Header Ads

Breaking News

முகம் சுளிக்க வைக்கும் தவிசாளர் மோகம் ; ஒட்டமாவாடியில் மு.கா ஆட்சியமைக்குமா ?


- ஹைதர் அலி -
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் போட்டி

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போதையற்ற சபையை உருவாக்கப் போகின்றோம்... ஊழலற்ற சபையை உருவாக்கப் போகின்றோம்... என்றெல்லாம் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கி வெற்றிபெற்ற அநேகமானவர்கள் இன்று தவிசாளர் பதவியினை பெற்றுக்கொள்வதற்கு பல பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரேயொரு தவிசாளர் பதவியினை நீங்கள் அனைவரும் பெற்றுக்கொள்வதற்காக உங்களுக்குள் மோதிக்கொள்வதால் இதில் குளிர்காயப் போவது எதிர் அணியினர் என்பதனை தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரும் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். தெரிவு செய்யப்பட்டுள்ள நீங்கள் அனைவரும் படித்த, பண்பாடான, எம்சமூகத்தின் மீது கரிசனை கொண்டவர்கள் நாங்கள் சொல்லித்தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு சந்தோசம் என்பது போல் இன்று பல கூத்தாடிகள் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். பதவி என்பது ஓர் அமானிதம் அதனை நாம் தேடி போகக்கூடாது அதுவே நம்மை தேடி வரவேண்டும். 

ஒருவருக்கு ஒரு பதவியினை பெற்றுக்கொள்வதற்குரிய தகுதிகள் இருந்தும் அதனை அவருக்கு கிடைக்காமல் எவர்கள் தடுக்கின்றார்களோ அதனால் பாதிக்கப்படப்போவது நீங்கள் அல்ல. அதனைத் தடுத்தவர்களே என்பதனை உங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இன்றைய காலகட்டத்தினை பொறுத்தவரையில் மனிதர்களிடத்தில் பொறாமை, ஏமாற்றம், பெருமை, பொய்ச்சத்தியம் என்பன தலைவிரித்தாடுகின்ற ஒரு காலமாக இன்றைய காலம் இருந்துவருகின்றது. அதிலும் அரசியலில் இவை அணைத்தும் மேலோங்கி காணப்படுகின்றது.

இதற்கு முன்னர் அதிகாரத்தில் இருந்தவர்களின் காலப்பகுதியில்தான் பிரதேச சபைக்கு வழங்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கானாமல் போனதும், பிரதேச சபையினால் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவில் ஊழல் நடந்ததாகவும் பேசப்பட்ட விடயங்களாகும். இது விடயமாக ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டு இதில் இடம்பெற்றுள்ள மோசடிகளை விசாரிப்பதற்குரிய முன்னெடுப்புக்களும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட விடயத்தினை நாம் அனைவரும் அறிவோம். 

அதன் பிற்பாடு அவைகளை கண்டறியவதற்குரிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதா? அல்லது அது அன்றுடனே செயலிழந்து விட்டதா என்பதனை அறிந்தபாடில்லை.

இருந்தபோதும் தற்பொழுது சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அனேகமானவர்கள் புதியவர்கள், சமூகத்தின் மீது கறிசனை கொண்டவர்கள் தவிசாளர் பதவிக்காக சண்டையிட்டுக் கொள்வதனை தவிர்த்துக் கொண்டு நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் காலங்களில் மக்கள் மத்தியில் கூறியதுபோன்று போதையற்ற, ஊழலற்ற சபையை உருவாக்கி உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க முன்வாருங்கள்.

இன்று சிலர் குறிப்பாக தங்களுடைய அரசியல் வங்குரோத்துக்காக இன்று பிரதேசவாதம் பேசுவதனை அவதானிக்க முடிகின்றது. இன்னும் எத்தனை காலங்களுக்கு இந்த பிரதேசவாதத்தினை பேசப்போகின்றீர்கள், ஓட்டமாவடியில் தவிசாளர் வந்தாலும், மீராவோடையில் தவிசாளர் வந்தாலும் அவை இரண்டும் எமது ஊர்களே தவிர கடல் கடந்த இலங்கை, இந்தியா நாடுகள் அல்ல என்பதனை பிரதேசவாதம் பேசுபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அத்துடன், எதிர்வருகின்ற மாகாண சபைத் தேர்தலில் நீங்கள் வேட்பாளராக வரவேண்டும் என்பதற்காக பிரதேச சபையில் அமையப்பெறவுள்ள தவிசாளர் பதவிக்கு ஊர்வாதத்தினை மக்கள் மத்தியில் உசுப்பிவிட்டு குளிர்காய நினைக்காதீர்கள்.

மாகாண சபைத் தேர்தலில் களமிறங்குவதற்கு எமது கல்குடா பிரதேசத்தில் பல படித்த, பண்படான, இயைஞர்களான, ஓய்வுபெற்றவர்களாக எத்தனையோ நபர்கள் இருக்கின்றார்கள் அவர்களில் ஒருவரை இனங்கண்டு தெரிவுசெய்யுங்கள். 

அரசியல் என்பது மச்சான் - மச்சினன், அண்ணன் - தம்பி குடும்ப ஆட்சியல்ல. உங்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மாத்திரம்தான் அரசியலில் இருக்க வேண்டும், வேட்பாளராக வரவேண்டும் என்று நினைத்தால் நீங்கள் முதலில் நாட்டில் மன்னராட்சினை கொண்டுவாருங்கள் அல்லது மன்னராட்சி உள்ள நாட்டில் குடியேருங்கள். 

எனவே, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதைப்போன்று உங்களுக்குள் நடைபெறும் தவிசாளர் போட்டிகளில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு பெரும்பான்மை ஆசனத்தைப் பெற்றுக்கொண்ட உங்களுக்கு கிடைக்க வேண்டிய தவிசாளர் பதவியினை தாரை வார்த்து கொடுத்து விடாதீர்கள்.

No comments