About Me

header ads

கிழக்கின் ராஜாங்கங்கள்,ஆளுநர் இணைந்து மக்கள் தேவையை நிவர்த்திக்க வேண்டும்

-அன்வர் நௌஷாத் -

கிழக்கு மாகாணத்திற்கென முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. மக்களும் தமது மொழியில் பேசி தமது கருமங்களை ஆற்றக்கூடிய எமது தலைமைகளை இப்பதவிகளில் மத, பிரதேச, அரசியல் பாகுபாடுகளுக்கும் அப்பால் பெரும் வேட்கையோடு வரவேற்கின்றனர்.

இவை அனைத்தும் மக்களுக்கு அவர்களது தேவைகளை இலகுவில் நிறைவேற்றிக்கொள்வதற்காகவே வழங்கப்பட்டுள்ளன என்ற எதிர்பார்ப்பே மேலோங்கி நிற்கின்றது என்றாலும், அந்தந்த அரசியல் கட்சிகள் தமது பிரதிநிதிகளுக்கான ஆளுமையை, அல்லது பிடியை தக்கவைப்பதற்கான பிராயத்தம் என்றும் கொள்ள வேண்டியுள்ளது. 

கிழக்கை பொறுத்தவரை முஸ்லிம்கள், தமிழர், சிங்களவர் என்கின்ற ரீதியில் சனப்பரம்பல் உள்ளது. அம்பாறையில் முஸ்லீம் பெரும்பான்மை, மட்டக்களப்பில் தமிழர் பெரும்பான்மை, திருமலையில் மூவினமும் அண்ணளவாக சமநிலையில் உள்ளனர். 

இந்நிலையில், மூவின மக்களதும் அடிப்படைப் பிரச்சனைகள் ஆராயப்பட்டு அவற்றுக்கான தீர்வுகளை முன்னிலைப்படுத்தும் அதிகார உச்ச நிலை கிழக்கிற்கு கிடைத்த வரமாக கொள்ள வேண்டியுள்ளது. விசேடமாக கிழக்கின் ஆளுநர் பதவியும், நான்கு ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஒரு பிரதி அமைச்சர் (16.01.2019) என வரலாற்றில் இக்காலம் ஒரு அதிகார பொற்காலம்.

இவற்றில் கிழக்கிலுள்ள சிறுபான்மையினர் தமது மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதில் பலரும் ஆர்வமாக இருப்பதுவும், வெளிநாட்டு டயஸ் போராக்களும் , அவர்களின் பினாமிகளும் தமிழ் மக்கள் மீது திணிக்க முனைகின்ற அழுத்தங்களைத் தாண்டி அவர்களின் நிகழ்கால பிரச்சனைகளுக்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ள முன்வர வேண்டும். 

அத்தோடும், முஸ்லீம் சமூகம் தமது இனம் சார்ந்த தேவைகளையும், மறுக்கப்பட்டிருக்கின்ற உரிமைகளையும் கட்சிப் பாராமுகங்களுக்கு அப்பால் நின்று பெற்றுக் கொள்ள வேண்டிய முறைமையுள்ளதாக வகைப்படுத்த வேண்டும். அந்த வகையில் கிழக்கில் அடையாளப் படுத்தப்பட்டுள்ள மக்கள் தேவைகளான ; 
  • பொத்துவில் கல்வி வலயம் 
  • வட்டமடு காணி விவகாரம் 
  • பொத்துவில் - கிரன் கோமாரி காணிப்பிரச்சனை 
  • நுரைச்சோலை வீட்டுத்திட்டம் 
  • ராணுவம் அகப்படுத்தியுள்ள காணிகளை மீள வழங்கல் 
  • சாய்ந்தமருது பிரதேச சபை முன்மொழிவு 
  • வாழைச்சேனை பிரதேச சபை முன்மொழிவு 
  • ஓட்டமாவடி பிரதேச சபைக்கான இழந்த கி.சே.பிரிவுகளை மீளப்பெறல்
  • திருமலை மாவட்ட காணி விவகாரம் 
  • கிழக்கின் சனத்தொகைக்கேற்றவாறான கிராம சேவையாளர் பிரிவுகளை அதிகரித்தல் 

என்பன பொதுவான மற்றும் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் முன் வரிசைப்படுத்தப்படல் மிக இன்றியமையாதது. இவற்றில் ஆரம்ப முன்னெடுப்புக்கள் மற்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் படிமுறைகள் என்பன கவனத்திற் கொள்ளப்பட்டு "இவ்வதிகார ராஜாங்கங்கள் மற்றும் ஆளுநர் ஒன்றிணைந்து, கட்சித்தலைவர்களான கௌரவ. ரவூப் ஹக்கீம், ரா.சம்பந்தன், ரிஷாத் பதியுதீன் போன்றோரை  உள்ளடக்கி  பொதுவான செயற்குழு ஒன்றினை நியமிப்பதன் மூலமாக கிழக்கின் தேவைகளை நிவர்த்திக்க முயற்சிக்கலாம்". அவ்வாறு செயற்படுவதுதான் காலத்தின் எதிர்பார்ப்பும். 

அடுத்தடுத்த தலைமைப் பொறுப்புக்களை சுமக்கத் தயாராகும் இரண்டாம் நிலைத்த தலைமைகளுக்கான ஒரு சவாலாகவும் இது நோக்கத்தக்கது.

Post a Comment

0 Comments