வலுவான நிலையில் நியூசிலாந்துஇலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 311 ஓட்டத்துடன் 29 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது.
நியூஸிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி நியூஸிலாந்துடன் இரண்டு டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
இதில் முதலாவதாக இடம்பெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று வெலிங்டனில் ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தெடுப்பை மேற்கொள்ளத் தீர்மானித்தது.
அதற்கமைவாக முதலில் களமிறங்கி துடுப்பெடுத்தாட தீர்மானித்த இலங்கை அணி 90 ஓவர்களை எதிர்கொண்டு, அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 282 ஓட்டங்களை முதல் இன்னிங்ஸிக்காக பெற்றது.
இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்தியூஸ் 83 ஓட்டங்களையும், நிரோஷன் திக்வெல்ல 80 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 79 ஓட்டங்களையும், அதிகபடியாக பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் டிம் சவுதி 6 விக்கெட்டுக்களையும், நீல் வாக்னர் 2 விக்கெட்டுக்களையும், ட்ரென்ட் போல்ட் மற்றும் கொலின் டி கிராண்ட்ஹாம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த நியூஸிலாந்து அணி இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவின்போது 84 ஓவர்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 311 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இதன் மூலம் நியூஸிலாந்து அணி 29 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
நியூஸிலாந்து அணி சார்பாக டாம் லதாம் 121 ஓட்டத்தையும், அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 91 ஓட்டத்தையும், ரோஸ் டெய்லர் 50 ஓட்டத்தையும் பெற்றனர்.
நாளை போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமாகும்.

Post a Comment

0 Comments