About Me

header ads

இனவாதத்திற்க்கெதிராக ஒன்றிணைவோம், கிழக்கை காப்போம் ; அன்வர் நௌஷாத்


ஆதம் றிஸ்வின் 
கிழக்கு மாகாண ஆளுனராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டதை எதிர்த்து குறிப்பிட்ட சில தமிழினவாதக் குழுக்களினால் இன்று  11.01.2019ம் திகதி வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணம் முழுவதும் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இருந்தாலும், இது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் நிலைப்பாடு என்று நாம் ஒரு போதும் எடுத்துக்கொள்ள முடியாது. காலங்காலமாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபம் காணும் ஒரு சிலரின் நடவடிக்கைகளின் பின்னணியே இதுவாகும். இதனால் அதிகமாகப் பாதிக்கப்படப்போவது அப்பாவித்தமிழ் மக்களேயாகும்.
இனவாதச்செயற்பாடுகளினால் 30 வருட கால யுத்த இழப்புக்களைப் பாரியளவில் சந்தித்த உண்மையான தமிழ் சமூகம் ஒரு போதும் இன்னொரு சிறுபான்மை மீது திட்டமிட்ட அராஜகங்களைக் கட்டவிழ்த்து விட முனையாது. இது கடந்த காலங்களில் தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்காக ஒன்றாக வாழும் சகோதர இனத்தின் மீதான இனவாதச் செயற்பாடுகளைத் திணிக்கின்ற ஒரு சிலரின் முயற்சியேயன்றி வேறொன்றுமில்லை.
தமிழ்த்தரப்பின் அனைத்து நியாயமான போராட்டங்களுக்கும் முஸ்லிம் தரப்பு ஆதரவளித்து வந்துள்ளதுடன், பக்கபலமாக நின்றுள்ளதை இவ்விடத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். இந்த இனவாதச் செயற்பாட்டை வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு செயற்படும் கடைநிலையிலுள்ளவர்களே முன்னெடுக்கின்றார்கள் என்பது நாமனைவரும் அறிந்தவொன்றாகும்.
பெரும்பான்மையினத்தைச்சேர்ந்த ஒருவர் ஆளுனராக இருக்கும் போது, மௌனித்திருந்தவர்கள் ஒன்றாக வாழும் சகோதர இனத்திலிருந்து அதுவும் நமது கிழக்கு மண்ணிலிருந்து பரிச்சயமான ஒருவர் ஆளுனராக நியமிக்கப்படும் போது, அதனை வாய்ப்பாகக்கருதி இழந்த உரிமைகளை மீளப்பெறுவதற்கான சந்தர்ப்பமாகப் பார்க்காது, எதிர்த்து நின்று இனவாதச் செயற்பாடுகளை மேற்கொள்வது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாததொன்றாகும்.
அத்தோடு, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், இலங்கை அரசாங்கத்தின் ஒரு பொறுப்புள்ள உயர் நிருவாகப் பதவியான ஆளுனர் எனும் இடத்திற்கு இந்த மாகாணத்திலுள்ள அனைத்தினத்தவர்களுக்கும் பொதுவாகச் சேவையாற்ற பதவியமர்த்தப்பட்டுள்ள ஒரு உயர் அரசாங்க அதிகாரியே தவிர, குறிப்பிட்ட ஒரு குழுவிற்கோ ஒரு இனத்திற்கோ சேவையாற்ற பதவியிலமர்த்தப்பட்டவரல்ல என்பதனையும் அனைவரும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே, உண்மையான நிலைப்பாட்டை அனைத்தின மக்களும் தெளிவாகப் புரிந்து ஒற்றுமையுடன் வாழ முன்வர வேண்டும்.
ANWAR NAWSHARD
(President-CASDRO)

Post a Comment

0 Comments