மக்கள் பிரதிநிதிகள் தமது நடத்தைகள், செயற்பாடுகளால் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் - ஜனாதிபதி


பண்புமிக்க உயர் பெறுமதியுள்ள அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்காக மக்கள் பிரதிநிதிகள் தமது நடத்தைகளாலும் செயற்பாடுகளாலும் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினதும் பிரதிநிதிகளுடன் இன்று முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த கால அட்டவணைக்கேற்ப மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு தமது உயரிய பங்களிப்பினை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதன்போது பொதுமக்களுடன் பிரச்சினை ஏற்படுத்திக்கொள்ளாது கொள்கைகளுக்கு உட்பட்டு பொறுமையாகவும் அவதானத்தோடும் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
பொதுமக்களின் குரலுக்கு செவிசாய்த்து அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்ளும் செயற்பாடுகளில் ஊழல் மோசடியற்று செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளினால் பின்னடைவிற்கு உட்படாது, குறைபாடுகளை நிவர்த்திசெய்து சரியான, வலுவான அரசியல் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்நோக்கி கொண்டுசெல்ல இந்த பிரதிநிதிகள் கட்சிக்கு வலுசேர்ப்பார்கள் என்று ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற சபை அமர்வுகளில் இயன்றளவு கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்து, மக்களின் சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுத்த ஜனாதிபதி, புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களினூடாக தொடர்ச்சியாக அறிவைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்குமாறு மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கியதுடன் அதனூடாக சிறந்தவொரு அரசியல் எதிர்காலத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
பிரதேசத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்கி, அவற்றின் முன்னேற்றம் தொடர்பாக மதிப்பீடு செய்து, தேவையாயின் மேலும் நிதி வழங்க தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதி வழங்கினார்.
ஜனாதிபதி, உள்ளிட்ட கட்சித் தலைவர்களின் முன்னிலையில் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் தூய்மையான அரசியல் இயக்கத்தில் உண்மையாகவும் அர்ப்பணிப்புடனும் ஈடுபடுவதாக உறுதிமொழி வழங்கினர்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, பைஸர் முஸ்தபா, துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட அமைச்சர்களும் இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்தனர்.
ஆளுநர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண முதலமைச்சர்கள், மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெரும்தொகையானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments