About Me

header ads

நேற்றிரவு அக்கரைப்பற்றில் ஏன் அதாவுல்லாஹ்வின் "மைக்கை" பறித்தனர் ???

அதாவுல்லா நேற்றைய அக்கரைப்பற்று மார்க்கட் வர்த்தக சங்கத்தின் சுதந்திர தின கூட்டத்திற்கு வருவதாக இருக்கவில்லை. அவருடைய மகனுக்கு பதிலாக அவர் வந்தார். அவர் வருவது ஏற்பாட்டாளர்களில் அதிகம் பேருக்கு தெரியாது. அவர் வந்து ஊர்வலம் ஆரம்பித்து மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அருகில் வரும்போதே, தவம் வேறு சில சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்ற பின்னர் வந்து இணைந்து கொண்டார். 

நிகழ்வுகளில் தேசிய கொடியேற்றல், வாழ்வாதாரம் வழங்குதல், பாடல்கள், இன்னும் சில நிகழ்ச்சிகள் சுமூகமாக அரங்கேறின. பின்னர் மஹ்ரிப் தொழுகைக்கான அதான் ஒலித்ததும் கூட்டம் நிறுத்தப்பட்டு தொழுகைக்காக நேரம் வழங்கப்பட்டது. வழமை போல அதாவுல்லா தொழுகையிலிருந்து தப்பித்துக்கொள்ள அவ்விடத்தை விட்டு தனது வாகனத்தில் தப்பித்துக்கொண்டார்.

அவ்வாறு வாகனத்தில் ஏறும்போது தனக்கு உரை நிகழ்த்த நேரம் வேண்டுமென கேட்டுக்கொண்டார். உண்மையில் அரசியல்வாதிகள் யாருடைய உரைக்கும் இடமளிப்பதில்லை என்ற தீர்மானமே வர்த்தக சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்டிருந்தது. அதற்கு மாற்றமாகவே அதாவுல்லா உரையாற்ற நேரம் கேட்டார். அப்போது தவம் அங்கிருக்கவில்லை. தவம் தொழுகைக்காக சென்றிருந்தார். தொழுகை முடிந்து வந்ததும் தவம் வர்த்தக சங்கத்தினரை அனுகி " இதற்கு பிறகு உங்களுடைய மேடை நிகழ்ச்சிகள் மாத்திரம்தானே உள்ளன. எனவே நான் போகட்டுமா" என்று கேட்டார்.

அப்போது "இல்லை அதாவுல்லா உரையாற்ற நேரம் கேட்டுள்ளதால், உங்களுக்கும் நேரம் தரவேண்டுயுள்ளது. எனவே நீங்கள் இருக்கத்தான் வேண்டுமென" பதில் கிடைத்தது. "அப்படியாயின் நான் வீட்டிற்கு சென்று உடை மாற்றி வருகிறேன். என்னை சற்றுநேரம் விடுங்கள். நான் திரும்பி வருகிறேன்" எனக்கூறி சென்று மீண்டும் திரும்பி வந்துள்ளார். அப்போது அதாவுல்லா தவத்திற்கு முன்னர் பேச நேரம் கேட்டுள்ளதாக தவத்திற்கு கூறப்பட்டுள்ளது. பரவாயில்லை. "ஆனால் அவர் மூத்த அரசியல்வாதி என்பதால், எனக்கு பின்னர் பேசுவதே ஒழுங்கு முறையானது. இருப்பினும், அவர் விரும்பினால் பிரச்சினை இல்லை" எனக்கூறிய தவம் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்.

சில பாடல்கள் பாடப்பட்ட பின்னர், அதாவுல்லாவின் உரை அறிவிக்கப்பட்டு, அவர் பேச ஆரம்பித்திருக்கிறார். உரை ஆரம்பித்து 10 நிமிடங்களில், இது பொதுவான சுதந்திர தின கூட்டமேயன்றி அவரது பொதுக்கூட்டமல்ல என்பதை மறந்து, வழமை போல அவருடைய நான்கு தத்துவங்களை ஆரம்பித்தார். அதாவது, ரணில், நோர்வே, வட - கிழக்கு, ஹக்கீம். ரணிலையும் நோர்வையையும் பேசிவிட்டு, வட - கிழக்கை தொட்டு திடிரென சம்மந்தமில்லாமல் வட்டமடுவையும் மு.கா தலைவர் றஊப் ஹக்கீமையும் இழுக்க ஆரம்பித்த போதே பிரச்சினை ஆம்பித்தது. 

கூட்ட வளாகத்திலிருந்து சுமார் 30 மீட்டர் தூரத்திலிருந்து "வட்டமடுவை காடாக தாரை வார்த்துக்கொடுத்த நீ வட்டமடுவைப் பற்றி பேசக்கூடாது" என்ற பெரும் சத்தம் கூச்சலுடன் ஆரம்பமாகியது. அப்போது அதாவுல்லா சுதாரித்திருக்க வேண்டும். ஆனால், மீண்டும் தனது வழமையான பாணியில் இடக்கிமுடக்காக பேச ஆரம்பித்தார். பொது நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறோம் என்பதை மறந்து அதாவுல்லா பேசிக்கொண்டிருப்பது, அதே மேடையில் அதிதியாகக் கலந்துகொண்டிருந்த தவத்திற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதை அவருடைய உடல் அசைவுகளிலிருந்து அவதானிக்க முடிந்தது. ஆனாலும், அமைதியாக இருந்தார். அடுத்து இடம்பெறப்போகும் தனது உரையில் அதாவின் உரையில் வரும் விடயங்களுக்கு பதிலளிக்க காத்துக்கொண்டிருந்தாற் போல இருந்தார்.

இவ்வாறான சூழலில், அதாவுல்லா சுதந்திர தின நிகழ்வும் உரையும் என்ற தடத்திலிருந்து விலகி, முற்றுமுழுதாக தனது உழுத்துப்போன கதைகளையும், ஏச்சுக்களையும், மற்றவர்களை குறைகூறுவதையும் செய்துகொண்டிருந்தார். குறிப்பாக றஊப் ஹக்கீமிற்கு ஏசிக்கொண்டிருந்தார். அப்போது வர்த்தகர்களில் சிலர் குழம்பினர். உடனே அதாவுல்லாவின் பேச்சை நிறுத்த வேண்டுமென வேண்டினர். அதில் சிலர் நேரடியாக மேடைக்கே வந்துவிட்டனர். "இது நமது சங்கத்தின் சுதந்திர தினக் கொண்டாட்டமா? அல்லது தனிமனிதனின் அரசியல் மேடையா" எனக்கேட்டு சத்தமிட்டனர். மேடையில் உதைத்தனர். தளத்தில் காலால் தட்டி பெரும் சத்தம் எழுப்பினர். அப்போதும் அதாவுல்லா விடுவதாக இல்லை. 

அதன் பின்னர் அதாவுல்லா அடிமட்ட வார்த்தைகளைப் பயன்படுத்த அங்கிருந்த இளைஞர்கள் ஒன்று திரண்டு அவரது உரையை நிறுத்துமாறு கூறினர். 

அதில் தவத்தின் ஆதரவாளர்களும் இருந்தனர். இவ்வளவு சிறப்பான சுதந்திர தின கூட்டத்தில் இத்தனை மட்டமாக அரசியல் பேச உடல் கூசவில்லையா எனக்கேட்டனர். சத்தமிட்டு "கூ"  போட்டனர். அந்நேரம் அதாவுல்லாவிற்கு பின் புறத்திலிருந்து கல் வீச்சும் நடந்தது. இவ்வளவு இழுபறிக்குள்ளும் அதாவுல்லா உரையாற்ற முனைந்தார். ஆனால், இளைஞர்களும் பொதுமக்களும் அதற்கு இடமளிக்கவில்லை. 

இந்நிலையில் தவம் மேடையில் இருந்து கீழறங்க முனைந்த போது, அவரை வர்த்தகர்களில் சிலர் தடுத்து " நீங்கள் உரையாற்ற வேண்டும். அதாவுல்லா பேசிய விடயங்களுக்கு பதிலளிக்க வேண்டும். உங்களை நாங்கள் அழைத்து உரை தராமல் அனுப்ப முடியாது" என விடாப்பிடியாக நின்றனர். ஆனால், "இவ்வளவு குளப்பத்திற்குள் இனி உரை நிகழ்த்த முடியாது. என்னை இறங்கிச் செல்ல வழி விடுங்கள்" எனக்கூறி தவம் கீழே இறங்கிச் சென்றார். 

இறங்கிச்சென்ற தவம் திரும்ப மேடைக்கு ஏறி "உங்களது உரையால்தான் ஊரே குழம்பி உங்களுக்கு கல் எறியவும் கூச்சலிடவும் செய்கிறது. இது எதேர்ச்சையாக நிகழ்கிறது. திட்டமிட்டதல்ல. உங்களை தைரியமாக நெஞ்சு நிமிர்த்தி எதிர்த்து நிற்பவன் நான். நான் பின்னால் நின்று உங்களுக்கு குத்த மாட்டேன். கல்லால் எறியவும் மாட்டேன். எல்லாவற்றிற்கும் உங்கள் உரையே காரணம். நான் வருகிறேன்" என அதாவுல்லாவிடம் கூறி  இறங்கிச் சென்றார். 

அதற்குப் பிறகு எவ்வளவு முனைந்தும் அதாவுல்லாவால் பேச முடியவில்லை. மைக் பறிக்கப்பட்டது. ஒலிபெருக்கியின் வயர்கள் பிய்க்கப்பட்டன. கூட்ட மேடைக்கு முன் பெரும்திரளே கூடி "ஸலவாத்து" சொல்லத் தொடங்கினர். அதாவது, கூட்டத்தை பொதுமக்களே முடித்து வைத்தனர். அதாவுல்லா ஒன்றிற்கும் இயலாமல் பேச்சைத் தொடரவும் முடியாமல் இறங்கிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

Post a Comment

0 Comments