Header Ads

Breaking News

மஹிந்தவை தண்டிப்பேன் ; பாராளுமன்றில் பிரதமர்2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில், 4 ஆயிரம் பில்லியன்வரை தனி நேரடி முறிகள் எவ்வித சட்ட நடவடிக்கையையும் பின்பற்றாது மத்திய வங்கியால் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதற்குப் பொறுப்புக்கூறவேண்டியவராக மஹிந்த ராஜபக்ஷ உள்ளார். மஹிந்த அரசின் ஊழல் மோசடிகளை மூடிமறைத்து சட்ட ஆட்சியை குழித்தோண்டி புதைத்துவிட முடியாது. உடனடியாக இது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்படும்.''
இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் நேற்று தெரிவித்தார்.
சர்சைக்குரிய பிணைமுறி அறிக்கை குறித்து விவாதிக்க கட்சித் தலைவர்களின் கோரிக்கையின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பின்கீழ் சபாநாயகர் கரு ஜயசூரியவால் நேற்றுக் காலை 10.30 மணிக்கு விசேட நாடாளுமன்ற அமர்வு கூட்டப்பட்டது. சபையில் ஏற்பட்ட களேபரத்தால் பிரதமர் முதலாவது தடவையாக தமது கூற்றை வைத்தபோது சபையில் எதிரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சபை 11.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டு 11.50 மணிக்கு கூட்டப்பட்டபோது பிரதமர் தமது உரையை இரண்டாவது முறையாகவும் நிகழ்த்தினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:
"மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த டிசம்பர் 31ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக ஜனாதிபதி விசேட உரையொன்றையும் நிகழ்த்தினார். ஆரம்பகட்ட நடவடிக்கை பிணைமுறி தொடர்பான வாதப்பிரதிவாதம் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்டது.
இதன்படி குறித்த நிலைமையை அறிந்து மேலதிக கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கு சட்டத்தரணி காமினி பிட்டிபன தலைமையில் குழுவொன்றை நியமித்தேன். அந்தக் குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைத்து விவாதம் நடத்தினோம். அதன்பின்னர் மேலதிக விசாரணைக்காக இதன் நடவடிக்கைகள் கோப் குழுவுக்கு வழங்கினோம். கோப்குழு தனது விரிவான விசாரணையை ஆரம்பித்து அதன் அறிக்கையை 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. இதற்கான விவாதமும் நடத்தப்பட்டது. இதன்போது கோப்குழுவின் அறிக்கையையும் அதனுடன் இணைந்த கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட அறிக்கையையும் நான் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் அனுப்பினேன்.
இதன்போது, பிணைமுறி கொடுக்கல் வாங்கலில் மோசடி நடந்துள்ளதா? அர்ஜுன மகேந்திரன் பொறுப்புக்கூற வேண்டுமா? அப்படியாயின், அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கமுடியுமா? என கடிதம் மூலம் சட்டமா அதிபரிடம் கோரினேன். இதன்பின்னர் சட்டமா அதிபர் கோரும் அனைத்து ஆவணங்களை வழங்குமாறு நாடாளுமன்ற செயலாளருக்கு அறிவித்தேன். இந்நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தால் சட்டத்தரணிகள் குழுவொன்று அமைக்கப்பட்டு தற்போதும் அதன் விசாரணைகள் நடந்தவண்ணமுள்ளன.
ஊழியர் சேமலாப நிதியத்திலும் மோசடி நடைபெற்றுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அப்போது கோரியதன் பிரகாரம் சட்டமா அதிபரின் யோசனையைப் பெற்று அதற்கான விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் நான் மத்திய வங்கி ஆளுநருக்கு உத்தரவிட்டேன். இது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு அதன் அறிக்கை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் கணக்காய்வாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சர்வதேசத்தின் உதவியை நாடல் அத்துடன் மத்திய வங்கியில் நட்டம் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து பார்க்குமாறு உலக வங்கியிடமும் சர்வதேச நாணய நிதியத்திடமும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தேன். பிணைமுறி வழங்கலின்போது காணப்படும் சந்தை நிலைவரத்தின் பிரகாரமே இலாபம் மற்றும் நட்டத்தை தீர்மானிக்க முடியும் என்றும் பிணைமுறி நட்டத்தை நிர்ணயிப்பதற்கான சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்முறை தம்மிடம் கிடையாது எனவும் மேற்குறித்த இரு நிறுவனங்களும் கூறின. எனவே, 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் இது தொடர்பான உரிய நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம். எமது செயற்பாடுகளையும் ஆதாரங்களையும் நாடாளுமன்றத்திற்கும் கோப்குழுவிற்கும் சட்டமா அதிபருக்கும் ஆற்றுப்படுத்தியுள்ளோம். அதன்பின்னர் ஜனாதிபதியினாலும் விசேட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.
பெர்பெச்சுவல் நிறுவனத்திற்கு கட்டுப்பாடு இதன்படி 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் திகதி நிதிச் சபையால் பெர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு விதித்ததுடன், அந் நிறுவனத்திற்கான நிதி பயன்பாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் தடை செய்தோம். அந்தத் தடையை மேலும் 6 மாதத்திற்கு நீடித்தோம். இதன்படி அந்த நிறுவனத்தின் கணக்கிலுள்ள 12 பில்லியன் ரூபா மத்திய வங்கியின் சேமிப்பில் உள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் பிணைமுறி மோசடியால் 11 பில்லியன் நட்டம் அடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அப்படியாயின் சட்டமா அதிபர் இது தொடர்பாக தனது காரணங்களையும் ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் ஆற்றுப்படுத்தி வழக்கு தாக்கல்செய்தால் அரசுக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடுசெய்வதற்கு அந்தப் பணத்தை எமக்கு மீளபெற்றுக்கொள்ள முடியும்.
நல்லாட்சிக்கான வெற்றி இலங்கை வரலாற்றில் பாரியளவிலான மோசடிகள் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பின்றியும் துரிதமாகவும் முன்னெடுக்கப்பட்டமை இதுவே முதற்தடவையாகும். இது நல்லாட்சி அரசின் பாரிய வெற்றியாகும். பத்து வருடங்களுக்கு நிதி தொடர்பான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கொடுக்கல் வாங்கல்கள் எதுவும் நாடாளுமன்றத்திற்கு வெளியிடப்படவில்லை. எனினும் இதனை நாம் மாற்றியமைத்தோம்.
முன்னைய ஆட்சியின் பிணைமுறி மோசடிக்கும் தண்டனை அதேபோன்று 2008ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரைக்குமான பிணைமுறி வழங்கலின் மோசடிகள் குறித்தும் விசாரிக்குமாறு ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி குறித்த காலப்பகுதியில் நடந்த மோசடிகளை துரித கதியில் விசாரணை செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை விடுத்துள்ளேன். இதன் ஊடாக துரித விசாரணைகள் நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குவோம்.
2008ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டுவரைக்கும் நேரடியாகவே பிணைமுறி வழங்கப்பட்டுள்ளது. இந்த செயன்முறையில் எந்தவொரு ஒழுங்கும் இருக்கவில்லை. இந்தக் காலப்பகுதியில் 5,147 பில்லியன் ரூபா பிணைமுறி வழங்கப்பட்டுள்ளதுடன், அதில் 4,702 பில்லியன் ரூபா தனி நேரடி முறைமை மூலமாக பிணைமுறி விடுக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் 90 வீதமான பிணைமுறி தனி நேரடி முறைமை மூலமே பிணைமுறி வழங்கப்பட்டுள்ளது. இவை நிதிச் சபையின் அனுமதியில்லாமலே முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய வங்கி சார்பாக இருந்த முன்னாள் நிதி அமைச்சர் நாடாளுமன்றத்திற்கு பதில் கூறவேண்டும். நாட்டு மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் இந்த இரகசியத்தை அறிந்துகொள்ள வேண்டும்.
நாடாளுமன்றத்தின் நிதி பலத்தை அதிகரிக்கவே எமது அரசு தொடர்ந்து செயற்பட்டுவருகின்றது. 2008 முதல் 2014 வரையான பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அரச நிதிக் குழுவின் தலைவருடன் பேச்சுகள் நடத்தவுள்ளேன். குறித்த காலப்பகுதியின் மத்திய வங்கி கணக்கறிக்கையை அப்போதைய கோப்குழு ஏற்றுக்கொண்டமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பிணைமுறி மோசடி தொடர்பான வாதம் அரசியலாக மாறி போலியான வதந்திகள் பரப்பட்டு வருகின்றன. இதனை நம்பிக்கை கொள்ளாமல் உண்மையைக் கண்டறிவோம்.
புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த நானும் ஜனாதிபதியும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். இது எமக்கு புதிய அனுபவமாகும். இது கட்சி வாதம் புரிவோரால் புரிந்துகொள்ளமுடியாத செயற்படாகும். இதன்போது தப்பு தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதனை நாம் திருத்திக்கொள்ளவேண்டும். எனினும், முன்னைய ஆட்சிக்காலத்தின் மோசடிகள் மூடி மறைத்து சட்டவாட்சியை குழித்தோண்டி புதைப்பதற்கு நாம் தயாராக இல்லை. கடன் சுமையும் நீதி நிலைநாட்டப்படாத ஊழல் மோசடிமிக்க நாட்டையே நாம் பொறுப்பேற்றோம். தற்போது அந்தப் பாதையை நாம் மாற்றும் பாதைக்கு நாட்டைக் கொண்டுவந்துள்ளோம். நீதியான சமூகத்தை உருவாக்க நாம்பாடுபடுவோம்'' என்றார்.

No comments