கண்டியில் முஸ்லீம்கள் மீதான காடையர் கும்பலின் தாக்குதல் ; த இந்து நாளிதழில் அமைச்சர் ஹக்கீம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, March 20, 2018

கண்டியில் முஸ்லீம்கள் மீதான காடையர் கும்பலின் தாக்குதல் ; த இந்து நாளிதழில் அமைச்சர் ஹக்கீம்கண்டி அசம்பாவிதம் சிங்கள - முஸ்லிம் மோதல் அல்ல. முஸ்லிம்கள் மீதான காடையர் கும்பலின் தாக்குதல்

இந்தியாவின் ' தி ஹிந்து' ஆங்கில தினசரிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வழங்கிய பேட்டியின் தமிழாக்கம்

நேர்காணல்: மீரா ஸ்ரீனிவாசன் 

கேள்வி: முஸ்லிம்களை இலக்கு வைத்து மத்திய மலைநாட்டின் கண்டியிலும், முன்னதாக  மாகாணத்தில் அம்பாறையிலும் நடாத்தப்பட்ட இனவாத தாக்குதல் சம்பவங்களை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்? முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் 2012ஆம் ஆண்டில் இருந்து அதிகரித்து வந்துள்ளனவே.

பதில்: ஒருபுறத்தில் இது சர்வதேசப் பிரச்சினையான இஸ்லாம் போர்பியாவின் ஓர் உள்நாட்டு வெளிப்பாடு. குறிப்பாக யுத்த வெற்றியின் பின்னர் வேண்டுமென்றே சில இனவாத சக்திகள் வேறொரு எதிரியை தேடத் தலைப்பட்டனர். முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் மையப்படுத்தி அவர்கள் மேற்கொண்டு வரும் இந்த முயறசிக்கு கணிசமான அளவு   அரசியல் ரீதியான அனுசரணை   இருந்து வருகிறது. 

சில சிங்கள பௌத்த தீவிர இனவாத அமைப்புக்கள்  ஹிஜாப் விவகாரம் மற்றும் ஹலால் அத்தாட்சி என்ற போர்வையில் உருவாக்கிய இந்த 'எதிரி மனப்பதிவு' 2011-2012 ஆம் ஆண்டுகளில் மேலோங்கின.

கடந்த காலத்தில் முன்னொரு போதும் பிரச்சினையாய் இருந்திராத ஹலால் முறையில் உணவுக்காக  அறுத்தல் உணவுப் பொருட்களின்  ஹலால் சேர்மானங்கள்  உள்ளடங்கள் என்பனவற்றை சுட்டிக்காட்டி முஸ்லிம்களை அல்லாதாரின் மனங்களில் பீதி மனப்பான்மை உட்படுத்தப்பட்டது. இவ்வாறான ஒருவிதமான அச்ச உணர்வை ஏற்படுத்துவதற்கு வியாபார போட்டியும், பொறாமையும்  வேறுபல காரணங்களும் உதவின. பிறகு முஸ்லிம் பெண்களின்  உடையான ஹிஜாப் போன்ற ஆடை அணிகளுடனான வாழ்க்கை முறையும் இலங்கையின் கலாசாரத்துக்கு அந்நியமானவையாக நோக்கப்பட்டன. 

முஸ்லிம்களுக்கு எதிராக  2014ஆம் ஆண்டு நடைபெற்ற அழுத்கம, பேருவல இனக்கலவரம்  வெறுப்பூட்டக்கூடிய பேச்சின் மூலம் தூண்டப்பட்டவெற்றில் பாரதூரமானதாகும். அம்பாறையிலும் கண்டியிலும் நடைபெற்ற இவ்விரண்டு வன்செயல்களும் மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டவையாகும்.

இவை நாட்டின் இனங்களுக்கு இடையிலான துருவப்படுத்தலை வெளிக்காட்டிய  (மஹிந்த ராஜபக்ஷவினால் வழிநடாத்தப்பட்ட) கூட்டு எதிரணியின் குறிப்பிடத்தக்க வெற்றியின் பின்னால் நடந்தேறின.  ஏதாவது சில அரசியல் பின்புலம் இருந்ததா? என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. சில அரசியல் ஊக்குவிப்புகள்  இருந்தன  என்பதை முற்றாக புறந்தள்ளிவிட முடியாது. 

நாங்கள் எந்த அரசியல் கட்சியினராக இருந்த போதிலும் அரசியல் இலாபத்திற்காக தீவிரவாத சக்திகளுக்கு துணை போவதிலிருந்து தவிர்ந்து கொள்ளவேண்டும். அண்மைய சம்பவம் சிங்கள - முஸ்லிம் மக்களுக்கு இடையிலான ஒரு  மோதல் அல்ல, அது முஸ்லிம்கள் மீதான காடையர் கும்பலின் தாக்குதல், அவை மீண்டும் மீண்டும் நடக்கின்றன. முஸ்லிம்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் தவறுவது மற்றொரு பாரதூரமான விடயமாகும். 

கேள்வி: ஆம். பொலிஸார் அசமந்தமாக இருந்ததாக நீங்கள் குற்றம் சாட்டியுள்ளீர்கள் அல்லவா? 

பதில்: இவ்வாறான அனர்த்தத்தை எதிர்கொள்ள அவர்கள் தயார் நிலையில் இருந்திருக்க வேண்டும். இந்த நாட்டில் முஸ்லிம் சிறுபான்மையினரின் பாதுகாப்பை அவர்கள் அறவே பொருட்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. சிறுபான்மையினரோ அல்லது வேறெந்த சமூகத்தினரோ அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் தலையாய கடமை யாகும்.  அங்கு தீய காரியம் எதோ நடக்கப்போகிறது என்று தெரிந்திருக்க வேண்டும்.  

சட்டத்தையும் ஒழுங்கையும் பொறுத்தவரை குற்றவாளிகளை தண்டிக்காமலிருப்பது மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் இருந்ததுபோல உள்ளது. 

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும். முஸ்லிம்கள் வியப்பில் ஆழ்ந்திருக்கிறார்கள். யுத்த வெற்றியை தொடர்ந்து இந்த இனவாத சக்திகள் மேலோங்கின.  அளுத்கம, பேருவளை போன்ற இடங்களில் அவர்கள் அடர்ந்தேறி அட்டகாசம் புரிந்ததை அடுத்து முழு சிறுபான்மை  சமூகத்தினரும் அந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப தீர்மானித்து புதிய அரசாங்கத்தை ஏற்படுத்தினார்.

காவியுடையை தரித்துவிட்டால் பூரண சுதந்திரம் இருப்பதாகவும் வேண்டியதை எல்லாம் செய்யலாம் என்றும் நினைத்துவிடக் கூடாது.  குறிப்பாக வெறுப்பூட்டக்கூடிய பேச்சை பற்றி கூறுகிறேன். இதில் ஓரிருவருக்கு எதிராக ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் இதில் மெத்தனப் போக்கை கையாளவே  அரசாங்கம் எண்ணியது.  

இந்த நாட்டில் சகவாழ்வின் பெறுமதியை நன்கு விளங்கி இருக்கின்றார்கள். இந்த நாட்டின் ஐக்கியத்திற்கும்இ பாதுகாப்புக்கும், இறைமைக்கும், ஒருமைப்பாட்டுக்கு சற்றும் குறையாத விதத்தில் முஸ்லிம்கள் பாரிய பங்களிப்பை செய்திருக்கிறார்கள். சிங்கள பெரும்பான்மையினரோடு சமாதானத்துடன் வாழ்வதில் நிச்சயமாக எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. 

குடிப்பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் சிங்கள மக்கள் மத்தியில் பெண்களில் கருத்தரிக்காமை மற்றும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் விதத்தில் போலியான  கற்பனையான கதைகள் பரப்பப்படுகின்றன. அவ்வாறான பொய் பிரசாரங்களை நிறுத்துவதற்கு அரசாங்கம் உரிய தொடர்பாடல் வியூகத்தை வகுக்கவேண்டும். 

கேள்வி: நீங்கள் 2015ஆம் ஆண்டு இந்த அரசாங்கத்தை ஆதரித்ததாகவும் முஸ்லிம்களின் ஆதரவின்றி இந்த தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது என்றும் கூறிவருகிறீர்கவ். கிழக்கு முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக இந்த கூட்டு அரசாங்கத்துக்கு வாக்களித்திருக்கும் நிலையில் அரசாங்கம் முஸ்லிம் சிறுபான்மையினரை புறக்கணிப்பதாக எண்ணுகின்றீர்களா?

பதில்: இவ்வாறான விடயங்கள் சிலவற்றில் அரசாங்கம் நடந்துகொள்ளும் விதத்தை பார்த்தால் கடுமையாக சட்டத்தை அமுல்படுத்துவதில் தேக்கநிலை காணப்படுகிறது. இது முஸ்லிம்களை விசனமடையச் செய்திருக்கிறது. ஏன் இது சிங்கள பெரும்பான்மையினரின் ஆதரவுத்தளத்தை இழந்து வருகின்றார்கள் என்பதனாலா? ஆனால் அவர்கள்  எண்ணிக்கையில் குறைந்த  தீவிரவாதிகளில் சிலரே. நீங்கள் அந்த வாக்கு வங்கியை வெற்றிகொள்ள முடியாது.

இது முஸ்லிம்களை இந்த அரசாங்கத்தில் இருந்து விலகிச்செல்வதற்கான  ஒரு திட்டத்தின் பகுதியாகவும் இருக்கலாம். நடந்துமுடிந்த உள்ளுராட்சி தேர்தலில் முஸ்லிம்கள் வாக்களித்த விதத்தை நோக்கினால், அவர்கள் இன்னும் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் தூணாகவே இருக்கிறார்கள். ஆயினும் முஸ்லிம்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த எத்தனிக்கும் முயற்சிகளால்  குறைந்தது சில வீதத்தினராவது விலகிச்செல்ல நேர்வது சில தரப்பினரை அரசியல் ரீதியாக பயனடையச் செய்யலாம்.

கேள்வி: இந்த விடயத்தை வரலாற்று பின்னணியோடு எவ்வாறு பார்க்கின்றீர்கள்? 1915ஆம் ஆண்டு இலங்கையில் பாரிய இனக்கலவரம் முஸ்லிம்களை இலக்காக கொண்டு நடைபெற்றது.  பாராளுமன்ற அரசியலைப் பொறுத்தவரை கடந்த சில தசாப்தங்களாக உங்களுடைய கட்சி ஆட்சியிலுள்ள அரசாங்கங்களை சார்ந்ததாகவே இருந்து வந்துள்ளது.  யுத்தத்துக்கு பின்னர் நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசங்கள் அடுத்தடுத்து தாக்கப்படும்போது அவ்வாறான அரசாங்கத்தில் இருப்பது அசௌகரியமாக இல்லையா? 

பதில்: இதனை உணர்வுபூர்வமாகவும், உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் பார்க்கும்போது நாங்கள் ஆவேசப்படலாம். நாங்கள்  இராஜினாமா செய்துவிட்டு எதிர்த்தரப்புக்கு செல்லலாம். இதுபற்றிப் பேச என்னைவிட தகுதியானவர் வேறெவரும் இருப்பார்கள் என நான் நினைக்கவில்லை. ஏனென்றால் இதனை நான் ஏற்கனவே இரு தடவைகள் செய்து காட்டியிருக்கிறேன். எப்பொழுதும் நாங்கள் உணர்ச்சிவசப்பட்டு, ஆவேசப்பட கூடியவர்களாக இருக்கமுடியாது. நாங்கள் நிகழ்வின் மொத்த வடிவத்தையும் கவனத்தில் எடுத்துப்பார்க்க வேண்டும்.

ஆனால், இங்கு வேறொரு விடயமும் இருக்கிறது. அதாவது மாறிமாறி பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொள்வது அரசாங்கத்திலுள்ள இருதரப்பாரிடமும் காணப்படுகிறது. இது அரசாங்கத்தை ஸ்திரத் தன்மையற்றதாக்கி, வீழ்ச்சிக்கு இட்டுச்செல்லும்.

கேள்வி: நீங்கள் குறிப்பிடுவது பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் இடம்பெற்றனவையா?

பதில்: ஆம், உள்ளூராட்சித் தேர்தல் நடந்ததோடு அரசாங்கத்தின் இரண்டு பிரதான பங்காளர்களிடமும் நடந்த இந்த மோதல் அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் எங்களையும் சங்கடத்துக்குள்ளாக்கியது, அரசாங்கத்தில் தொடர்தேர்ச்சியான தன்மை காணப்படுவதாக இல்லை. தீர்மானிக்கப்பட்டாத விடயங்கள் நிறைய உள்ளன. அவ்வாறான அரசியல் ஸ்திரமற்ற தன்மை இந்த தீவிரவாத சக்திகளுக்கு தகுந்த வாய்ப்பான  களத்தை அமைத்துக் கொடுத்துவிடுகின்றது. அதனை அவசரமாக தீர்த்து வைக்க வேண்டும்.  

கேள்வி: கிழக்கு மாகாணத்தில், மேற்காசிய நாடுகளின் நிதியுதவியோடு  அடிப்படைவாதம் அதிகரித்துவருகின்றது என்ற கூற்று பற்றி என்ன கூறுகிறீர்கள்?

பதில்: இவ்வாறான நீண்ட நேர்காணலின் பின்னர் இப்படியான கேள்வி தொடுக்கப்படுவதுண்டு. நீங்கள் மட்டுமல்ல, என்னை பேட்டி காணவருகின்ற ஊடகவியலாளர் பலரும் தங்களது செவ்வியை இந்த கேள்வியோடுதான் முடிவுக்கு கொண்டுவருவது வழக்கம். மீண்டும் இது சர்வதேச மனப்பதிவின் வெளிப்பாடாகும். ஆனால், உள்நாட்டை பொறுத்தவரை முஸ்லிம்கள் வன்முறையை கையாளும் அளவுக்கு தீவிரவாதத்துக்கு உள்ளாகவில்லை.

தீவிரவாதப் போக்கு என்பது கலாசார ரீதியானது. உடையை எடுத்துக்கொண்டால் அது நாங்கள் கடைப்பிடித்தொழுகும் நம்பிக்கை சார்ந்தது. வஹாபிசம் பற்றிப் பேசுகிறார்கள். அதுவும் ஸலபி சித்தாந்தமும் தீவிரவாதத்துக்கு காரணம் என்கிறார்கள். ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் போன்ற பல ஜமாஅத் அமைப்புகள் உள்ளன. அவை ஆழமாக வேரூன்றிய  வகுப்புவாத தீவிரவாத குழுக்கள் என அர்த்தப்படமாட்டாது.  அவை இஸ்லாமிய இஸ்லாமிய தத்துவார்த்தத்தில் வித்தியாசமான சிந்தனைகள்  சார்ந்த சித்தாந்தங்களின் பாற்பட்டவை.

உள்நாட்டு அரசியல்வாதிகளான எங்களுக்கு இவைபற்றி தெரியும். நாங்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம், நாங்கள் காது கொடுத்துக் கேட்கிறோம். அவர்கள் எல்லோருடனும் நாங்கள் தொடர்பாடல்களை வைத்துள்ளோம். வெளியாரிடத்தில் வேறுபட்ட மனப்பதிவை ஏற்படுத்திவிடலாம் என்பதால்  சிலவேளைகளில் அவர்களில் சிலர் தமது  கொள்கை ரீதியான சித்தாந்தத்தை பிரசாரப்படுத்தும் விதத்தை நாங்கள் விமர்சிக்கவும் செய்கிறோம். இவ்வாறான சில அமைப்பினர் தங்களது செயற்பாடுகளை தங்களுக்குள் வைத்துக்கொள்கின்றனர். ஏனையோருடன் தொடர்பாடல்களை குறைத்துக்கொள்கின்றனர். 

சமயம் சார்ந்த நடைமுறை என வரும்பொழுது ஹிந்து, கிறிஸ்தவம், யூதாயிசம் என்பவற்றில் வெவ்வேறு பிரிவுகள் உள்ளன். அவ்வாறு வேறுபட்ட கொள்கைகளை பிரசாரப்படுத்துகின்ற விளிம்புநிலை குழுக்கள் மாறுபட்ட கோட்பாடுகளை நடைமுறைபடுத்துகின்றனர். தங்களது கலாசாரத்தையோ, கொள்கையையோ பிரசாரப்படுத்துவதற்கு வன்முறையை கையாளாத அவ்வாறான விளிம்புநிலை அமைப்பினரைப்பற்றி கவலைப்படத்தேவையில்லை. 

பெண்ணுரிமை பற்றிய விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. பெண்ணுரிமை என்று வரும்பொழுது இஸ்லாம் தாராள போக்கை கையாள்வதில்லை என மக்கள் எண்ணத் தலைப்பட்டுள்ளனர். அவை கலாசாரம் சார்ந்த விடயங்கள் என்பதால் அவ்வாறான சீர்திருத்தங்கள்  உள்ளிருந்தே வரவேண்டும். அதுதான் இப்பொழுது நடக்கிறது. 

தொழிலாளர் அணியில் பெண்களின் பங்களிப்பு இன்று முக்கியமான பேசுபொருளாகி இருக்கிறது, இதில் வேறு நாடுகளை விட தெற்காசியாவில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். இதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. முக்கியமாக நாங்கள் பெண்களை அதிகளவு பாதுகாக்கின்றோம்.

பெண்கள் தொழில்புரிவது சமயரீதியில் தவறு என நிலவிய எண்ணப்பாங்கு காலாவதியாகிவிட்டது. அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம் பெண்கள் தாராளமாக வேலைக்கு செல்கிறார்கள். அப்பொழுது அவர்கள் ஆடையணியும் விதம் கலாசாரம் சார்ந்தது அதை யாரும் தடுக்க முடியாது. அது அவர்களது கலாசார ரீதியான உரிமை. அதனை உள்ளீர்க்க பழகிக்கொள்ள வேண்டும்.

(நன்றி: தி இந்து)

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages