Comments System

header ads

ஜெனீவாவில் இலங்கைக்கு கடும் அழுத்தம் ; உறைந்து போயுள்ள இலங்கை


ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பாக கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ள கூட்டங்களில் இலங்கை குறித்த நிலைமைகள் விவாதிக்கப்படவுள்ளதாக ஜெனீவா தகவல்கள் கூறுவதாக நமது செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த ஒக்ரோபர் மாதம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் நடைபெற்ற இலங்கை தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் குறித்து கவலை வெளியிட்டிருந்தன.
குறிப்பாக 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் ரணில் மைத்தரி நல்லாட்சி அரசாங்கம் உரிய முறையில் செயற்படவில்லை என்றும் தமிழ் மக்கள் அதிருப்பதியடைந்துள்ளனர் என்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கண்டம் வெயிட்டிருந்தன.
90 நாடுகள் பங்குபற்றிய அந்த மீளாய்வுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள பூகோள காலக்கிரக மீளாய்வு மாநாட்டில் வெனின்சுலா, மசிடோனியா (Macedonia) ஆகிய நாடுகள் வடக்கு கிழக்கு மக்களின் தற்போதைய நிலைமை தொடர்பாக கருத்து வெளியிடலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதாக கூறப்படுகின்றது.
கடந்த ஒக்ரோபர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் மசிடோனியா தமிழ் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் குறித்து அரசாங்கம் கவனத்தில் எடுக்கவில்லையென சுட்டிக்காட்டியிருந்தது. அதேவேளை 13 அவது திருத்தச்சட்டத்திற்கும் மேலாக அதிகாரங்கள் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு பகிரப்பட வேண்டும் என 16 ஆம் திகதி நடைபெறவுள்ள மீளாய்வுக் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஓக்ரோபர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் 13 ஆவது திருத்தச்சட்டம் குறித்து ஜெனீவாவில் உள்ள இந்திய இராஜதந்திரி, பிரதிவெளிவிவகார அமைச்சர் ஹர்ஷா டி சில்வாவிடம் கேள்வி தொடுத்திருந்தார். அதேவேளை இனிமேல் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடிய நிலை இல்லையென்றும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் மார்ச் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் இலங்கை அரசாங்கம் கடுமையான நெருக்குவாரங்களை எதிர்நோக்கும் எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சரியான பதில் ஒன்றை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் எனவும் கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இராஜதந்தரி ஒருவர் கூறியதாக நமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
அதேவேளை கடந்த எட்டு ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் சரியான முறையில் பொறுப்புக் கூறவில்லை என்றும் இரகசிய முகாம்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், தமிழ் அரசியல் கைதிகள் போன்ற விடயங்களில், ஜெனீவா மனித உரிமைச் சபையின் பரிந்துரைகள் பின்பற்றப்படவில்லை எனவும் இலங்கை அரசாங்கத்துக்கு மனித உரிமைச் சபையின் ஆணையாளர் மீண்டும் எடுத்துக் கூறியுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை நிரந்த அரசியல் தீர்வு ஒன்றை முன்வைப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்த தவறியுள்ளதாக ஜெனீவாவில் உள்ள அமெரிக்க தூதுவர், இலங்கைத் தூதுவருக்கு எடுத்துக் கூறியுள்ளதாகவும் அது தொடர்பாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் உள்ளகத் தகவல்கள் மேலும் கூறுவதாக நமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments