ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமைவாக இலங்கைக்கு பாரிய நிதி உதவி

போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு இலங்கைக்கு தேவையான தொழிநுட்ப உதவியை வழங்குவதற்கும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான திட்டங்களுக்குமென இலங்கையில் மூன்று முக்கிய திட்டங்களுக்காக 455 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இணக்கம் தெரிவித்துள்ளார்.
அரச முறை பயணமொன்றை மேற்கொண்டு பிலிப்பைன்ஸுக்கு விஜயம் செய்திருக்கும் ஜனாதிபதி, இன்று (17) முற்பகல் பிலிப்பைன்ஸ் மணிலா நகரிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்திற்கு விஜயம் செய்து அதன் தலைவர் தகஹிகோ நாகஓவை சந்தித்தார். 
இந்த சந்திப்பின்போதே ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இதற்கான இணக்கப்பாட்டை தெரிவித்தார்.
இந்த தொகையில் 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கான தூண்களைக்கொண்ட நெடுஞ்சாலை நிர்மாண திட்டத்திற்காக வழங்கப்படவுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய உப பிராந்தியத்திற்கான பொருளாதார உதவி வழங்கும் கொள்கை சட்டகத்தின் படி இந்த இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விஞ்ஞான, தொழிநுட்ப, மனித வள அபிவிருத்தி திட்டத்திற்காகவும் இலங்கைக்கு 145 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி திட்டங்களுக்கான சாத்திய வள ஆய்வுகளுக்கான தொழிநுட்ப உதவி வழங்கும் முன்மொழிவு முறைமைக்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த இணக்கப்பாடுகளுக்கான உடன்படிக்கைகளில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தகஹிகோ நாகஓ வும் கைச்சாத்திட்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,
இன்று இலங்கை முக்கியமான இரண்டு சவால்களுக்கு முகங்கொடுத்திருப்பதாக தெரிவித்தார். வறுமையை ஒழித்தல், போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தல் என்பனவே அந்த சவால்களாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
நாட்டுக்குள் சட்ட விரோத போதைப்பொருட்கள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கு சுங்கத் துறைக்கு தேவையான தொழிநுட்ப மற்றும் நிபுணத்துவ அறிவை வழங்குவதற்கான வழிவகைகள் குறித்து கவனம் செலுத்தவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தெரிவித்தார்.
இலங்கை இன்று வரட்சி மற்றும் வெள்ளம் ஆகிய இரண்டு வகையான பாதிப்புகளுக்கு உட்பட்டு வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அவற்றுக்கு முகங்கொடுப்பதற்காக முறையானதொரு நிகழ்ச்சித் திட்டம் அவசியம் என்றும் தெரிவித்தார். 
அந்த வகையில் காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கான உதவியை வழங்குவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இணக்கம் தெரிவித்தார்.
பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை வெற்றி கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி, இதன்போது தெளிவுபடுத்தியதுடன், நாட்டில் சிறந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அது அத்தியாவசியமாகும் எனவும் குறிப்பிட்டார். 
இதன்போது கருத்து தெரிவித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர், 
எதிர்பார்க்கப்பட்டுள்ள இலக்கினை முழுமையாக அடைய முடியாவிடினும் தற்போது இலங்கை சிறந்த பொருளாதார வளர்ச்சி வேகத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அவ்வேலைத்திட்டத்தின் மூலம் இயலுமாகியுள்ளது தெரிவித்தார்.
சக்தி வள முகாமைத்துவம், விவசாயம், உட்கட்டமைப்பு வசதிகள், காலநிலை மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு, வனப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தற்போது ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருவதுடன், அவ்வுதவிகளை தொடர்ச்சியாக இலங்கைக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தெரிவித்தார். 
அத்துடன் நீர்ப்பாசனம், பெருந்தெருக்கள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற துறைகளில் புதிய செயற்திட்டங்களுக்கு உதவியளிக்கவும் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான விவசாயக் கைத்தொழிற்துறையை மேம்படுத்துவதனூடாக நிதி முகாமைத்துவத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பினை இதன்போது சுட்டிக்காட்டிய ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் அதன்பொருட்டு விசேடமாக உதவியளிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், சுகாதாரத் துறையில் தற்போது இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தினை பாராட்டியதுடன், இலங்கையில் சுற்றுலாத் துறையினை மேம்படுத்துவதற்கான செயற்திட்டங்கள் தொடர்பாக ஆசிய அபிவிருத்தி வங்கி கவனம் செலுத்துவதாக தலைவர் தெரிவித்தார்.
சுற்றாடல் பாதுகாப்பிற்காக இலங்கையினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரை தெளிவுபடுத்திய ஜனாதிபதி, இலங்கையின் வன அடர்த்தியை 28 – 32 சதவீதம் வரை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும், அது தொடர்பாக சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் பாரிஸ் மாநாட்டின் போதும் குறிப்பிட்டதுடன், அவ்விடயம் தொடர்பாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரின் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையில் பயிர்களுக்கு விலங்குகளினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்கு உடனடி நிகழ்ச்சித் திட்டமொன்றின் தேவை பற்றியும் ஜனாதிபதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவருடன் கலந்துரையாடினார்.
அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக 1966 ஆம் ஆண்டு முதல் இலங்கையுடன் மிகவும் பலமான உறவுகளை கட்டியெழுப்பி ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கிவரும் உதவி குறித்து நன்றி தெரிவித்த ஜனாதிபதி, பிராந்தியத்தின் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்காகவும் ஆசிய அபவிருத்தி வங்கி வழங்கிவரும் ஒத்துழைப்புகளையும் பாராட்டினார்.
இங்கு கருத்து தெரிவித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தகஹிகோ நாகஓ,
தான் இலங்கைக்கு பல விஜயங்களை மேற்கொண்டிருப்பதை நினைவுகூர்ந்ததுடன், பயங்கரவாத சவாலை வெற்றி கொண்டதன் பின்னர் இதுவரையில் இலங்கை அடைந்துள்ள மாற்றங்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். 
இன்று ஆசியாவிலேயே சுற்றுலாத் துறைக்கு பொருத்தமான ஓரிரு நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தகஹிகோ நாகஓ தெரிவித்தார்

Post a Comment

0 Comments