About Me

header ads

அரசின் முக்கிய பங்காளியான தலைவர் ரவூப் ஹக்கீமை வாழ்த்துகின்றேன் ; மேயர் றக்கீப்


ஜனநாயகத்தையும் சட்ட ஆட்சியையும் நிலைநிறுத்துவதற்கான போராட்டத்தில் முக்கிய தூணாக செயற்பட்டு, பொறுப்பு வாய்ந்த அமைச்சராக பதவியேற்றுள்ள தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களை வாழ்த்துவதில் மகிழ்வுறுகிறேன்..!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நாட்டில் ஜனநாயகத்தையும் சட்ட ஆட்சியையும் நிலைநிறுத்துவதற்கான போராட்டத்தில் முக்கிய தூண்களில் ஒருவராக இருந்து செயற்பட்ட எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரான ரவூப் ஹக்கீம் அவர்கள் மீண்டும் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றிருப்பதையிட்டு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் மீண்டும் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் முதல்வர் றகீப் மேலும் தெரிவித்திருப்பதாவது;
கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி நல்லாட்சி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு, சட்டவிரோத ஆட்சியொன்று ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்த ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக சிறுபான்மைக் கட்சிகளின் எம்.பி.க்களை காவு கொள்வதற்கான முயற்சிகள் மைத்திரி- மஹிந்த கூட்டினால் அதிகார பலத்துடன் முன்னெடுக்கப்பட்ட வேளையில் எமது தலைமைத்துவத்தின் சாணக்கியமான செயற்பாடுகளினால் அவை முறியடிக்கப்பட்டிருந்ததை ஜனநாயகத்தை விரும்புகின்ற எல்லோரும் வியந்து பாராட்டியுள்ளமை எமது கட்சிக்கு மட்டுமல்லாமல் முஸ்லிம் சமூகத்திற்கே பெருமையான ஒரு விடயமாக பார்க்கப்படுகிறது.
அது மாத்திரமல்லாமல் இந்த ஜனநாயக மீள் எழுச்சிப் போராட்டத்தில் எமது தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் மாத்திரம் முன்னிலை வகிக்காமல் ஒதுங்கி நின்றிருந்தால் சட்டவிரோதமாக ஏற்படுத்தப்பட்ட மஹிந்த ஆட்சி நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை பலத்துடன் நீடித்து நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தலைவர் ஹக்கீம் அவர்களுக்கு அமைச்சுப் பதவியும் தனிப்பட்ட நலனுமே முக்கியம் என்றிருந்தால் மைத்திரி- மஹிந்த கூட்டாட்சிக்கு அவர் முண்டுகொடுக்க முற்பட்டிருப்பார். குறைந்தபட்சம் ஒதுங்கி நின்று மறைமுக ஆதரவையாவது வழங்கியிருக்கலாம். எமக்கு ஆதரவளிக்க முன்வந்தால் ரவூப் ஹக்கீமுக்கு என்ன விலை கொடுக்கவும் தயார் என்று மைத்திரி- மஹிந்த தரப்பில் கூறப்பட்டபோதே, சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, தனக்கு வேண்டியதை பெற்றுக்கொண்டு சென்றிருக்க முடியும்.
ஆனால் சமூகத்தினதும் கட்சியினதும் நலன் கருதி முந்திய காலங்களில் இரண்டு தடவைகள் அமைச்சுப் பதவிகளை தூக்கியெறிந்து சரித்திரம் படைத்த எமது தலைமைத்துவத்திற்கு அமைச்சு பதவி என்பது ஒரு பொருட்டான விடயமல்ல. அதனால் அரசியலமைப்புக்கு முரணாக குழிதோண்டிப் புதைக்கப்பட்ட ஜனநாயகத்தையும் சட்ட ஆட்சியையும் ஏற்படுத்துவதற்கான போராட்டத்தில் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் மிகவும் துணிச்சலுடன் 52 நாட்கள் ஓயாது முன்னிலை வகித்தார்.
இப்போராட்டத்தின் பயனாக தற்போது மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆட்சியில் எமது தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு, அவர் முன்னர் வகித்த அமைச்சுப் பொறுப்புகளுக்கு மேலதிகமாக நாட்டின் அதிமுக்கியமானதும் எமது சமூகத்திற்கு அவசியமானதுமான உயர்கல்வித் துறையும் சேர்த்து வழங்கப்பட்டிருப்பதானது அவரது தகுதிக்கும் திறமைக்கும் நேர்மைக்கும் கிடைத்த பரிசாகவே நோக்கப்படுகிறது.
இப்பொறுப்பு வாய்ந்த அமைச்சின் மூலம் எமது பிராந்திய மக்களும் சமூகமும் மாத்திரமல்லாமல் முழு நாடும் முன்னேற்றம் காணும் வகையில் செயற்பட இயலுமான ஆற்றல்களைக் கொண்டுள்ள தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களை எமது கல்முனை மாநகர மக்கள் சார்பாக வாழ்த்துவதில் பெருமிதமடைகின்றேன்.
மேலும், சமூகத்தின் அபிலாஷைகளையும் உரிமைகளையும் வெற்றி கொள்வதற்காக இத்தலைமைக்கு இன்னும் சக்தியையும் பலத்தையும் கொடுக்க வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
இவ்வாறு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments