நெருக்கடிக்கு காண்டம் : இனவாதமும் அரசியல் நாடகமும்

- ஆர். யசி-
70 ஆண்­டு­கால சுதந்­திர இலங்­கையில் பல்­வேறு நெருக்­க­டிகள், போராட்­டங்­களை சந்­தித்து  இன்று நல்­லாட்சி அர­சாங்­கத்தில் வாழ்ந்து வரு­கின்றோம். தமிழர், முஸ்­லிம்கள் இரு பிரி­வி­ன­ரதும் முழு­மை­யான ஆத­ரவை பெற்ற சிங்­கள மக்கள் ஏற்­று­க் கொண்ட ஒரு ஆட்சி நாட்டில் நில­வு­கின்­றது  எனினும் இலங்கை பொரு­ளா­தார ரீதி­யிலோ, அபி­வி­ருத்தி ரீதி­யிலோ முன்­னேற்றம் காணாத இன்றும் மூன்றாம் நிலை நாடா­கவே பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கின்றோம். இலங்­கையில் வளங்கள், அமை­விடம் என்­னதான் சாத­க­மாக அமைந்­தாலும் கூட இந்த 70 ஆண்­டு­கால அர­சியல் பயணம் திருப்­தி­ய­டை­யக்­கூ­டிய ஒன்­றாக இல்லை.  இது­வ­ரையில் நாம் சர்­வ­தேச நாடு­க­ளிடம் வாங்­கிய கடன் தொகை சுமார் 10 ஆயிரம் கோடி­யையும்  தாண்­டு­கின்­றது. 
கடந்த ஆண்டு அர­சாங்கம் முன்­வைத்­துள்ள வரவு செலவு திட்­டத்தின் மூலம் அர­சாங்கம்  இந்த ஆண்டின் வரு­மா­ன­மாக 2 இலட்­சத்து 26 ஆயிரம் கோடி ரூபாய்­களை  எதிர்­பார்க்­கின்­றது. ஆனால் அர­சாங்கம் செலுத்த வேண்­டிய கடன் உள்­ளிட்ட இந்த  ஆண்­டுக்­கான செலவினம் நான்கு இலட்­சத்து 45 ஆயி­ரத்து 500 கோடி ரூபாய்­க­ளாகும். ஆகவே இந்த  ஆண்டில் வரு­மா­னத்தை விடவும் ஒரு இலட்­சத்து 89 ஆயி­ரத்து 500 கோடி ரூபாய் மேல­தி­க­மாக பெற்­றுக்­கொள்ள வேண்­டிய நிலைமை உள்­ளது.
 நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை பலப்­ப­டுத்த வேண்டும் என்றால் நாட்டின் உற்­பத்­தியை பலப்­ப­டுத்த வேண்டும்.  உற்­பத்தி அதி­க­ரிக்­கப்­பட்டால் மட்­டுமே அதன் மூல­மாக நாட்டின் வரு­மானம் பல­ம­டைய முடியும். ஆகவே நாட்டின் தேசிய உற்­பத்­தியில் அதிக பங்­க­ளிப்பு மூவின மக்­க­ளிலும் தங்­கி­யுள்­ளது. இவ்­வா­றான தேசிய நெருக்­க­டிகள் இருக்­கின்ற நிலையில்  நாட்டில் மூவின மக்­களும் தேசிய கொள்­கை­யினை பலப்­ப­டுத்தி வாழ்­வா­தா­ரத்தை உயர்த்­திக்­கொள்ள வேண்­டிய சூழலில் அதனை கைவிட்டு  தேசிய ரீதியில் பிரி­வி­னை­யினை வளர்ப்­பதில் அதிக அக்­க­றை­யினை செலுத்­து­கின்ற மிகவும் அவ­மா­ன­மிக்க நிலைமை  ஏற்­பட்­டுள்­ளது. 
இன­வாதம், மத­வாதம் என்­ப­வற்றில் மூழ்­க­டிக்­கப்­பட்டு நாட்டில் பிரி­வி­னை­வாத போதையில் தள்­ளாடும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. பொரு­ளா­தார ரீதி­யிலும் சரி அபி­வி­ருத்­தி­யிலும் சரி  நாடு பாரிய சரிவை  சந்­தித்து வரு­கின்­றது. இளைஞர் வேலை­யில்லா திண்­டாட்­டத்­திற்கு  தள்­ளப்­பட்­டுள்­ளனர். விவ­சா­யிகள் மூன்று போக விளைச்சல் இல்­லாது வாழ்­வா­தார ரீதியில் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். சுகா­தார பிரச்­சி­னை­களில், கல்வி  பிரச்­சி­னை­களில்  தமிழ் சிங்­கள முஸ்லிம் மக்கள் என மூவி­னத்­தை­யுமே இவை பாதிக்­கின்­றன. 
இவற்­றிற்கு அர­சாங்­கமோ அமைப்­பு­களோ தீர்­வு­களை தேட­வில்லை. மக்­களின் உரி­மைக்­கான போராட்டம் நிகழ்­கின்­றது. ஆனால் இதனை தாண்டி ஒரு இனம் இன்­னொரு இனத்தின் மீது கோபத்­தையும், வெறுப்­பையும் காட்­டிக்­கொண்டு அடிப்­படை பிரச்­சி­னை­களை மறந்­து­வி­டு­கின்­றோம் . இது ஒரு வகையில் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு வாய்ப்­பா­கவே உள்­ளது. அர­சாங்­கத்தின் மீதான நெருக்­க­டி­­களை தவிர்க்கும் நல்­ல­தொரு வாய்ப்­பாக இதனை மாற்­றிக்­கொள்­கின்­றனர். 
இருக்கும் ஆட்­சி­யா­ளர்கள் அதி­கா­ரத்தை  தக்க வைக்­கவும், மறு புறம் அதி­கா­ரத்தை இழந்­த­வர்கள்  அதி­கா­ரத்தை  கைப்­பற்ற இன­வாத தூண்­டுதல் அவ­சி­ய­மா­கின்­றது. ஒரு தீக்­குச்சி பட்டால் கூட எரியும் நிலைக்கு இன்று நாட்டில்  இன­வாத வெறி பர­விக்­கி­டக்­கின்­றது. சந்­தர்ப்­பங்­க­ளு­க்காக இன­வா­திகள் பார்த்­துக்­கொண்­டுள்­ளனர். கடந்த கால வர­லா­றுகள் இவற்றை எமக்கு நிறை­யவே கற்­றுக்­கொ­டுத்­துள்­ளன. ஆனால் இன்றும் இன­வாதம் பரப்­பப்­பட்டு சிறு­பான்மை இன மக்கள்  தொடர்ச்­சி­யாக அழிக்­கப்­பட்டு வரு­கின்­றமை சாதா­ரண விடயம் அல்ல. இது இன­வா­தத்­திற்கு அப்பால் தேசி­யமே அழியும் செய­லாகும். தேசி­யத்தை அழி­ய­வி­டக்­கூ­டாது .
இவ்­வாறு இன முரண்­பா­டு­களை  பரப்பி  இனங்­க­ளுக்கு இடையில் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்தும் தேவை சாதா­ரண மக்­க­ளிடம் இருந்­த­தில்லை. தமிழ், சிங்­கள, முஸ்லிம் மக்கள் மத்­தியில் இன­வாத வெறி ஒரு­போதும் இருப்­ப­தில்லை. எனினும் அர­சியல் சூழலே இவ்­வா­றான இன முரண்­பா­டு­களை தோற்­று­விக்­கின்றன. ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு பிரி­வினை, மதம், இனம் என்ற வேறு­பா­டுகள் தேவைப்­ப­டு­கின்­றது. ஒரு சிலர் இன்றும் அடிப்­ப­டை­வாத கொள்­கையில் இருந்தே தமது அர­சியல் நகர்­வு­களை முன்­னெ­டுக்­கின்­றனர். இது மூவின அர­சி­ய­லிலும்  உள்­ளது. 
தேசப்­பற்­றா­ளர்கள் என தம்மை அடை­யாளப் படுத்­திக்­கொள்ளும் சிலர் தமக்கு தேவைப்­படும் சந்­தர்ப்­பங்­களில் இன­வாத வெறித்­த­னத்தை வெளிப்­ப­டுத்­திக்­கொள்­கின்­றனர். இப்­போது அம்­பாறை, கண்டி- திகன, தெல்­தெ­னிய இன வன்­மு­றை­களும் ஒரு­சில அர­சியல் தூண்­டு­தலின் பெய­ரி­லேயே இடம்­பெற்­றுள்­ள­தாக மிக­ப்பெ­ரிய குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. "பார­ாளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சிகள் மட்டும் அல்­லாது ஆளும் தரப்­பி­னருமே இதனை கூறு­கின்­றனர்" 
இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெ­று­வதும்  இதன் பின்­ன­ணி­யையும் அர­சியல் தலை­மைகள் நன்கு அறிந்­தி­ருக்க வேண்டும். என்ன நடக்­கின்­றது என்­பது தெரிந்­தி­ருக்க  வேண்டும். சாதா­ரண மக்­களின் மனங்­களில் இன­வா­தத்தை எவ்­வாறு  பரப்­பு­வது என்ற அடி­மட்ட அர­சியல் நோக்­க­மொன்று  நிச்­ச­ய­மாக இதன் பின்­ன­ணியில்  உள்­ளது. தேவைப்­படும் நேரங்­களில் இவை  தூண்­டி­வி­டப்­ப­டு­கின்­றது. முக்­கி­ய­மாக ஆட்­சி­யினை தக்­க­வைக்­கவோ, அல்­லது அதி­கா­ரத்தை கைப்­பற்­றவோ இந்த இன­வாதம் தூண்­டி­வி­டப்­ப­டு­கின்­றது. உலக நாடு­களின் பல முரண்­பா­டு­களின் பின்­னணி இது­வா­கவே உள்­ளது. 
இலங்­கையில் விடு­த­லைப்­பு­லி­களின் நகர்­வு­களை துல்­லி­ய­மாக கண்­ட­றிந்த இலங்­கையின்  புல­னாய்வு துறை­யி­ன­ருக்கு இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெ­று­கின்­றமை பற்­றிய தக­வல்கள் தெரி­யா­தி­ருக்க வாய்ப்­பில்லை. தகவல் தெரிந்தும் எம்மால் தீர்­மானம் எடுக்க முடி­யாமல் போய்­விட்­டது என பார­ாளு­மன்­றத்தில் சபை முதல்வர் தெரி­வித்­தி­ருந்தார். அப்­ப­டி­யான பல­வீ­ன­மான நிலை­மை­களில் இன்று தேசிய பாது­காப்பு தள்­ளப்­பட்­டுள்­ளமை மிகவும் மோச­மா­ன­தாகும். 
இன்று மத்­திய  கிழக்கு நாடு­களின் அமை­தி­யின்­மைக்கு  எவ்­வாறு மேற்கு நாடுகள் கார­ணமோ, ஆபி­ரிக்க நாடு­களின் பசி பட்­டி­னிக்கு எவ்­வாறு வல்­ல­ர­சுகள் கார­ணமோ அதேபோல் தான் ஒவ்­வொரு இன­வாத தூண்­டு­தலின் பின்­ன­ணி­யிலும் நிச்­ச­ய­மாக ஒரு அர­சியல் இயந்­திரம் இயங்­கிக்­கொண்­டுதான் இரு­க்கின்­றது. இலங்­கையின் கடந்த கால வர­லா­று­க­ளிலும் இவை நிரூபிக்­கப்­பட்­டுள்­ளன. 
கறுப்பு ஜூலை கல­வரம் 1983 ஆம் ஆண்டு இடம்­பெற்று தமிழ் மக்கள் படு­கொலை செய்­யப்­பட்ட நேரம்  கறுப்பு ஜூலைக்கு ஜே.வி.பியே  காரணம் எனக் கூறி அவர்­களின் அர­சியல் அந்­தஸ்­தையும் பறித்­த­துடன் ஸ்ரீலங்கா கம்­யூனிஸ்ட் கட்சி, லங்கா சம­ச­மாஜ கட்சி ஆகி­ய­வற்றின் அர­சியல் உரி­மை­யினை பறித்து சகல இட­து­சாரி தலை­வர்­க­ளையும் சிறையில் அடைத்­தது அப்­போ­தைய ஜனா­தி­பதி ஜே. ஆர். ஜெய­வர்த்­த­னவின் ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்கம். எனினும் இறு­தியில் ஐக்­கிய தேசியக் கட்­சியே கறுப்பு ஜூலை கல­வ­ரத்­திற்கு காரணம் என்ற உண்மை வெளி­வந்­தது. 
ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சியல் பிர­சா­ரங்­களில், அவர்­களின் உத்­தி­யோ­க­பூர்வ பத்­தி­ரி­கை­களில் தமிழ் மக்கள் கொல்­லப்­பட வேண்டும் என வெளிப்­ப­டை­யாக எழு­தப்­பட்­டது. அதன்  பெயரில் இன வெறி தூண்­டப்­பட்டு தமிழ் மக்கள் நடு வீதியில் டயர்­களை கொண்டு எரிக்­கப்­பட்டு சொத்­துக்கள் சூறை­யா­டப்­பட்டு மிகப்­பெ­ரிய இன அழிப்பை அப்­போ­தைய அர­சாங்கம் செய்த வடு இன்றும் உள்­ளது. இதன் விளைவே அடுத்த மூன்று தசாப்த யுத்தம் ஒன்று உரு­வா­கவும் தமிழ் இளை­ஞர்கள் ஆயுதம் ஏந்தி தமது உரி­மைக்­காக போராட வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை­மையும் ஏற்­பட்­டது.   
ஒரே வார்த்­தையில் தமிழ் பயங்­க­ர­வா­திகள் என சிங்­கள பேரி­ன­வாத சக்­திகள் முத்­திரை குத்­தி­விட்டு சென்­றாலும்  கூட தமிழ் இனத்தின் உரி­மைகள் மறுக்­கப்­பட்­ட­மையும், சுதந்­திரம் பறிக்­கப்­பட்­ட­மை­யுமே இதன் அடித்­தளம் என்­பதை எவரும் மறுக்க முடி­யாது. அதேபோல்  இலங்­கையில் வர­லாற்றில் எப்­போதும் இல்­லாத வகையில் யுத்­தத்தின் பின்னர் ஹலால் பிரச்­சினை எழுப்­பப்பட்­டது. கலா­சாரம் என்ற பெயரில் இன­வாதம் தூண்­டு­வ­தாக பிர­சாரம் முன்­னெ­டுக்­கப்­பட்டு சில பெளத்த அமைப்­புகள் உயிர் பெற்­றன. இந்த அமைப்­பு­களின் பின்­ன­ணியில் முன்­னைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின்  ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி அர­சாங்கம் பங்­க­ளிப்பு செய்­தமை தெட்­டத்­தெ­ளி­வாக தெரிந்­தது. 
அளுத்­கம இனக் கல­வ­ரத்தில் பாது­காப்பு படை­களின் ஒத்­து­ழைப்­புடன் பெளத்த பேரி­ன­வாத அமைப்­பு­க­ளி­னதும் ஒரு­சில அர­சியல் வாதி­களின் தலை­யீ­டு­களும் இருந்­தமை தெரிய வந்­தது. அர­சாங்­க­மாக ஆட்­சியில் உள்ள பிர­தான இரண்டு கட்சி அர­சாங்­கமும் தமது தேவைக்­காக இன­வா­தத்தை பரப்­பி­யுள்­ளது மறுக்க முடி­யாது. எனினும் தமது அதி­கார மோகத்தில் சிறு­பான்மை இனத்­தவர் மீது அடா­வ­டித்­தனத்தை வெளிப்­ப­டுத்­து­வது வேடிக்கை பார்க்­கக்­கூ­டி­யதும் அல்ல. 
இலங்­கையில் கடந்த கால சம்­ப­வங்கள், தமிழ் மக்கள் மீதான இன­வாத அடக்­கு­முறை யுத்தம் என்ற பெயரில் மேற்­கொள்­ளப்­பட்ட படு­கொ­லைகள் அனைத்­திற்கும் இன்று இலங்கை அர­சாங்கம் பதில் கூற­வேண்­டிய கட்­டாயம் ஏற்­பட்­டுள்­ளது. ஜெனிவா மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை மீதான நெருக்­க­டிகள் இன்னும் விடு­பட்ட பாடில்லை. நல்­லி­ணக்கம், சிறு­பான்மை இனத்­தவர் மீதான பாது­காப்பு, ஜன­நா­யகம், சம­வு­டைமை என அனைத்­தையும் முன்­னெ­டுக்கும் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க சர்­வ­தேசம் அழுத்தம் கொடுத்து வரு­கின்­றது. 
இடம்­பெற்ற இன அழிப்­பிற்கு  பதில் கூறி­யாக வேண்டும்  என்ற சர்­வ­தேச அழுத்தம் இலங்­கையின் கழுத்தை நெரித்த வண்­ணமே உள்­ளது. இந்­நி­லையில் அர­சாங்க மாற்றம் நாட்டில் நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது சிறு­பான்மை இன மக்கள் பாது­காக்­கப்­ப­டு­கின்­றனர் என  கூறிக்­கொண்­டுள்ள  நிலையில் இவ்­வாறு  முஸ்லிம் மக்கள் மீதான அடக்­கு­மு­றைகள் இடம்­பெறு­வது, இலங்கை அர­சாங்கம் தவ­றான பாதையில் தொடர்ந்தும் பய­ணித்து வரு­கின்­றது என்­பதை மேலும் உறு­திப்­ப­டுத்தும் வகையில் அமையும். கடந்த ஆட்­சி­களில் எவ்­வாறு சிறு­பான்மை மக்கள் துன்­பு­றுத்­தப்­பட்­ட­னரோ அதே நிலைமை இந்த ஆட்­சி­யிலும் உள்­ளது என்­பது உறு­தி­யாக்­கப்­படும். 
கடந்த 30 ஆண்­டு­கால யுத்­தத்தில்  இன­வாத தூண்­டு­தலின் இறு­தியில் அழிவை சந்­திக்க நேர்ந்­தது அப்­பாவி  தமிழ், சிங்­கள மக்கள் மட்­டு­மே­யாகும்.  அர­சி­யல்­வா­திகள் எந்த இழப்­பு­க­ளையும் சந்­திக்­க­வில்லை. இதனால் சாதா­ரண மக்­களில் வலி என்­ன­வென்­பதை அவர்­க­ளுக்கு விளங்­கிக்­கொள்ள முடி­யாது உள்­ளது. அதி­கார பலம் அவர்­க­ளிடம் உள்ள நிலையில் சாதா­ரண மக்­களின் நிலைமை வாழ்க்கை இவர்­க­ளுக்கு விளங்­க­வில்லை. 
இன்றும் அதே பாதையில் இன­வாத அர­சி­யலை செய்­யலாம் என நினைக்கும் ஆட்­சி­யிலும் அல்­லது இன­வா­தத்தை கையில் எடுத்து மீண்டும் ஆட்­சி­யினை கைப்­பற்­றலாம் என சிந்­திக்கும் நிலை­யிலும் பெளத்த வேடம் பூண்டு இன­வா­தத்தை கக்கும் கலா­சா­ரத்­திலும் சிறு­பான்மை இன நியா­யங்கள் எவ­ரது காது­க­ளிலும் விழப்­போ­வ­தில்லை. அம்­பா­றையில்  முஸ்லிம் உண­வகம் ஒன்றில்  மலட்­டுத்­தன்மை ஏற்­ப­டுத்தும் மாத்­திரை உணவில் இருப்­ப­தாக அடிப்­படை ஆதாரம் அற்ற கருத்­துக்­களை கூறும் நபர்கள் ஏன் பெளத்தன் சாராயம் குடித்­து­விட்டு மாட்­டி­றைச்சி கொத்­து­ரொட்டி வாங்க அந்தக் கடைக்கு  சென்றான் என்ற கேள்வி எழ­வில்­லையா? 
கண்­டியில் கடந்த மாதம் 22 ஆம் திகதி இடம்­பெற்ற கைக­லப்பில் 2 ஆம் திகதி சிங்­கள நபர் உயி­ரி­ழக்­கிறார், ஆனால் இனக்­க­ல­வரம் 5ஆம் திகதி இடம்­பெ­று­கின்­றது. சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய எவ­ருமே சம்­பந்தம் இல்­லாது ஒரு இனக்­க­ல­வரம் கண்­டியில் இடம்­பெ­று­கின்­றது, தாக்­கு­தலில் உயி­ரி­ழந்த நபரின் குடும்­பமோ, நண்­பர்­களோ தொடர்பு இல்­லாது ஒரு இனக்­க­ல­வரம் இடம்­பெ­று­கின்­றது என்ற சந்­தேகம் எவ­ருக்­குமே எழ­வில்­லையா? 
எழ­வில்லை ஏனெனில் இனக் கல­வரம் ஒன்று ஏற்­பட வேண்டும்  என்ற தேவை யாரோ ஒரு சில­ருக்கு அல்­லது  அதி­கா­ரத்தில் உள்ள சில­ருக்கு தேவைப்­பட்­டுள்­ளது. கல­வரம் இடம்­பெற்ற  பின்னர் பார்த்­துக்­கொள்­ளலாம் என்ற நோக்கம் இருந்­துள்­ளது. இந்த  சந்­தேகம் எழு­வது சாத­ார­ண­மான ஒன்­றாகும். அது கொழும்பின் அர­சி­யலை மூடி மறைக்கும் நோக்­க­மாக கூட இருந்­தி­ருக்­கலாம். நாட்டில் அமை­தி­யின்­மை ஏற்­பட வேண்டும் என்ற நோக்கம் இருந்­துள்­ளது. அவ­ச­ர­கால சட்டம் ஒன்று உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற தேவையும் இருந்­தி­ருக்க வேண்டும். எவ்­வாறு இருந்­தாலும் இந்த அர­சாங்கம் சிறு­பான்­மையை பாது­காக்கும் தமது கட­மையை தவ­றவிட்­டுள்­ளது. நாட்டின் அமை­தியை பேணும் அர­சாங்­கதின் பொறுப்பு மீறப்­பட்­டுள்­ளது. 
அவ­ச­ர­கால சட்­டத்தை கொண்­டு­வந்து பிரச்­சி­னையை கட்­டுப்­ப­டுத்த முயற்­சிப்­ப­தாக கோரி­னாலும் எதிர்­கால நட­வ­டிக்­கை­களில்  மக்­களின் உரி­மைகள் குறித்த போராட்­டங்­களில் அடக்­கு­முறை ஆயு­த­மாக பயன்­ப­டுத்­திக்­கொள்­ளலாம் என்ற  நீண்­ட­கால திட்­ட­மாக கூட இருக்­கலாம். அர­சாங்­கமும் குழம்­பிய குட்­டையில் மீன் பிடிக்­கவே முயற்­சித்து வரு­கின்­றது. ஒன்று அதி­கார வர்க்கம் அல்­லது அதி­கா­ரத்தை கைப்­பற்ற முயற்­சிக்கும் வர்க்கம் இன­வா­தத்தை கையில் எடுத்­து­கொண்டு நாட்டின் அப்­பாவி மக்­களை நிலை­கு­லைய செய்து வரு­கின்­றனர். சம்­பவம் இடம்­பெற்­ற­வுடன் அர­சி­யல்­வா­திகள் கொந்­த­ளிப்­பதும் ஒரு­சில அமைச்­சர்கள், அவர்­களின் செய­லா­ளர்கள் பின்­ன­ணியில் உள்­ளனர் என அறிக்­கை­யி­டு­வதும் ஆணைக்­குழு அமைத்து விசா­ரிப்­பது வேடிக்­கை­யான ஆனால் வெட்­கப்­பட வேண்­டிய நிலை­யாகும். 
யார் செய்தார், என்ன நடந்­தது, ஏன் நடந்­தது என்­பது தெரிந்தும் அதை ஊட­கங்கள் முன்­னி­லையில் தெரி­வித்தும் அடுத்த கட்­ட­மாக குற்­ற­வா­ளி­களை இனம்­காட்ட முன்­வ­ராத அர­சியல் சூழலில் மக்கள் நியா­யத்தை எங்கு எதிர்­பார்க்க முடியும். தமிழ் மக்­களின் உண்­மை­யான பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டு­வ­து­மில்லை, முஸ்லிம் மக்­களின் உரி­மைகள் பாது­காக்­கப்­ப­டு­வ­து­மில்லை. சிங்கள மக்கள் இந்த நாட்டில் அமை­தி­யாக வாழ அனு­ம­திக்­கப்­ப­டு­வ­து­மில்லை. இவை இடம்­பெற்றால் இலங்­கையில் அர­சியல் நாடகம் இனிமேல் அரங்­கேற்­றப்­ப­டு­வதும் இல்லை 
இன­வாத நெருப்பு பத்­தி­கொண்­டுள்ள நிலையில் இதில் சிங்­கள, முஸ்லிம், தமிழ் இன­வா­திகள் எண்ணெய் ஊற்­றிக்­கொண்­டுள்­ளனர். இதிலிருந்து மக்களை மீட்க வேண்டும்  என்றால் மனதளவில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். இனவாத, நிற முரண்பாடுகள் ஏற்பட்ட காலங்களில் அவற்றில் இருந்து இனத்தை ஐக்கியப்படுத்த தென்னாபிரிக்கா, அமெரிக்கா, ஆர்ஜென்டீனா போன்ற நாடுகள் எவ்வாறு கையாண்டன என்ற  வரலாறுகள் உள்ளன. எமது நாட்டில் சினிமா, விளையாட்டு போன்றவற்றில்  சமத்துவத்தை  ஏற்படுத்தி மக்கள் மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். ஆனால் இன்று வரையில் அதைக்கூட செய்யும் மனோநிலை எவருக்கும் வந்ததில்லை. 
 இந்த அழிவுகளை நிறுத்த வேண்டும் என்றால் இனவாதத்தை முழுமையாக ஒழித்துக்கட்ட வேண்டும். மக்கள் மனங்களில் நல்ல விதைகளை விதைக்க வேண்டும். அதை சாதாரண செயற்பாடுகளில், சினிமாவில், விளையாட்டுக்களில், வேலைத்திட்டங்களில் ஏற்படுத்த முடியும்.  அனைத்து அடிப்படைவாத அமைப்புகளையும் நிராகரிக்க வேண்டும் .வெறுமனே அரசியல் சுயநலன்களுக்காக மக்கள் மத்தியில் பிரிவினையினை தீண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் அரசியல்வாதிகள் இருக்கும் வரையில், மக்கள் தொடர்ந்தும் அரசியல் நாடகத்தை அங்கீகரிக்கும் வரையில், சுய சிந்தனை இல்லாத அடிப்படைவாத, மதவாத, இனவாத மூடத்தனம் மக்கள் மனங்களில் இருக்கும் வரைக்கும் இன ஒற்றுமை என்பது வெறும் கனவு மட்டுமே. 

Post a Comment

0 Comments