மக்களின் நலனுக்கு அமைச்சு தடையென்றால் ராஜினாமா; அமைச்சர் ஹரிஸ் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, December 24, 2018

மக்களின் நலனுக்கு அமைச்சு தடையென்றால் ராஜினாமா; அமைச்சர் ஹரிஸ்


(அகமட் எஸ். முகைடீன்)
முஸ்லிம், தமிழ் சமூகங்களுக்கு பாதகமான புதிய மாகாண சபைச்சட்ட அடிமை விலங்கைத் தகர்தெறிந்து பழைய விகிதாசார முறையினைக் கொண்டு வரும் தனது முயற்சிக்கு தடை ஏற்படுகின்ற போது, இந்த அமைச்சில் ஒரு நிமிடம் கூட இருக்காமல் நான் இராஜினாமாச் செய்வேன் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.
‘எழுச்சி பெற்று எழுவோம்’ எனும் தொனிப்பொருளில் கல்முனை முகைதீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் முன்பாக ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது இராஜாங்க அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இந்த பிராந்தியத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல் சர்ச்சையுடன் சம்பந்தப்பட்ட அமைச்சான மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கல்முனை பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்டிருப்பததனைத் தொடர்ந்து இவர் என்ன செய்யப்போகின்றார் என்ற பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் தோற்றம் பெற்றுள்ளன. இந்நிலையில், இவ்வமைச்சினூடாக சமூகம் சம்பந்தப்பட்ட இரண்டு சவால்களுக்கு நான் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இந்நாட்டின் தமிழ், முஸ்லிம் சமூகத்தின் தூக்குக் கயிறாக இருக்கின்ற புதிய மாகாண சபைச்சட்டத்தை இரத்துச்செய்வது மற்றும் ஆள்புல ரீதியாக கல்முனை மாநகரத்திற்கு ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினை என்பனவாகும்.
புதிய மாகாண சபைச்சட்ட அறிக்கை பாராளுமன்றத்திற்கு வந்த போது தலைவர் ரவூப் ஹக்கீம் மஹிந்த ராஜபக்ஷவின் வீடு சென்று அவருடைய உதவியையும் பெற்று மிகப்பெரிய பிரயத்தனம் மேற்கொண்டு மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் தோற்கடித்தோம். இருந்த போதிலும், அது இன்னும் சட்ட ரீதியாக இரத்துச் செய்யப்படவில்லை. இந்நிலையில், மீண்டும் பழைய மாகாண சபை விகிதாசார தேர்தல் சட்டத்தைக் கொண்டு வர வேண்டிய மிகப்பெரிய தார்மீகப் பொறுப்பில் நான் இருந்து கொண்டிருக்கின்றேன்.
இந்த விடயதானத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியில் முஸ்லிம், தமிழ் சமூகங்களுக்கு பாதகமான இந்த அடிமை விலங்கை தகர்த்தெறிய வேண்டியுள்ளது. அந்த வகையில், பழைய விகிதாசார முறையிலான மாகாண சபைத்தேர்தல் சடடத்தை மீண்டும் கொண்டு வர முடியுமென்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. அந்த முயற்சியில் தோல்வியுறும் பட்சத்தில் இந்த அமைச்சில் ஒரு நிமிடம் கூட நான் இருக்காமல் இராஜினாமாச்செய்வேன். இந்த நாட்டின் எந்த ஒரு முஸ்லிம் மகனுக்கும் பாதிப்பு வரக்கூடாதென்பதில் போர்க்குணமிக்க அரசியலைத்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் நாங்களும் செய்து வருகின்றோம்.
அதே போன்று தான் இந்த கல்முனை விவகாரம் தொடர்பிலும் நாம் செயற்படுவோம். எல்லோரும் இதய சுத்தியுடன் இவ்விடயத்தை நோக்க வேண்டும். கல்முனை நகரத்தை உருவாக்கியவர்கள் சாய்ந்தமருதில் பிறந்த எம்.எஸ் காரியப்பர் மற்றும் எம்.சி.அகமது ஆகியோர்களாகும். இவர்களுடைய காலத்தில் தான் கல்முனைக்கான பட்டின சபை உருவாக்கப்பட்டு, அதற்கான எல்லைகள் போடப்பட்டன. பட்டின சபைக்குள் கரையோர மாவட்டம் உருவாகத்தேவையான அத்தனை மாகாண மற்றும் மாவட்ட தலைமைக் காரியாலயங்களையும் கொண்டு வந்து கல்முனை மத்தியில் நகரொன்றை உருவாக்கி தமிழ் முஸ்லிம் ஒற்றுமையைக் கட்டியெழுப்பினார்கள். அவர்களுக்கு எங்களால் துரோகம் செய்யவும் முடியாது. அவர்களுடைய ஆள்புல எல்லைக்கு குந்தகம் ஏற்படுத்தவும் முடியாதென்பதில் மிகத்தெளிவாக இருக்கின்றோம்.
ஆனால், சாய்ந்தமருது மக்களுக்கு எவ்வித பிரச்சினையுமில்லை என்றோ, அவர்களின் கோரிக்கை விதன்டாவாதமானதென்றோ கல்முனை மக்கள் கூற முடியாது. எவ்வாறு இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் தேசிய இனப்பிரச்சினை இருக்கின்றதோ, அதே போன்று சாய்ந்தமருது மக்களுக்கு அந்த ஊரின் அடையாளம், தனித்துவம் சம்பந்தமான பிரச்சினை இருக்கின்றதென்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
1889ஆம் ஆண்டு கரைவாகு தெற்கு கிராம சபை என்று ஒரு தனித்துவமான அரசியல் அந்தஸ்தில் சாய்ந்தமருது மக்கள் இருந்தார்கள். துரதிஸ்டவசமாக 1987ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா கொண்டு வந்த சட்டத்தின் காரணமாக கரைவாகு மேற்கு, கரைவாகு வடக்கு மற்றும் பட்டின சபை என்பவற்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்டது. இதனால் அந்த மக்கள் அவர்களுடைய உரிமைகளை இழந்தார்கள். தலைவர் அஸ்ரபின் காலத்தில் பிரதேச சபை தொடர்பில் பேசக்கூடாதென்று கூறி பிரதேச செயலகத்தை வழங்கினார். இருந்த போதிலும், பின்பு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் மீண்டும் பிரதேச சபைக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்சினையை நாங்கள் பேசித்தீர்க்க வேண்டும். கல்முனை முஸ்லிம்களுடைய அபிலாசைகளுக்கு குந்தகமாகவும் இப்பிரதேசத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு துரோகமாகவும் தீர்மானங்களை எடுக்க முடியாதென்பதிலும் தெளிவாக இருக்கின்றோம். அதே நேரம், தமிழ் மக்களுடைய வகிபாகத்தைக் கொடுத்து சாய்ந்தமருது மக்களுடைய அபிலாசையை தீர்க்கக்கூடிய தீர்வுகள் இருந்து கொண்டிருக்கின்றன. சாய்ந்தமருதுக்கான அடையாளத்தை அடைவதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன. அதைத்தீர்மானிக்க வேண்டியவர்கள் சாய்ந்தமருதிலுள்ள கண்ணியமிக்க உலமாக்களும் பள்ளிவாசல் தலைவர்களும் அங்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற மாநகர சபை உறுப்பினர்களுமாகும். எங்களுடைய கட்சியின் கதவுகள் திறந்திருக்கின்றன. ஆனால், சமூகப்பார்வையில் இவ்விடயம் பேசப்பட்டு தீர்க்கப்பட வேண்டும் என்பது தான் என்னுடைய அவாவாகும் என இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages