Header Ads

Breaking News

உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு ; இனி என்ன நடக்கும் ?

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் இலங்கை ஜனாதிபதியின்  உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், நாடாளுமன்றம் நாளை கூட்டப்படும் என்று ஐதேக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, நாளை 14ஆம் நாள், நாடாளுமன்றத்தைக் கூட்டும் வர்த்தமானி  அறிவிப்பை இலங்கை ஜனாதிபதி வெளியிட்டிருந்தார்.
அதற்குப் பின்னரே, நாடாளுமன்றக் கலைப்பு வர்த்தமானி அறிவிப்பு அவரால் வெளியிடப்பட்டது. இந்த வர்த்தமானி  அறிவிப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருப்பதால், முன்னைய வர்த்தமானி  அறிவிப்புக்கு அமைய நாடாளுமன்றம் நாளை கூட்டப்பட வேண்டும்.
நாளை திட்டமிட்டபடி நாடாளுமன்றம் கூடும் என்று ஐ.தே.க வட்டாரங்கள் தெரிவித்துள்ள போதும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை.
சபாநாயகர் விரைவில் நாடாளுமன்றத்தைக் கூட்டும் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு ஐதேக தலைவர்கள் ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர, ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன உள்ளிட்ட பலரும் வரவேற்றுள்ளனர்.
இது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வரலாற்று வெற்றி என்று ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வாதிகாரத்தின் பிடியில் இருந்து ஜனநாயகம் காப்பாற்றப்பட்டிருப்பதாகவும், நீதித்துறை சுதந்திரத்தை நிலைநாட்டிய நீதிபதிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், மங்கள சமரவீர கூறியுள்ளார்.

No comments