About Me

header ads

மனம் திறந்தார் தவம் ; அதாவுல்லாவை விட்டும் ஏன் விலகினேன்

"அதாவுல்லாவின் அக்கரைப்பற்று அரசியலை அதாவுல்லா செய்யவில்லை. நானே முன்னெடுத்துச் சென்றேன். அவரின் அரசியல் எதிரிகள் உட்புக முடியாத வண்ணம் கோட்டையாக இருந்தேன். அம்பாரை மாவட்ட மத்திய குழுவின் தலைவராக அவர் இருந்தாலும் செயலாளராக நான் இருந்து (பேராளர் மாநாட்டினூடாக வழங்கப்பட்டிருந்தது) அம்பாரை மாவட்ட கரையோர அரசியலை முன்னெடுத்துச் சென்றேன்"

அவரது கட்சியின் தேசிய மாநாட்டை (அதில் மகிந்த கலந்து கொண்டார்) தலையில் போட்டு இழுத்துச்சென்று செய்து கொடுத்தேன். அக்கரைப்பற்று பஸ்நிலையம் அமைந்துள்ள இடத்தை மீட்க இரவோடிரவாக சுற்று வேலியிட்டு உசிரை பணயம் வைத்து களமிறங்கி, தமிழ் ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தல் மத்தியில் வழக்காடி வென்று கொடுத்தேன். அதற்கு பின்னர் அங்கு கட்டப்பட்ட கட்டிடத்திறப்பு விழாவில் என்னை அழைக்க மனமில்லாமல் போன வரலாறு வேறு கதை.
2008 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் இரு வாரங்கள் முகாமிட்டிருந்து மாவட்ட மாநாடு, மூதூர் மாநாடு, இளைஞர் மாநாடு பேன்றவற்றை கூட்டி ஒரு மாகாண சபை உறுப்பினரை பெறுவதில் பெரும்பங்காற்றினேன். நான் வெளியேறிய பின்னர் அந்த மாகாண சபை உறுப்பினர் என்னோடு சேர்ந்து தற்போது மு. காவில் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
வடமத்திய மாகாண சபை தேர்தலில் மூன்று வாரங்கள் அனுராதபுரத்தில் முகாமிட்டிருந்து அதற்கான பணிகளை மேற்கொண்டேன். அதில் காய்ச்சல் என் உசிரை புரட்டி எடுத்த போதும் பின்வாங்காமல் களத்தில் நின்றேன்.அவரது 2010 ஆண்டு பாராளுமன்ற தேர்தல், 2010 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல், 2008 ஆம் ஆண்டின் மாகாண சபை தேர்தல் போன்றவற்றை இரவு பகல் பாராமல் தலைமை கொடுத்து உழைத்து வெற்றியும் காண செய்தேன்.
அக்கரைப்பற்று பிரதேச சபை எல்லைகள் மீள்நிர்ணயம் செய்யப்படுவதிலும், மாநகர சபையாக பிரகடணப்படுத்தப்படுவதிலும், உணவு உறக்கமில்லாமல் உழைத்தேன். ஒரு இரவு சம்மாந்துறை மா.ச. உறுப்பினர் அமீர் அவர்களின் அலுவலக மேசை மீது நானும் இன்னும் இருவரும் தூங்கி, காலையில் சில வேலைகளை செய்து, அப்படியே உள்ளூராட்சி உதவி ஆணையாளரை சந்தித்து கொழும்புக்கு ஆவணங்களை அனுப்பி விட்டு வந்த வரலாறுகள் எனக்குண்டு.
கிழக்கு மாகாணம் நீதிமன்றத்தால் பிரிக்கப்பட்ட போது, அதனை முன்னிறுத்தி “மண்ணின் மரியாதை” விழா – பின்னர் அவரின் சேவைகளைப் பாராட்டி ” மழை மேகத்திற்கு மண்ணின் மரியாதை” விழா – ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்காகவும் பாராளுமன்ற வெற்றிக்காகவும் “ஜீஷா அரங்கு” விழா – பிள்ளையானை முதலமைச்சர் ஆக்கியதற்காக இன ஒற்றுமையை வலியுறுத்தி ” சாமாதான தூது” விழா – லைப்றரி கட்டிடம் கட்டியதற்காக “வளம்” விழா – மேலே கூறிய மூன்று தேர்தல்கள் – தேசிய மாநாடு போன்றவற்றிற்குமான எந்த செலவுகளையும் அவரிடம் விடாமல் நானே பார்த்துக்கொண்டேன். சிலர் அதற்கு உதவினர். இவை தவிர்த்து சிறிய சிறிய நூற்றுக்கணக்கான நிகழ்வுகளுக்கான செலவுகளை நான் இங்கு குறிப்பிடவில்லை.
இத்தருணத்தில் சில இடங்களில் தீவிரமாக செயற்பட வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. சில இடங்களில் கடுமையாக நடந்துகொள்ள நான் திணிக்கப்பட்டேன். சிலரை முடக்குமாறு எனக்கு அழுத்தம் தரப்பட்டது. சிலதை மனச்சாட்சியை களைந்துவிட்டு செய்யும் நிலைக்கு ஆளானேன். அப்போது நான் கற்ற கல்வியும் எனது நாகரிகமும் மறைந்து ஒருவித காடையத்தனம் நிறைந்த ஒருவனாக சமூகத்தில் பார்க்கப்பட்டேன். கடுமையானவனாக சித்தரிக்கப்பட்டேன்.
இவை என்னோடு போகட்டுமென்று விட்ட போதிலும், எனது குடும்பமும் எனது பிள்ளைகளும் அனுபவித்த துன்பங்களும் இடர்பாடுகளும் கொஞ்சமல்ல. 05 வயதுக்குட்பட்ட எனது மூத்த மகனுக்கு சுகமில்லாமல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நான் மூதூரில் இருந்து எல்லாவற்றையும் விட்டுவர முடியாத நிலை. எனது மகளுக்கு மூச்சு வந்து தவித்த போது நான் அனுராதபுரத்தில் தேர்தல் வேலைகளில் இருந்தேன். எனது தந்தை மரணப் படுக்கையில் வீழ்ந்திருந்த போது நான் பிறை எப்.எம் கட்டிட திறப்பு விழா வேலையாக இருந்தேன்.
இப்படி எத்தனையோ திருமணங்கள், எத்தனையோ சுகவீனம் உற்ற உறவுகள், எத்தனையோ மரண வீடுகள் என குடும்பத்தின் சுகதுக்கங்களில் எனனால் கலந்துகொள்ள முடியாத நிலையிலும் அதாவுல்லாவின் அரசியலை முன்னெடுத்துச் சென்றேன். அதற்கெல்லாம் ஒரு நியாயம் ” நமது ஊருக்கு எம்.பி வேண்டும்; இப்போதைக்கு இருக்கும் அதாவுல்லாவை பாதுகாக்க வேண்டும்” என்பதே. ஒரு தொண்டனாக தோழனாக நின்று பணி புரிவோம் என்பதே. மாறாக, நானும் தலைவனாக வேண்டும்; ஒரு கட்சிக்கு அக்கரைப்பற்றில் தலைமை கொடுக்க வேண்டுமென்ற எந்த எதிர்பார்ப்பும் என்னிடமிருக்கவில்லை.
ஆனால், என்னுடைய சுயகௌரவத்தையும் தன்மானத்தையும் எங்கும் எதிலும் நான் விட்டுக்கொடுப்பதில்லை. இவற்றிற்காக எதனையும் இழப்பதில் எனக்கு கவலையும் இருப்பதில்லை. இவற்றிற்காக எந்த சவாலுக்கு முகங்கொடுப்பதிலும் நான் பின்னிற்பதில்லை. இவற்றிற்கான விலை என் உயிர் என்றாலும் எனக்கு அதில் கவலையும் இல்லை.
இவ்வாறான சூழலில்தான், அக்கரைப்பற்று பிரதேச சபை – மாநகர சபையாக எனவும் – பிரதேச சபை எனவும் – இரண்டாக பிரிக்கப்பட்டு பிரகடணப்படுத்தப்பட்டது. அவ்வாறு பிரகடணப்படுத்திய ஊடக மாநாட்டின் இறுதியில் – தமிழ் மிரர் பத்திரிகையின் (இணையதளம்) பிரதம ஆசிரியர் றிப்தி அலி அவர்கள் – அதாவுல்லாவிடம் “நீங்கள் புதிதாக பிரகடணப்படுத்தியுள்ள மாநகர சபைக்கு உங்கள் மகனை மேயராக்க எண்ணியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இது பற்றி உங்கள் கருத்தென்ன ?” என்று கேட்கிறார். அதாவுல்லா அதற்கு பதில் கூறாமல் சிறிய சிரிப்புடன் மெல்ல நழுவிக்கொண்டார்.
இந்த விடயம் ஒன்றை மிகத்தெளிவாக வெளிப்படுத்தியது. அதாவது, அதாவுல்லா மகனை தேர்தல் களமிறக்கி மேயராக்க தீர்மானித்து விட்டார் – அதற்கு இனி நியாயம் கற்பிக்க முனைவார் என்பதை நான் தெளிவாக புரிந்து கொண்டேன். இந்நிலையில் அதிலிருந்து சில தினங்களின் பின்னர் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான ஒரு கூட்டம் அதாவுல்லாவின் தலைமையில் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அதாவுல்லாவின் ஊதுகுழல்கள் அவரது மகனை வேட்பாளராக களமிறக்குவதற்கான சங்கேத சம்பாஷனைகளை செய்தனர். அதனை விளங்கிக்கொள்ளக்கூடியவர்கள் விளங்கி இருப்பர். ஆனால், அன்று வேட்பாளர் தெரிவு இடப்பெறவில்லை.
கூட்டம் முடிந்த கையோடு அங்கு வந்திருந்த எக்கவுண்டன் முஸ்தபா அவர்கள் என்னை அதாவுல்லா அரங்கத்தின் வெளியே கிழக்குப்புறம் கூட்டிச் சென்று “அதாவுல்லா தனது மகனை தேர்தலில் களமிறக்கபோகிறார்; அப்படியானால் நீங்கள் தேர்தலில் நிற்க வேண்டாம்” எனக்கூறினார். அப்படி நான் தேர்தல் களமிறங்கினால் எனக்கும் அதாவுல்லாவிற்கும் பிரச்சினை வரும் எனக்கருதியே அவர் கூறினார். ஏலவே என்னைப் பற்றி மோசமான விமர்சனங்களை அதாவுல்லா திரைமறைவில் ஆரம்பித்துவிட்டதையும் அவர் அறிந்து வைத்திருந்தார்.
ஆனால் ” நான் தேர்தலில் வேட்பாளராவேன்; நான் தோற்பதோ வெல்வதோ அல்லாஹ்வும் மக்களும் தீர்மானிக்கட்டும்” என்று கூறினேன். ” அதாவுல்லா தனது மகனை மேயராக்குவதற்கு – இன்று என்னை ஓரங்கட்ட என் மீது விமர்சனங்களை முன்வைத்து – என்னை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தாமல் விட்டால் – நாளைக்கு நான் மாகாண சபை தேர்தலில் போட்யிட அவரிடம் சந்தர்ப்பம் கேட்டால் – மாநகர சபைக்கே இவரை நிறுத்த முடியாத போது நான் எப்படி மாகாண சபைக்கு நிறுத்துவது” எனக் கேட்பார். எனவே நான் தேர்தல் களமிறங்கத்தான் போகிறேன் எனக்கூறினேன். எனவே, நான் தோற்பதோ வெல்வதோ அல்லாஹ்வும் மக்களும் தீர்மானிக்கட்டும் என்று கூறினேன்.
பின்னர், வேட்பாளர்கள் தெரிவு ஒரு வாரமாக நடந்தது. வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இறுதியாக எல்லோரும் கையொப்பமிட்ட பின்னர் அதாவுல்லா தனது மகனை கையொப்பமிட வைத்திருந்தார். எல்லோருடைய பெயரும் வேட்பாளர் பட்டியலில் எழுதி நிரப்பப்பட்டிருந்த கையெழுத்தும், அதாவுல்லாவின் மகனின் பெயர் எழுதப்பட்டிருந்த கையெழுத்தும் வேறாக இருந்ததை கச்சேரியில் காணக்கூடியதாக இருந்தது. அவ்வளவு இ(ப)ரகசியம் காத்தார். சிறகுக்குள் மகனை சுமந்து பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.
எனக்கிருந்த பிரச்சினையெல்லாம் ஒன்றுதான். அதாவது, ஏன் என்னோடு ஒரு வார்த்தை தன் மகனை களமிறக்குவதைப் பற்றி பேசவில்லை என்பதுதான். அவரது மகனை களமிறக்கி மேயராக்க அவர் எண்ணினால் அதனை பேசிக்கதைத்து செய்திருக்க முடியும். தனக்கு விட்டுத் தருமாறு கேட்டிருக்க முடியும். அப்படி விட்டுக்கொடுப்பதற்கு பகரமாக எனக்கு எவ்வாறான ஏற்பாட்டினை செய்யலாம் என்பதை பேசி இருக்கலாம். ஒரு வார்த்தை கூட அது தொடர்பில் என்னோடு பேசவில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக அதாவுல்லா என்னோடு ஒரு வார்த்தை கூட இது பற்றி பேசவில்லை.
அது அப்படியே இருக்க, பிரச்சாரத்தில் மிக மிக சின்னத்தனமான விமர்சனங்களை அவர் இருக்கும் மேடைகளில் அவரின் ஊதுகுழல் வேட்பாளர்கள் என்மீது முன்வைத்தனர். அவற்றைத் தலைவனாக இருந்து தடுக்காமல் இரசித்துக்கொண்டிருந்தார். மேலே நான் சுட்டிக்காட்டிய அத்தனை எனது கஷ்டங்களும் , உழைப்புக்களும், அர்ப்பணிப்புக்களும் மகனை மேயராக்க வேண்டுமென்ற அவாவில் அவர் கண் மறைந்திருந்தன.
இவ்வாறு விமர்சனங்களையும் போலியான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து, டீன்ஸ் வீதிக்கு அருகில் நடந்த ஒரு கூட்டத்தில் ஒரு வேட்பாளர் பேசிக்கொண்டிருக்கும் போது, அதாவுல்லா மேடையில் அமர்ந்திருந்ததையும் பொருட்படுத்தாது எனது ஆதரவாளர்கள் மேடைக்கு ஏறி பிரச்சினைப்படுமளவு முற்றியது. அதன் பின்னர், அதாவுல்லாவே நேரடியாக என்னை மேடைகளில் விமர்சிக்க தொடங்கினார். அநியாயமான சின்னத்தனமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
நான் பொறுமையாக இருந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் எல்லை தாண்டியது. என் மீது அவர் கூறும் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க நான் பகிரங்கமாக சத்தியத்திற்கு அழைத்தேன். நான் அடுத்த நாள் பட்டின ஜும்ஆ பள்ளிவாயலில் காத்திருந்தேன். ஆனால் அதாவுல்லா வரவில்லை. நான் பள்ளியில் இருப்பதை தாவூத் அவர்களிடம் சொல்லி அனுப்பியும் அதாவுல்லா வரவில்லை. அன்றிரவு நடந்த கூட்டத்தில் மீண்டும் அதாவுல்லா எனக்கு ஏறினார். நான் வெறும் 500 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைவேன் என்றார். எனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பகிரங்கமாக சொன்னார். எனது இலக்கமான 05 நஞ்சு என்று சொன்னார்.
தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்த தினத்திற்கு அடுத்த தினம் பட்டினப்பள்ளியில் கூட்டம் கூட்டி எனது இலக்கமான 5 யை கையை விரித்துக்காட்டி ” எதற்கு வாக்களிக்கக்கூடாது என்று தெரியும்தானே? என்றும்; தனது மகனின் இலக்கமான 01 யை குறிக்க ஒரு விரலைக் காட்டி, எதற்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரியும்தானே? என்றும் கேட்டார். தேர்தலுக்கு முந்திய தினம், ஏலவே பெறப்பட்ட 6000 தொலைபேசி இலக்கங்களுக்கு எனக்கு வாக்களிக்க வேண்டாம் என எஸ்.எம்.எஸ் பண்ணினார்கள். நான் கட்சி மாறி விட்டேன் என்று கூறி துண்டுப்பிரசுரமடித்து வீடு வீடாக கொடுத்தனர்.
தேர்தல் தினத்தில் வாக்கெடுப்பு நிலையங்களை சுற்றி குழுக்களை நிறுத்தி எனது இலக்கத்திற்கு வாக்களிக்க வேண்டாம் என்று சொல்லப்பட்டது. எனக்கு வாக்கெண்ணும் நிலையத்தின் கட்டுப்பாட்டறைக்கு செல்ல அனுமதி அட்டை (Pass) தராமல் மறுத்தனர். வாக்கெண்ணும் போது, எனது வாக்குகள் தனது மகனை விட அதிகமாகிச் செல்வதை உணர்ந்து, வாக்கு திரள் அட்டவணையை (Summary sheet) சுமார் 03 மணித்தியாலங்கள் கையகப்படுத்தி (களவெடுத்து) என்னை 03 ஆம் இடத்திற்கு தள்ளினர். வாக்கு திரள் அட்டவணையை காணவில்லை என்று காது குத்தினர். நமது பாஷையில் சொல்வதாக இருந்தால் வாக்கு திரள் அட்டவணை என்பது ஒரு தொரட்டுப் பாய். அது எப்படிக் காணாமல் போக முடியும்.
இத்தனைக்கும் அதாவுல்லாவிற்கு நான் செய்த தப்பு / தவறு / குற்றம் என்ன? இன்னும் என்னிடம் பதிலே இல்லாமல் இந்தக் கேள்வி எஞ்சி இருக்கிறது. இத்தனைக்கும் பின் நான் அதாவுல்லாவோடு இருக்க வேண்டுமா இல்லையா? என்பதை நீங்கள் சொல்லுங்கள் .

Post a Comment

0 Comments