Header Ads

Breaking News

5 ம் திகதி ஆட்சியமைக்கிறது ஐக்கிய தேசிய முன்னணி ; பரபரப்பு பேச்சுவார்த்தை முடிவு


“பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலம் இல்லை என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். மஹிந்தவைப் பிரதமராக நியமிக்கும்போது அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தாதமை தவறு என்றும் உணர்கின்றேன். எதிர்வரும் 5ஆம் திகதி மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது பெயர் கூறி அல்லது இலத்திரனியல் வாக்கெடுப்பை நடத்தி அதில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்கும் தரப்பிடம் ஆட்சியை ஒப்படைக்க நான் தயார்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் உறுதிபடத் தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு நேற்றிரவு 7 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடந்தது.
இந்தச் சந்திப்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் 13 எம்.பிக்கள் பங்கேற்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மட்டும் இதில் பங்கேற்கவில்லை. சுமார் ஒரு மணி நேரம் இந்தச் சந்திப்பு நீடித்தது.
இந்தச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,
“ஆட்சி மாற்றத்தின் பின் கடந்த 14ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் புதிய அரசுக்கு எதிராக நாடாளுமன்றில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சில தீர்மானங்கள் குரல் பதிவு வாக்கெடுப்பு மூலமும், சில தீர்மானங்கள் இலத்திரனியில் வாக்கெடுப்பு மூலமும் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனினும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு குரல் பதிவு வாக்கெடுப்பு மூலம்தான் நடந்துள்ளது. ஒரு நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் இந்த விடயத்தில் குரல் பதிவு வாக்கெடுப்பு முறையை நான் எற்றுக்கொள்ளமாட்டேன். எனவே, எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது பெயர் கூறி அல்லது இலத்திரனியில் முறையில் வாக்கெடுப்பு நடத்தவேண்டும். அப்போது பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்கும் தரப்பிடம் அரசை ஒப்படைக்க நான் தயாராக உள்ளேன். பெரும்பான்மை பெறும் தரப்பு பிரதமருக்கான பெயரை முன்மொழிகின்றபோது அதனை நான் ஏற்றுக் கொள்வேன்.
இந்த வாக்கெடுப்பின்போது பெரும்பான்மைப் பலத்தை ஐக்கிய தேசிய முன்னணி பெற்றால் – அந்தத் தரப்பின் பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டால் அதனை ஏற்க நான் தயாராக இல்லை. ஐக்கிய தேசிய முன்னணியில் வேறு பெயர்களைப் பிரதமர் பதவிக்குப் பரிந்துரைத்தால் அதனை நான் ஏற்பேன்.
ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் கடந்த 3 வருடங்கள் இருந்தபோதும் அவருடன் சேர்ந்து பணியாற்றியுள்ளேன். ஆனால், அவர் என்னை மதிக்கவில்லை. அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும், ஊழல் மோசடி விடயங்களிலும் அவர் தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுத்தார். இதனால்தான் அவரைப் பிரதமர் பதவியில் இருந்து நான் அகற்றினேன். இந்தநிலையில் மீண்டும் அவரைப் பிரதமர் பதவியில் நான் எவ்வாறு அமர்த்துவது?” – என்றார்.
இதற்குப் பதிலளித்த கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்றக் குழுவினர்,
“ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்துவதில்லை என்று நீங்கள் எடுத்திருக்கும் தீர்மானத்தை நாம் ஏற்றுக்கொள்ளவே மாட்டோம். ஏனெனில் உங்களைக் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தியது மட்டுமன்றி உங்கள் வெற்றிக்கு அயராது பாடுபட்டவர்களில் பெரும் பங்கு வகிப்பவர்கள் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் என்பதை நீங்கள் மறந்திடக்கூடாது. இந்நிலையில், கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி இந்த இரு தரப்புக்கும் நீங்கள் எந்தவித அறிவித்தலும் விடுக்காமல் – நேரில் கலந்துரையாடாமல் நாட்டின் அரசமைப்பை மீறி சட்டவிரோதமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தீர்கள்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் உங்களை எதிர்த்து நின்று போட்டியிட்டுப் படுதோல்வி அடைந்தவரைப் புதிய பிரதமராக நாம் எவ்வாறு ஏற்பது?
மஹிந்த ராஜபக்‌ஷவைத் தோற்கடிக்கவேண்டும் என்பதற்காகவே தமிழ் மக்கள் உட்பட நாட்டில் உள்ள பெரும்பன்மையான மக்கள் உங்களுக்கு வாக்களித்து உங்களை ஜனாதிபதியாக்கினார்கள். இதனை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
புதிய பிரதமர் மஹிந்த தலைமையிலான அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இதுவரை 5 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மஹிந்த மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது மீண்டும் வாக்கெடுப்பு நடத்த நாம் தயாராக உள்ளோம். உங்கள் வேண்டுகோளின் பிரகாரம் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பை பெயர் கூறி அல்லது இலத்திரனியல் முறையில் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஐக்கிய தேசிய முன்னணியும், ஜே.வி.பியும் தயாராகவுள்ளன. இதன்போது ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெற நாம் வாக்களிப்போம். இதனைக் கூட்டமைப்பினராகிய நாம் எழுத்து மூலம் உங்களுக்கு அறிவித்துள்ளோம். மஹிந்த மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேறி ஐக்கிய தேசிய முன்னணி பெரும்பான்மையை நிரூபிக்கும் பட்சத்தில் அந்த முன்னணி பிரதமர் பதவிக்கு முன்மொழிகின்றவரையும் ஆதரிக்க நாம் தயாராகவுள்ளோம்.
எனவே, ஐக்கிய தேசிய முன்னணி பிரதமர் பதவிக்கு முன்மொழிகின்றவரை நீங்கள் பிரதமராக நியமிக்கவேண்டும்” – என்றனர்.
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, டிசம்பர் 5ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான பிரேரணையை பெயர் குறிப்பிட்டு அல்லது இலத்திரனியல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றுமாறும் அதன் பின்னர் தான் முடிவெடுப்பதாகவுக் கூறினார்.
இதேவேளை, இந்தச் சந்திப்பு முடிந்த பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியையும் ஜனாதிபதி சந்தித்துப் பேசினார்.
“ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு முன்னேற்றமானதாக இருந்தது. எனினும், முடிவுகள் எடுக்கப்படவில்லை. இந்தச் சந்திப்பின் தொடர்ச்சியாக நாளை ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதியை மீளவும் சந்திப்போம்” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கும் இடையே நேற்றிரவு 9 மணிக்குச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது. சந்திப்பின் நிறைவில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அகிலவிராஜ் காரியவசம் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

No comments