About Me

header ads

ஆழமான சாக்கடைக்குள் இலங்கை அரசியல் ; இந்துஸ்தான் டைம்ஸ்


- நன்றி - த இந்துஸ்தான் டைம்ஸ் -

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த அக்டோபர் பிற்பகுதியில் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு அலரின் இடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நியமித்ததை அடுத்து மூண்ட அரசியல் நெருக்கடியில் இலங்கை பல திருப்பங்களையும் நெளிவு சுழிவுகளையும் கண்டுவிட்டது.
விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கவேண்டும் என்று கோரும் தீர்மானம் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.ஆனால், பாராளுமன்றத்தில் போதுமான ஆதரவு இல்லாதபோதிலும் கூட ராஜபக்ச பதவியை இறுகப்பற்றிப் பிடித்ததுக்கொண்டேயிருக்கிறார். சபைக்குள் பெரும்பான்மைப் பலம் இல்லாத ராஜபக்சவும் அவரது நேசக் கட்சிகளும் பாராளுமன்றத்தைப் பகிஷ்கரித்துவருகின்றார்கள்.
அதேவேளை ஜனாதிபதி சிறிசேன பிரதமர் பதவியை  விக்கிரமசிங்கவுக்கு  மீண்டும் ஒருபோதும் கொடுக்கப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறார்.வியாழக்கிழமை இலங்கை உச்சநீதிமன்றம் பாராளுமன்றத்தை கடந்த மாத ஆரம்பத்தில் கலைத்து புதிய தேர்தலுக்கு உத்தரவிட்ட சிறிசேனவின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதன் விளைவாக அவரைப் பதவி நீக்குவதற்காக அரசியல் குற்றச்சாட்டுப் பிரேரணை கொண்டுவரப்படவும் சாத்தியப்பாடு இருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப்போவதாக சிறிசேன ஏற்கெனவே அறிவித்திருந்தார்.இலங்கை இன்று வீழ்ந்திருக்கும் அரசியல் சகதிக்குள் இருந்து மீண்டுவருவதற்கு இருக்கக்கூடிய தர்க்கரீதியான ஒரே மார்க்கமும் இதுவே என்று சிலர் நம்புகிறார்கள்.
இந்தியாவின் நெருக்கமான அயலில் கேந்திரமுக்கியத்துவமுடைய அமைவிடத்தில் இருக்கும் இலங்கையில் புதிய தேர்தலை நடத்துவதே உருப்படியான தீர்வுக்கு ஒரே வழி என்று வேறு சிலர் நினைக்கிறார்கள். அடுத்த நிதியாண்டுக்கான செலவினங்களுக்கான பட்ஜெட் அங்கீகரிக்கப்படாவிட்டால் ஜனவர் முதலாம் திகதியில் இருந்து அரசாங்கச் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடையும் ஆபத்து இருப்பதாக அஞ்சப்படுகிறது.கால்நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக நீடித்த கொடிய உள்நாட்டுப் போரின் பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்ற ஒரு நேரத்தில் இந்த அரசியல் நெருக்கடி மூண்டிருக்கின்றது.
இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் தமிழ்நாட்டில் கணிசமான தாக்கத்தை ஏற்படுதத்தக்கூடியவர்களாக இருக்கும் இலங்கைத் தமிழ்ச் சிறுபான்மையினத்தவர்கள் உட்டப சமுதாயத்தின் சகல பிரிவினரினதும் நலன்களைக் கவனத்தில் எடுக்கக்கூடியதான தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்த ஒரு தருணத்தில் அரசியல் சகதிக்குள் அந்த நாடு விழுந்திருக்கிறது.
ஜனாதிபதி சிறிசேனவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் வேறுபாடுகள் ஏற்படுவதற்கு காரணமாக இருந்த பிரச்சினைகளில் இந்தியா சம்பந்தப்பட்ட சர்ச்சையும் ஒன்று.கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத் திட்டத்தை புதுடில்லிக்கு வழங்குவதற்கு விக்கிரமசிங்க விரும்பினார்.அதை சிறிசேன ஏற்றுக்கொள்ளவில்லை.
உள்நாட்டுப்போரினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்களின் புனர்வாழ்வும் இந்தியாவின் முன்னுரிமைக்குரிய விவகாரங்களில் ஒன்றாக இருந்துவருகிறது.இவ்வருட தொடக்கத்தில் மாலைதீவில் மூண்ட அரசியல் நெருக்கடியின்போது நேரடியாக தலையிடுவதைத் தவிர்த்து நிலைவரங்களைப் பொறுத்திருந்து அவதானிக்கும் அணுகுமுறையை இந்தியா கடைப்பிடித்தது.
ஜனாதிபதி அப்துல்லா யாமீனின் எதேச்சாதிகார ஆட்சிக்கு எதிராக நெருக்குதல்களைப் பிரயோகிப்பதில் உலகின் ஏனைய வல்லரசுகளுடன் சேர்ந்து செயற்பட்ட இந்தியா அதிலிருந்து பெற்றிருக்கும் பெறுமதியான படிப்பினையை இலங்கை அரசியல் நெருக்கடியிலும் பிரயோகிக்கின்றது போலத் தெரிகிறது.ஆனால், இந்த நெருக்கடிக்கு  தீர்வொன்று கிட்டும்வரை பொறுத்திருந்து பார்ப்பதாக இருந்தால் அது ஒப்பீட்டளவில் ஒரு நீண்டகாலக் காத்திருப்பாக இருக்கக்கூடும்.

Post a Comment

0 Comments