அரசு முஸ்லிம்களை பாதுகாக்க தவறிவிட்டது - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, March 8, 2018

அரசு முஸ்லிம்களை பாதுகாக்க தவறிவிட்டது


நாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீர்கெட்டுள்ளன: பாராளுமன்றத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

சட்டமும், ஒழுங்கும் சீர்கெட்டிருப்பதால் முழு முஸ்லிம் சமூகத்தினரும் ஆத்திரமும், அவநம்பிக்கையும் அடைந்திருக்கிறார்கள். முஸ்லிம்களின் வணக்கஸ்தலங்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டிருக்கின்றன. தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காணமுடியாத அளவுக்கு எங்களது உளவுப் பிரிவினர் அவ்வளவு பலவீனமானவர்களா? 

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் பாராளுமன்றத்தில் அந்த விவாதத்தில் உரையின்போது மேலும் தெரிவித்ததாவது;

இன்று பாராளுமன்றத்தின் வழமையான நிகழ்ச்சி நிரலை நிறுத்திவிட்டு எனது வேண்டுகோளை ஏற்று அம்பாறை மற்றும் கண்டி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விவாதிப்பதற்கு இந்த ஒத்திவைப்பு பிரேரணைக்கு இணக்கம் தெரிவித்தமைக்காக ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்கும் எல்லா சமூகத்தினரதும் சகவாழ்வுக்கு வழிவகுப்பதற்கும் இது உதவும்.

இந்த விவாதத்தில் குறுக்கீடு செய்த பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன மற்றும் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, அனுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். 

கண்டி மாவட்டத்திலும், அதற்கு முன்னர் அம்பாறை நகரிலும் நடைபெற்ற வன்செயலினால் சட்டத்தையும், ஒழுங்கையும் ஏற்படுத்துவதில் காணப்பட்ட சீர்கேட்டினால் தங்களது மனக்கொந்தளிப்புகளையும், நம்பிக்கையீனத்தையும் அவர்கள் வெளிப்படுத்தினர். 

எங்கு தவறு நடந்திருக்கின்றது அதற்கு எவ்வாறு தீர்வுகாணலாம் என்பது பற்றி விவாதிப்பதுடன் இவ்வாறான இழிசெயல்கள் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதற்கும் இது உதவும். பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன எனது அறிக்கையை தவறாக புரிந்து ண்டார். சில எதிர் சக்திகள் பற்றி நான் குற்றம்சாட்ட நேர்ந்தது. ஒவ்வொரு கட்சியும் மலிவான அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக இனவாதச் சக்திகளை ஊக்குவிப்பதுண்டு. 

ஆண்டாண்டு காலமாக அரசியல் கட்சிகள் இனவாத சக்திகளுக்கு அறிந்தும் அறியாமலும் அனுசரணை வழங்கி வருகின்றன. இவ்வாறு தீயசக்திகளுக்கு அரவணைப்பும், அனுசரணையும் வழங்குவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். கட்டுப்பாட்டுக்குள் வராத கும்பல்கள் மீது சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுவதற்கு தீர்மான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

சட்டத்தை செயற்படுத்துவதும், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதும் இரு வேறு விடயங்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அவை ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டிருந்த போதிலும், இன்று என்ன நடக்கின்றது என்றால் சில வேளைகளில் சம்பவங்களை விசாரிக்கும் பொலீஸ் திணைக்கள உயரதிகாரிகள் கட்டுப்படமறுக்கின்ற சக்திகளின் ஒத்துழைப்பைப் பெறுவதற்காக சட்டத்தை செயற்படுத்துதில் மிதமான போக்கையும், சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டுவதில் வேறு நிலைப்பாட்டையும் கொண்டுள்ளனர். இவ்வளவு காலமாக இதுதான் நடக்கின்றது. இந்த மனப்பான்மை மாறவேண்டும். சட்டத்தை செயற்படுத்துவதில் எந்த தடையும் இருக்கக்கூடாது. 

அவர்கள் உரிய ஆதாரங்களை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அவற்றை உரிய வகையில் நெறிப்படுத்தி நீதவானை திருப்தியடையச் செய்ய வேண்டும். அதனூடாக உரிய தண்டனை வழங்குவதற்கு வழிவகுக்க வேண்டும். ஏன் நாங்கள் விசாரணை முடியும்வரை அந்த நபர்களை விளக்கமறியலில் வைக்கின்றோம்? அவ்வாறு செய்யாவிட்டால் அவர்கள் வெளியில் வந்து விசாரணைகளில் தலையீடு செய்வார்கள். அவர்கள் தேவையில்லாத அழுத்தங்களை பிரயோகிப்பார்கள். 

சட்டத்தை செயற்படுத்துவதில் மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்ள வேண்டுமென நாங்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருக்கின்றோம். தாம் எதிர்பார்க்கும் காலத்திற்கு முன்னர் சட்டத்தை ஒழுங்கையும் நிலை நாட்டுவதற்கு அதில் எந்த சமரசத்திற்கு இடமில்லை. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு சில நாட்கள் எடுக்கலாம். ஆனால் இந்த கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியாத சக்திகளை திருப்திப்படுத்துவதற்காக அவர்களை விளக்கமறியலில் வைக்காமல் உலாவவிட்டால் என்ன நடக்கும்? சரியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு முடியும்வரை அந்த சக்திகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டாக வேண்டும். 

இதுதான் அம்பாறையில் நடந்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கண்டியிலும் நடக்கப் போகின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அடுத்தடுத்து நடக்கலாம். இதை அமைச்சரவைக் கூட்டத்திலும் கூறியிருக்கிறேன். 

அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் இம்மாதிரியான ஓர் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துவது யாருக்கும் வேண்டியதில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிலிருந்து நிவாரணமும், விடிவும் ஏற்பட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டாக வேண்டும். எங்களது சட்டங்கள் இறுக்கமாக்கப்பட வேண்டும். குற்றவாளிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கு நாங்கள் அவசரகால சட்டத்தில் மட்டும் தங்கியிருக்கக்கூடாது. அதாவது, அவசரகால சட்டம் நீக்கப்பட்டவுடன் அவர்கள் சுதந்திரமாக நடமாடித் திரிவார்கள். ஆகையால் நாங்கள் கடுமையான சட்டத்தை கையாள வேண்டும். 

நாங்கள் வெறுப்பூட்டக்கூடிய பேச்சை தண்டனை சட்டக்கோவையில் உள்ளடக்க முயற்சித்த போது ஆட்சேபனை எழுந்தது. ஏனென்றால் அப்போதைய அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பயங்கரவாத தடைச்சட்டத்தையும் தண்டனைச் சட்டக் கோவையில் உள்ளீர்க்க முயற்சித்தபோது எதிர்ப்பு கிளம்பியதனால் கைவிடப்பட்டது. இப்பொழுது சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தினூடாக வழக்குத் தொடரப்பட வேண்டிய தேவையிருக்கின்றது. பொலிஸைப் பொறுத்தவரை சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தை அமுல்படுத்துவதில் தயக்கம் காண்பிக்கப்படுகின்றது. மேற்படி சட்டம் இவ்வாறான நபர்களை விளக்கமறியலில் வைப்பதற்கு ஏன் பிரயோகிக்கப்படக்கூடாது? கிந்தோட்டை சம்பவத்தில் இது முடியுமானால் ஏன் அம்பாறையில் முடியாது? கிந்தோட்டைக்கு ஒரு சட்டம் அம்பாறைக்கு இன்னொரு சட்டமா? அம்பாறையில் பீ அறக்கையில் மாற்றம் செய்ய முயற்சித்தவர்கள் யார்? 

ராஜாங்கனை சம்பவத்தைப் பாருங்கள். அங்கு 60 விவசாயிகள் எனது அமைச்சின் கீழ் வரும் நீர் வழங்கல் திட்டத்திற்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்களுக்கு அதற்கான உரிமை இருக்கின்றது. அரசியல் நோக்கமிருந்ததோ என்னவோ ஏன் விளக்கமறியலில் வைத்தார்கள்? அங்கு முடியுமானால் ஏன் இங்கு முடியாது? அம்பாறையிலும் அதை கையாண்டிருக்கலாமே. ஏன் இந்த இரட்டை வேடம்? அதனால் தான் மீண்டும் இவ்வாறு இடம்பெறாதிருக்க இங்கு இதுபற்றி நாங்கள் வலியுறுத்திக் கூறுகின்றோம். 

சட்டமும், ஒழுங்கும் சீர்கெட்டிருப்பதால் முழு முஸ்லிம் சமூகமும் ஆத்திரமும், அவநம்பிக்கையுயம் அடைந்திருக்கின்றார்கள். அவர்கள் முஸ்லிம்களின் வணக்கஸ்தலங்களை இலக்கு வைத்துத் தாக்கியிருக்கின்றார்கள். திகன, தெல்தெனிய பிரதேசங்களில் மட்டுமல்ல அது கட்டுகஸ்தோட்டைக்கும், அலதெனிய, கஹல்ல போன்ற பிரதேசங்களுக்கும் பரவியது. இந்த பாதகர்களை மடக்கிப்பிடிக்க முடியாதா? எங்களது உளவுப் பிரிவினர் இவர்களை அடையாளம் காணமுடியாதளவுக்கு பலவீனமான மலடர்களா? எங்களுக்கு இவர்களைத் தெரியும், ஆதாரங்கள் இருக்கின்றன. 

இறந்தவரின் இறுதிக்கிரியைகள் நடப்பதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னிருந்தே பாரிய அனர்த்தம் ஏற்படப்போகின்றது எனவும் விழிப்பாக இருக்குமாறும் நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் உயரதிகாரிகளை கேட்டுக் கொண்டோம். இறுதியில் என்ன நடந்தது? கலகம் அடக்கும் பொலிஸாருக்கு உத்தரவிட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் அங்கிருந்து மாயமாக மறைந்து விட்டார். ஆகையால் இந்த விடயத்தில் பொறுப்பான யாருடையாவது தலை உருளவேண்டும். இதுதான் அம்பாறையிலும் நடந்தது. சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இவற்றுக்கெல்லாம் பொறுப்பேற்றாக வேண்டும். உரிய சரியான சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இந்த பாதகச் செயலை செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages