ஓக்டொபர் சூழ்ச்சியே காரணம் ; மங்கள குற்றச்சாட்டு

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஒக்டோபர் 26 ஆம் திகதி சூழ்ச்சியே காரணம். இப்போது நாம் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்காது  இருந்திருந்தால் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து நாடு பாரிய நெருக்கடியை சந்தித்திருக்கும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். 
இதேவேளை, சகல தொகுதிகளுக்கும்  இன்று முதல் 300 மில்லியன் ரூபா அபிவிருத்தி நிதியை ஒதுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் சபையில் குறிப்பிட்டார். 
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21-12-2018) அரசாங்கம் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கையை முன்வைத்தது. நிதி அமைச்சர் இந்த கணக்கறிக்கையை முன்வைத்து உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டார். 
அவர் மேலும் கூறுகையில்,
கடந்த 54 நாட்களாக  முழு நாடும் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேர்ந்தது.  மீண்டும் எமது ஆட்சியில் வழமையான ஆரோக்கியமான பொருளாதார நகர்வுகளை முன்னெடுக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளோம். 
கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி கருப்பு வெள்ளிக்கிழமை எமது அரசாங்கத்தை சூழ்ச்சியின் மூலமாக வீழ்த்தி  54 நாட்கள் இந்த நாட்டினை சட்ட பூர்வமான  அரசாங்கம், சட்ட பூர்வமான  அமைச்சரவை, சட்டபூர்வமான  பிரதமர் , சட்ட பூர்வமான  நிதி அமைச்சி இருக்கவில்லை. 
கடந்த ஒன்றரை மாதங்கள் நெருக்கடியான நிலைமைகளில் எம்மால் பயணிக்க நேர்ந்தது. குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்ட மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் சட்ட பூர்வமற்ற அரசாங்கம் என்பதை பாராளுமன்றம் இரண்டு தடவைகள் நிறுபித்தது, நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றினை வழங்கி அரசாங்கம் சட்டவிரோதமானது என்பதை உறுதிப்படுத்தியது.

Post a Comment

0 Comments