Comments System

header ads

பொதுப் போக்குவரத்து பணி முடக்கம்


கிழக்கு மாகாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கமைவாக இலங்கை போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று சாலை ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட 10 ஆயிரம் ரூபா அடிப்படைச்சம்பள அதிகரிப்பு மற்றும் தமது சேவைக்கால சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல சம்பள முரண்பாடுகள் நீக்கப்பட்ட தங்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளம் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்ட பேதிலும் இதுவரை தங்களுக்கு அச்சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை என தெரிவித்தே இவர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் சம்பள உயர்வை உடன் அமுல்படுத்து, போராடுவோம் போராடுவோம் சம்பள அதிகரிப்பு வரை போராடுவோம் தொடர்ச்சியான போராட்டத்தை நடாத்த நாங்கள் தயார், ஏமாற்றாதே ஏமாற்றாதே, போன்ற வாசகங்கள் அடங்கிய  சுலோக அட்டைகளை கையில் ஏந்தியவாறு போக்குவரத்து சாலையின் வெளிப்புற கதவினை பூட்டி வைத்து ஊழியர்கள தங்களது போராட்டதை மேற்கொண்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமது தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இலங்கை போக்குவரத்து சபை பொதுமுகாமையாளருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது சம்பள அதிகரிப்பை செப்டம்பர் மாதம் முதல் வழங்குவதாக உறுதியளித்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஆனாலும் நேற்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபை பொதுமுகாமையாளர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் பிரகாரம் அதிகரிக்கப்படாத பழைய சம்பள முறையில் சம்பளத்தை வழங்குமாறு பணித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதனால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்குரிய உரிய தீர்வு வழங்கப்படவில்லையாயின் தமது போராட்டம் தொடரும் எனவும் குறிப்பிட்டனர்.
இந்நிலையில் அக்கரைப்பற்று மத்திய பஸ்தரிப்பிடத்தில் இருந்து தனியார் பஸ் சேவை மட்டும் இடம்பெறுவதையும் இதனால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதையும் இங்கு அவதானிக்க  முடிந்தது.

Post a Comment

0 Comments