பெரும் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபின் அந்தக் கடைசி ஆறு நாட்கள் - கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸடீன் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

STAY WITH US

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, September 16, 2018

பெரும் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபின் அந்தக் கடைசி ஆறு நாட்கள் - கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸடீன்


கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸடீன்
பெருந் தலைவரது ஊடக இணைப்பதிகாரி
செப்டம்பர் 11 திங்கட்கிழமை மதிய நேரம் ஒலுவில் துறைமுக சுற்றுலா விடுதி வழமைக்கு மாறாக மிகவும் கலகலப்பாகக் காணப்படுகின்றது.
உள்ளுர் வி.ஐ.பி.களும் ,மு.காவின் அமைப்பாளர்கள் ,தொண்டர்கள் எனப் பலரும் அங்குமிங்குமாகக் குழுமி நிற்கின்றனர்.
தலைவருடன் கொழும்பு செல்லும் ஆயத்ததுடன் அங்கு சென்ற நான் ஸலாம் கூறியவனாகத் தலைவரின் அறைக்குள் நுழைகின்றேன்.
மீரா இஸ்ஸடீன் சாப்பிட்டயளா? ஓம் சேர்
அக்கரைப்பற்றிலிருந்து விறால் மீன் கறியுடன் சாப்பாடு கொண்டு வந்தவர் தலைவரிடம் சாப்பிட்டியலா சேர்?
சாப்பிட்டன்.
கறி எப்படி நல்லமா சேர்?
நல்லம்!
தலைவர் ஒலுவில் மண்ணில் இறுதியாகச் சாப்பிட்ட பகல் போசனம் இது.
சற்று நேரத்தின் பின்னர் ஹாபீஸ் நசீர் அஹமட் தனது கையில் இருந்த கட்டுக் காசைத் தலைவரிடம் ஒப்படைக்கிறார்.அதைப் பெற்றுக் கொண்ட தலைவர் கட்சிக்காக மேடைகளில் பேசும் முக்கியஸ்தர் சிலருக்கு அக்கட்டில் இருந்து பகர்ந்தளிக்கின்றார்.
வீடியோ கெஸட்டின் டப்பிங் செலான கொடுமதி ரூபா 47 ஆயிரத்தை என்னிடம் தருகின்றார். இதனைத் தொடர்ந்து இன்னும் வேறு யாருக்காவது நான் கடன் தர வேண்டுமா எனத் தலைவர் கேட்க
தலைவரின் வலக் கரமாகத் திகழும் மசூர் நிகழ்வொன்றின் போது மாணவி ஒருவருக்கு தங்க மாலை அன்பளிப்பு செய்வதற்காக வாங்கிய மாலைக்குரிய காசு எனக்குத் தர வேண்டும் எனக் கூற அதனையும் தலைவர் கொடுத்து விடுகின்றார்.

கடன் கொடுக்கும் படலம் முடிந்து விட்டது.
இப்போது தலைவர் அம்பாரைக்குச் செல்வதற்காக சேட் ஒன்றை அணிகின்றார் அது அளவாக இல்லை.காருக்குள் இருக்கும் சேட் பெட்டிகளைக் கொண்டு வரச் சொல்கின்றார். இரண்டு மூன்று சேட்கள் அவருக்கு அளவாக இருக்கவில்லை. அளவில்லாத எடுத்த சேட்களை வேறு நபர்களுக்கு போடக் கொடுக்கிறார்.குறிப்பாக எங்களோடு கொழும்புக்கு வரவிருந்த இளைஞர் ஒருவருக்கும் அணியக் கொடுக்கிறார்.
வாகனத் தொடரணி ஒலுவிலிலிருந்து அம்பாரைக்கு புறப்படுகின்றது.எங்களில் சிலர் தலைவரின் அம்பாரை வீட்டுக்குச் செல்ல தலைவர் அவசர விடயமாக சிங்கள தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்று விட்டார். தலைவரோடு கொழும்பு செல்பவர்களை விமான நிலையத்துக்குச் செல்லுமாறு சற்றுநேரத்தில் தலைவரிடமிருந்து தகவல் கிடைத்தது. நாங்கள் எல்லோரும் விமான நிலையம் சென்றோம்.இந்தப் பயணத்தின் போது தலைருடன் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ,தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர், கதிர்காமத் தம்பி , நான் உட்பட இன்னும் சிலரும் கொழும்பு வந்து சேர்ந்தோம். தலைவரின் வீட்டிற்குள் நுழையும் போதே அங்கே தயா விஜேசேகரவும் (அமைச்சரின் இணைப்புச் செயலாளர்) ,அஸீத பெரேரா பா.உறுப்பினரும் நின்று கொண்டிருந்தனர்.
தயா மீரா இஸ்ஸடீன் கேட்கின்ற பொருட்கள் அனைத்தையும் உடனடியாக வாங்கிக் கொடுங்கள் | என ஆங்கிலத்தில் அவரிடம் கூறி விட்டு தலைவர் வீட்டு மேல் மாடிக்கு சென்று விட்டார்.
செவ்வாய் மாலை தலைவரைச் சந்திக்கும் போது அவர் , நான் நாளை காலை (புதன்) அம்பாரையில் நடைபெறுகின்ற ஒரு கூட்டத்திற்கு தனியாகச் சென்று உடன் திரும்பி விடுவேன் | என்று கூறினார்
மீண்டும் வியாழன் தலைவரின் வீட்டுக்குச் சென்ற போது அங்கே எனது ஊடக நண்பர்களான மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் நிஹ்மதுல்லா,றபாயூடீன் ஆகிய இருவரையும் காண முடிந்தது.
அவர்கள் என்னைக் கண்டதும் திடீர்ப் பயணமாக தலைவருடன் கொழும்புக்கு வந்து விட்டோம் என்றார்கள்.அன்றிரவு நடந்த சம்பவம் ஒன்றையும் என்னிடம் கூறினார்கள்.
மட்டு மாவட்டத்தில் முக்கியமான முஸ்லிம் கிராமம் ஒன்றைச் சேர்ந்த போராளி ஒருவர் தனது வீட்டு திருமணம் தொடர்பாக தலைவரிடம் கூறிய சில நிமிடங்களில் தலைவர் தனது மனைவி,மகனையும் மற்றும் அங்கு நின்ற எல்லோரையும் அழைத்து தங்ளால் முடிந்ததை குறித்த நபருக்கு அன்பளிப்பாக வழங்குமாறு கூற நாங்கள் உட்பட எல்லோரும் கையிலிருந்ததை அன்பளிப்புச் செய்து விட்டோம்.என்று சந்தோசமாகக் கூறினார்கள்.அக்குறித்த நபருக்கு சுமார் இரண்டரை இலட்சம் பணம் சேர்ந்துவிட்டதாம்.
அன்று பின்னேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட இன்னும் ஓரிரு தமிழ் அரசியல்வாதிகள் தலைவரின் வீட்டில் பிரசன்னமகி இருந்தனர்.
அன்று மாலைப் பொழுதில் தலைவருடன்; சேர்ந்து நாங்கள் எல்லோரும் படம் பிடித்துக் கொண்டோம். தலைவரிடம் நான் கேட்டேன் சம்பந்தன் ஐயாவுடன் நீங்கள் ஒரு படம் எடுத்தால் எப்படி எனக் கேட்டேன். அதற்கு தலைவர் ஐயாவிடம் கேட்டுப் பாருங்கள் என்றார். இதை ஐயாவிடம் கூறிய போது பிரச்சினைகள் வரும் எனக் கூறி முதலில் மறுத்து விட்டார். அப்போது நான் கூறினேன். இது ஊடகங்களுக்காக அல்ல தனிப்பட்ட நட்புக்காக என்றேன். சம்மதித்து தலைவருடன் படம் எடுத்துக் கொண்டார்.
அன்று இரவு வேளையில் தலைவர் என்ன நினைத்தாரோ தெரியாது தனது வீட்டில் இருந்த அனைத்துப் பணியாளர்களுடனும் சேர்ந்து படம் எடுத்துக் கொண்டார்.அன்றிரவு அவரது வீடு சனம் நிறைந்து கானிவேல் போல் இருந்தது.
நான் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது வீட்டின் ஒரு பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஏ.எல்.எம்.நயீம் (ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீமின் சகோதரர்) என்னருகே வந்து தலைவர் அவருடைய சகலன் மீலாத் கீரனிடம் உங்களுக்கு கொடுக்கச் சொல்லி பார்சல் ஒன்றைக் கொடுத்து இருப்பதாகவும் அதனை வாங்கிக் கொள்ளுமாறும் என்னிடம் கூறினார்.
நான் மீலாத் கீரனைச் சந்தித்து பார்சல் தொடர்பாகக் கேட்ட போது,அவர் அவருடைய மகளிடம் கார் சாவியைக் கொடுத்து திறந்து உள்ளே இருக்கும் பார்சலை என்னிடம் கொடுக்குமாறு கூறினார்.
அதனைப் பெற்றுக் கொண்ட நான் திறந்து பார்த்த போது கடந்த சில நாட்களுக்கு முன்னர் உம்றாவிற்கு போய்வந்த இஹ்ராம் துணி அதனுள்ளே இருந்தது.
தலைவரின் வீட்டிலிருந்து நான் வெளியேற முற்பட்ட போது பிரமுகர்களுடன்; பேசிக் கொண்டிருந்த தலைவர் சைகை மூலம் என்னை அழைத்துக் கிடைத்தா? என்று கேட்டார்.
நான் ஆம் என்றேன்.
இந்றிரவு தலைவர் சத்திர சிகிச்சை செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பொத்துவில் முதல்வர் மர்ஹூம் எம்.ஐ.உதுமாலெப்பை அவர்களையும் நோய்வாய்பட்டு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபரையும் பார்க்கச் சென்றிருந்தார்.பொலிஸ் மா அதிபரை பார்க்கச் செல்வதற்கு தலைவருக்கு ஒரு தேவையும் இருந்தது. அது என்னவெனில் அம்பாரை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிறைன் அமுனுகம அவர்களின் பிரச்சினை ஒன்று தொடர்பாகப் பேசுவதற்கும் சென்றிருந்தார்.
வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையை முடித்துக் கொண்டு தலைவரின் வீட்டுக்கு வழமை போல் பகல் சாப்பாட்டுக்கு வந்திருந்தேன்.என்னைப் போல் பலரும் அங்கு வந்திருந்தனர்.இச்சாப்பாட்டுப் பந்தி கடந்த ஒரு வார காலமாக தலைவரின் வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் இருப்பார்கள்.
ஜூம்ஆ முடிந்து வந்த தலைவர் என்னைக் கண்டு எங்களது ஆட்களை சகனில் சாப்பிடச் சொல்லுங்கள்.மற்ற சமூகத்தவர்களுக்கு தனித்தனியே பீங்கானில் உணவை ; வழங்கச் சொல்லுங்கள் என்றார். நான் உரியவரிடம் தகவலை எத்தி வைத்தேன்.
பின் தம்மைச் சந்திக்க வருபவர்களை மாடிக்கு வருமாறு கூறிவிட்டு மேலே சென்றுவிட்டார்.;; பிறகு வந்த பொது மக்கள் மேலே செல்லத் தொடங்கினர்.
இந்த வேளையில் வெளியில் சென்று வீட்டுக்கு வந்த தலைவரின் மனைவி ஏன் இவர்கள் எல்லாம் மேலே செல்கிறார்கள் என்று என்னிடம் கேட்டார்.தலைவர் அனுப்பச் சொன்னார் என நான் கூறினேன்.
நேரம் கடந்து கொண்டிருந்தது. வந்தவர்களில் பலர் சென்று கொண்டிருந்தனர். அம்பாரைக்குச் செல்லவிருந்தவர்கள் வந்து கொண்டிருந்தனர். பி.ப 04.00 மணிக்கு இரத்மலானையிலிருந்து விமானம் புறப்பட இருந்தது.அன்று செல்லவிருந்த அக்கரைப்பற்று முன்னாள் பிரதேச செயலாளர் எம்.ஏ.மஜீட்,சகோதரர் ஆகிர்,அட்டாளைச் சேனை பல நோக்குக் .சங்க தலைவர் மற்றும் பொது முகாமையாளர்,நிஹ்மத்துல்லாஹ்,றபியூடீன்,கதிர்காமத் தம்பி எனப் பலரும் இரத்மலானை விமான நிலையத்தக்குச் பயணமாகினர்.
இந்த வேளை மூன்று மணி அளவில் தலைவர் ரொயிடர் சேவை திரு.வரூன் மற்றும் ஊடகவியலாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். நான்கு மணியைத் தாண்டியும் கூட்டம் முடியவில்லை.நான் சைகை மூலம் தலைவரது பயணத்தை ஞாபகமூட்டினேன்.அவர் தனது கையை அசைத்து சற்றுப் பொறுக்குமாறு கூறினார்.சற்று நேரத்தின் பின் இரத்மலானையில் இருப்பவர்களை பொலிஸ் மைதானத்துக்கு வருமாறு பணிப்பு விடுக்குமாறு கூறினார்.
சுமார் 05 மணியளவில் பொலிஸ் மைதானத்திலிருந்து ஹெலிகொப்டர் மூலம் அம்பாரை வருவதற்கு பயண ஒழுங்குகள் ஏற்பாடாகி இருந்தது.இம்மைதானம் தலைவரின் வீட்டுக்கு அண்மையில் உள்ளது. ஐந்தரை மணியளவில் இந்தப் பயணமும் இரத்தாகியதால் பொலிஸ் மைதானத்தில் இருந்தவர்கள் தலைவரது வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.
பயணத்தில் ஆட்கள் அலைக்கழிக்கப்பட்டது தலைவருக்கு கவலை போலும் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த அவரது டீஆறு காருக்கு முன்னால் வந்து வழமை போல் என்னிடம் பேப்பரும் பேனாவும் கேட்டார். நானும் கொடுத்தேன்.
வழமையாக விமானத்தில் தலைவருடன் செல்பவர்களது பெயர்களைக் குறித்துக் கொள்வது பாதுகாப்பு உத்தியோகத்தர்தான். ஆனால் வழமைக்கு மாறாக நாளை என்னுடன் பயணிப்பவர்கள் யார் யார் எனக் கேட்டு தானே குறித்துக் கொண்டார்.எதிரே நின்றவர்களில் என்னை விட்டு விட்டார்.
ஊடகவியலாளர்களுக்கு வழங்க தலைவர் வாங்கித் தந்த பொருட்களை விமானத்தில் எடுத்துச் செல்ல முடியாததனால் (15 பேர் பயணிக்கும் விமானம் ) அவரின் அனுமதியுடன் ஏற்கனவே வாகனம் ஒன்று தயார் படுத்தி வைத்திருந்தேன்.
நான் அறிந்த வரை அந்த வேனை தேர்தல் கடமைகளுக்காக கதிர்காமத் தம்பிக்கு வழங்க ஏற்பாடாகி இருந்தது எனவும் நினைக்கின்றேன்.இந்த வேன் பயணத்தில் தற்போதைய மன்சூர் எம்.பியும் இன்னும் சிலரும் என்னுடன் இணைந்து கொண்டனர்.
ஆட்களின் பதிவு முடிந்ததன் பின்னர் தலைவர் முஸம்மில் ஹாஜியாருடன் காரில் வெளியேறிச் சென்று விட்டார். இந்த வேளை சித்திக் ஹாஜியார் (பளிள்வாசல் தலைவர்) தலைவரைச் சந்திக்க வந்தார்.தலைவர் வெளியேறிவிட்டார் என்பதனை அறிந்து அவரும் திரும்பி விட்டார்.தலைவர் வெளியேறிச் செல்லும் போது பச்சைக் கலர் பட்டுச் சாரனும் ஓரேன்ஜ் கலர் சேட்டும் அணிந்திருந்தார்.இதுதான் நான் அவரை இறுதியாகக் கண்ட சந்தர்ப்பம்.
தலைவர் சனிக்கிழமை காலை வரப்பத்தான்சேனையில் மக்கள் சந்திப்பொன்றையும் அதனைத் தொடர்ந்து ஒலுவில் அல்-ஹம்றா வித்தியாலயத்தில் நடைபெறவிருந்த நிகழ்வொன்றிலும் கலந்து கொள்ளவிருந்தார். என்னை வரப்பத்தான் சேனைக்கு வருமாறு அழைத்திருந்தார். வேன் பயணம் சிரமமாக இருக்கும் என்பதனால் ஒலுவிலுக்கு நான் வருவதாகக் கூறியிருந்தேன்.
நண்பர் மன்சூரை அவரது வீட்டில் இறக்கிவிட்டு நான் ஊர்வந்து சேர்ந்தேன். ஓரிரு மணித்தியாலங்களில் எனது சக ஊடக நண்பன் இக்பால் சேருடன் ஒலுவிலுக்கு சென்றிருந்தோம்.அன்றைய பத்திரிகைகளைப் படித்துக் கொண்டிருந்தேன். அங்கிருந்தவர்கள் மத்தியில் சலசலப்பாக இருந்தது.சற்றுநேரத்தின் பின்னர் நண்பர்இக்பால் என்னிடம் வந்து தலைவர் வந்த ஹெலிகொப்டர் மிஸ்ஸிங் என சிரச எப்.எம்மில் செய்தி ஒலிபரப்பப்பட்டதாகக் கூறினார். உடனடியாக நானும் அவரும் வந்த வாகனத்தில் ஊருக்குத் திரும்பினோம். அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பணியாளர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் தொலைபேசி அழைப்பொன்றை எடுக்க வேண்டும் எனக்கேட்டேன் அவரும் அனுமதித்தார்.கொழும்பில் தெரிந்தவர்களுக்கு அழைப்பு எடுத்தேன். எவருடனுத் தொடர்பு கொள்ள முடியவில்லை.இறுதியாக தயா விஜேசேகரவுடன் தொடர்பு கொண்ட போது தொடர்பு கிடைத்தது.சம்பவம் தொடர்பாகக் கேட்ட போது அவர் பொடி கரதரவுனா |எனக் கூறினார். அதிலிருந்து நான் விளங்கிக் கெண்டேன்.இன்னாலிலாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்|.
இதனை அடுத்து முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் வீட்டுக்குச் சென்றேன். கொழும்பிலிருந்து அவரும் வாகனத்தில் வந்திருந்தார்.அழுது கொண்டிருந்தார்.சில நிமிடங்களின் பின்னர் மீண்டும் நாங்கள் கொழும்புக்கு பயணமானோம்.எங்களுடன் அவருடைய மச்சினனும் தற்போது எனது சம்பந்தியுமான இஸ்மாயில் (சின்னத்தம்பி காக்கா) வந்திருந்தார்.தலைவரது இல்லத்தை நாங்கள் அடையும் போது சிறு மழை பொழிந்து கொண்டிருந்தது. தலைவரது ஜனாஸா வெளியே எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. மக்களின் அழுகுரலோடு வானமும் அழுது கொண்டிருந்தது.ஜாவத்தை மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறைவா! எங்கள் தலைவரை பொருந்திக் கொள்வாயாக! அவரோடு பயணித்த மூஃமின்களையும் மன்னிதது நல்லருள் பாலிப்பாயாக! இவர்களுக்கு சுவனத்தை அளிப்பாயாக! நீ நாடியவர்களுக்கும் நல்லருள்பாலிப்பாயாக! ஆமீன்.
உயிரைப் பணயம் வைத்து வீடுவாசல்களை நாசகாரர்களின் தீ நாக்கிற்கு தீனியாக்கிவிட்டு கொழும்புக்குத் தப்பியோடி சகோதரர் எஸ்.எம்.அபூபக்கரின் 1000.00 ரூபா அன்பளிப்புடன் கட்சிப் பணிகளை தனது மூச்சாக்கி ,செய்தித்தாள்களை படுக்கை விரிப்பாக்கி; கொண்ட தலைவரினதும் அவரோடு இணைந்திருந்த உயிர்த் தோழர்களினதும் தியாகத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி அவரது மறைவுக்குப் பின் எந்த இடத்தில் நின்றதோ அந்தப் புள்ளியிலிருந்து ஒரு நூல் கூட அசைய முடியாத நிலையில் தாருஸ்ஸலாத்தை அதிர வைத்த துப்பாக்கி வேட்டுக்களும் அதனோடு பிளவுபட்ட கட்சியும் பதவி மோகத்தால் வருடாவருடம் கூட்டப்படுகின்ற முனாபிக்குகளின் நயவஞ்சகத்தனத்தால் தோன்றிய பூறூட்டஸ்களின் கூராயுதங்கள் போராளிகளின் இதயங்களைக் கிழித்து இரத்தத்தைக் குடித்து தலைக்கேறிய போதையில் தம்மைப் பாதுகாப்பதில் மாத்திரமே குறி வைத்து செயற்படுகின்றனர்.
இன்ஷா அல்லாஹ் தலைவரின் அடுத்த நினைவு தினத்தன்று சதிகாரர்களை இறைவன் கிளர்ந்தெழும் மக்கள் சமுத்திரத்தில் மூழ்கடிப்பான்.உயிரோடு இருப்பவர்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.
தலைவரது நினைவுகள் தொடரும்....

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here