Header Ads

Breaking News

நாட்டின் உறுதியான ஆட்சியின் பக்கமே நாம் ; ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

 நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குள் ஸ்தீரமற்ற ஆட்சி உருவாகுமாயின் அது இனவாத அமைப்புக்களுக்கு வாய்ப்பாக அமைவதோடு, நாட்டில் இனவாத செயற்பாடுகள் அதிகரிப்பதற்கு காரணமாகவும் அமையும். எனவே, ஸ்தீரமற்ற ஆட்சி ஏற்பட இடமளிக்கக் கூடாது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு காத்தான்குடி நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தமது பணிகளை உத்தியோகபூர்வமாக இன்று திங்கட்கிழமை காத்தான்குடி நகர சபையில் ஆரம்பித்தனர். இந்நிழக்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:- 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முகம்கொடுத்த முதலாவது உள்ளுராட்சி மன்றத் தேர்தல் இதுவாகும். இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் போட்டியிட்ட சகல சபைகளிலும் ஒரு உறுப்பினரையாவது வென்றுள்ளோம். ஒரு சபையை முழுமையாக கைப்பற்றியுள்ளதோடு ஆறு சபைகளில் தீர்மானமிக்க சக்தியாகவும் மாறியுள்ளோம். 

உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் தமது செயற்பாடுகளை நேர்மையாகவும் - சிறப்பாகவும் முன்னெடுப்பதன் மூலம் எதிர்வரும் மாகாண சபை, ஜனாதிபதி தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதிகமான வாக்குகளைப் பெற முடியும். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானமிக்க சக்தியாக உள்ள சபைகளில் எமக்கு தவிசாளர், உபதவிசாளர் என அதிகாரங்களை வழங்கும் கட்சிகளோடு கூட்டிணையவே நாங்கள் தீர்மானித்தோம். 

அந்த வகையில் எமக்கு அதிகாரங்களை வழங்குகின்ற சபைகளுக்கு நாங்கள் அதிகமான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவோம். அபிவிருத்திப் பணிகளை நாங்கள் நேரடியாகவே முன்னெடுப்போம். அதன் ஊடாக அந்த சபைகள் காத்திரமாக இயங்குவதற்கான சூழ்நிலைகளை நாங்கள் உருவாக்குவோம். 
உள்ளுராட்சி சபைகள் இயங்குவதாயின் அவற்றுக்கு நிதி தேவைப்படுகின்றன. அந்த நிதிகளை வழங்கக் கூடிய பலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தின் கீழ் உள்ள மாகாண மற்றும் மத்திய அரசுகளுக்கு உள்ளது. 

கடந்த தேர்தல் காலங்களில் தெற்கைப் போலவே வடகிழக்கிலும் இனவாதம் பேசி, இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி அரசியலில் வெற்றி பெறுவதற்கு எல்லோரும் முயற்சி செய்தனர். ஆனால், தேர்தலுக்கு பிறகு நாங்கள் எல்லோரும் ஒற்றுமையோடு, இனவாத சிந்தனைகளை மறந்து செயலாற்ற வேண்டும். 

புதிய உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்து தேசிய ஆடை அணிந்த பின்னர் அவர்களுக்கு சற்று தலைக்கனம் வர ஆரம்பிக்கும். ‘மந்திரி’ என்ற அந்தஸ்த்து வந்தவுடன் தமது செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படும். சாதாரண நபராக இருக்கும் போது இருந்த சில சில தீய பழக்க வழக்கங்களிலேயே அந்த மாற்றம் ஏற்பட வேண்டும். இல்லையெனில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் கட்சியின் பெயரையும், கட்சித் தலைவர் ஜனாதிபதியையும், என்னையையும் தொடர்பு படுத்தியே விமர்சனங்கள் முன்வைக்கப்படும். நீங்கள் ஏதாவது தவறு செய்தால் அது கட்சிக்கே அவப்பெயரை ஏற்படுத்தும். கட்சிக்கு அது பெரிதும் பாதிப்பாக அமையும். 

எனவே, புதிய உறுப்பினர்கள் தமது செயற்பாடுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சாதாரண ஒருவராக இருக்கும் போது சிறு சிறு விடயங்களில் கவனயீனமாக இருந்திருக்கலாம். ஆனால், உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின் தனது உடை, நடை, பாவனை, பேச்சுக்கள் என சகலவற்றிலும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். 

குறிப்பாக தொலைபேசி உரையாடல்களில் மிகவும் நிதானமாக இருக்க வேண்டும். நாங்கள் பேசும்போது அதனை ஒலிப்பதிவு செய்வார்கள். எம்மை கோவப்படுத்தும் வகையில் சிலர் பேசுவார்கள் நீங்கள் அதற்கு கோவப்பட்டு விட்டால் அதனை ஒலிப்பதிவு செய்து வெளியிட்டு விடுவார்கள். இவ்வாறான பிரச்சினைகளை வெளியில் கூற முடியாது. நாங்கள் தொலைபேசியில் கதைத்தாலும் பிரச்சினை, கதைக்காவிட்டாலும் பிரச்சினை, அழைப்பை துண்டித்தாலும் பிரச்சினை, அழைப்பை இணைத்தாலும் பிரச்சினை இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளின் போது மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். 

எனவே, நீங்கள் பேசும் போது அதனை ஒலிப்பதிவு செய்கிறார்கள் என்ற எண்ணத்தில் இருக்க வேண்டும். நீங்கள் தவறுதலாக பேசும் ஒரு விடயம் இறுதியில் கட்சிக்கே அவப்பெயரை ஏற்படுத்திவிடும்.  

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. ‘நல்லாட்சி அரசில் பொருளாதாரம் முன்னேற்றமடையவில்லை, நாடு அபிவிருத்தியடையவில்லை. அரசு தனது இலக்கை அடையவில்லை’ என்ற செய்தியை கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது பொது மக்கள் அரசுக்கு வழங்கியுள்ளனர். அதனாலேயே நாங்கள் எதிர்பார்த்த வெற்றியை எம்மால் அடையமுடியவில்லை. 

எனவே, மக்கள் எதிர்பார்க்கின்ற பொருளாதார முன்னேற்றம், அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு எமக்குள்ளது. இவ்வாறான நிலையில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா ? என்பது கட்சியே தீர்மானிக்க வேண்டும். 

இருப்பினும், நாட்டில் ஸ்தீரமற்ற ஆட்சி ஏற்படுவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்ற இனவாத செயற்பாடுகள் அதிகரிப்பதற்கு அது வாய்ப்பாக அமையும். நாட்டில் ஸ்தீரமற்ற ஆட்சி ஏற்படும் பட்சத்தில் பௌத இனவாதிகளுக்கு தமது செயற்பாடுகளை இலகுவாக முன்னெடுப்பதற்கு இலகுவாக அமைந்துவிடும். 
எனவே, ஸ்தீரமான ஆட்சியும் இருக்க வேண்டும். அதேநேரம் பொருளாதாரம் பாதுகாக்கும் வகையில் அரசியல் நிர்வாகம் இயங்க வேண்டிய தேவையும் உள்ளது. இவ்வாறான நிலையில் நல்லாட்சி அரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேற வேண்டிய தேவை ஏற்படுமாயின் அது குறித்தும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது – என்றார்

No comments