நிலையில் காட்சியளித்த அந்த சமன் தேவாலயம் அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்கவின் 90 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் புனரமைக்கப்பட்டிருக்கின்றது.
எங்களுடைய அரசாங்கம் முன்னெப்போதையும் விட, கூடுதல் கரிசினை எடுத்து எல்லா சமயங்களுக்கும் உரிய வணக்கஸ்தலங்களை அபிவிருத்தி செய்து வருகின்றது. சிவனொளிபாத மலைக்குச் செல்லும் பக்தர்களின் தேவையைக் கருத்திற்கொண்டு இந்த யாத்திரைகள் ஓய்வெடுக்கும் விடுதியை நிர்மாணித்திருக்கின்றோம்.
எங்கள் நாட்டில் சமய நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய விதத்திலே ஒரு சாரார் குறுகிய கருத்து வேறுபாடுகளைத் தூண்டுகின்ற விதத்தில் இனவாதத்தை பரப்பி வருவது கவலைக்குரியது.
கடந்த ஆட்சிக்காலத்தில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மக்கள் மத்தியில் வேறுபாடுகளை விதைக்கும் அமைப்புக்கள் தோன்றி, தேவையற்ற அட்டகாசங்களில் ஈடுபட்டன. இவ்வாறான தீவிரவாதக் குழுக்கள் சகல சமயங்களைப் பின்பற்றுவோர் மத்தியிலும் செயற்படாமல் தடுப்பதற்கு சமயத்தலைவர்கள் மிகவும் பொறுப்புணர்ச்சியுடனும், கண்காணிப்புடனும் இருந்து அவர்களை நேர்வழிப்படுத்துவதில் கூடுதல் கவனஞ்செலுத்துவது மிகவும் அவசியமாகும்.
எல்லா சமயங்களை அனுஷ்டிப்பவர்கள் மத்தியிலும் தீவிரவாத சிந்தனைப் போக்குள்ளவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். சிறிய சம்பவங்களைக் காரணமாக வைத்து அசம்பாவிதங்கள் நடக்கின்றன. ஆன்மீகத்தில் நாங்கள் அதிகம் கவனஞ்செலுத்த வேண்டும். அத்துடன் சகிப்புத்தன்மையும் இன்றியமையாதது.
எங்கள் அமைச்சினூடாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை சகல மக்களும் பயன்படக்கூடிய விதத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.
இந்நிகழ்வில் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான எ.எ.விஜயதுங்க, இரத்தினபுரி மாவட்ட அரசாங்க அதிபர் மாலின் லொகுபொத்கம, அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஏ.சி.எம்.நபீல் ஆகியோர் உட்பட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages