கண்ணீர் விட்ட ஹமீத் அழ அன்சாரி - நெகிழ்ந்த தாய்பாகிஸ்தான் பெண்ணைப் பார்ப்பதற்காக அந்நாட்டுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த வழக்கில் கைதாகி, சிறையில் இருந்து விடுதலையான நிலையில் ஹமித் அன்சாரி சுஷ்மா ஸ்வராஜுடன் சந்தித்துப் பேசினார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ஹமித் நிஹல் அன்சாரி (33). இவர் சமூக வலைதளத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பழகி உள்ளார். அவரைப் பார்க்கும் ஆவலில் கடந்த 2012-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவர் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது பாகிஸ்தானின் போலி அடையாள அட்டை வைத்திருந்ததாகவும் உளவு பார்த்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் அன்சாரிக்கு 2015 டிசம்பர் 15-ம் தேதி ராணுவ நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து, அவர் பெஷாவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அன்சாரியின் சிறை தண்டனை கடந்த 15-ம் தேதியுடன் முடிந்தது. இதையடுத்து, அன்சாரி நேற்று (செவ்வாய்) சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
பின்னர் வாகா - அட்டாரி எல்லையில் அன்சாரியை இந்திய அதிகாரிகளிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதையடுத்து அன்சாரியும் அவரின் தாயும் டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜைச் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பின்போது சுஷ்மா ஸ்வராஜ், அன்சாரியின் முதுகில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார். மகனை 6 ஆண்டுகள் பிரிந்து வாடிய தாயைக் கட்டியணைத்து ஆறுதல் சொன்னார். இதைக் கண்ட அன்சாரி கண்ணீர் விட்டுக் கலங்கினார்.
சுஷ்மா ஸ்வராஜைச் சந்தித்தது தொடர்பாக அன்சாரியின் தாய் கூறும்போது, ''என்னுடைய தாய்நாடு சிறந்தது. சுஷ்மா உயர்வானவர். அவர் எடுத்துக்கொண்ட காரியத்தை சிறப்பாகச் செய்து முடிப்பவர்'' என்று நெகிழ்ந்தார்.

Post a Comment

0 Comments