கல்முனையை பிரிப்பது அறிவார்ந்த முடிவல்ல - சேகு இஸ்ஸதீன் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 27, 2017

கல்முனையை பிரிப்பது அறிவார்ந்த முடிவல்ல - சேகு இஸ்ஸதீன்
அம்பாறை மாவட்டத்தின் தமிழ்மொழி தலைநகரமாகவும், கிழக்கு மாகாணத்தின் முக்கிய முஸ்லிம் கேந்திரஸ்தானமுமாகவும் விளங்கி வந்த கல்முனை மாநகர எல்லைகளை நான்காகத் துண்டாடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதான தீர்மானம் தூரதிருஷ்டியான முடிவல்ல. பிரதேசவாத தூண்டல்களைப் புறத்தொதுக்கி, பிரிவனைக்கு வித்திட்ட காரணங்களை தீர்த்துக்கொள்ள நீடித்து நிலைக்கக்கூடிய நியாயங்ளைக் கண்டறிந்து கல்முனை மாநகரத்தின் பெருமையையும், பொலிவையும் பேணிக்காக்கும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று முஸ்லிம் தேசிய முன்னனியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி எம்.எச். சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார்.

23.11.2017 வியாழன் மாலை மதினாபுரம் சேகு மலைச்சோலையில் நடைபெற்ற செயலமர்வின் போது பேசிய சேகு தொடர்ந்து கூறியதாவது: சாய்ந்தமருது பத்தாம் பசலித்தனமான கிராமம் ஒன்றல்ல. பண்பாளர்களும் படிப்பாளிகளும் பக்தி மான்களும், கவிஞர்களும் நிறைந்த ஒரு கலாபூர்வமான பண்பட்ட கிராமமாகும். முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரசீக்கு கல்முனை மாநகர எல்லைக்குள் அதிக ஆதரவை அளித்த கிராமம் சாய்ந்தமருதுதான். எனக்கும் தனிப்பட்ட முறையில் அதிக வாக்குகளை அளித்த கிராமமும் அதுதான் என்பதில் நான் சாய்ந்தமருதுக்கும் முன்னாள் பா.உ. நிஜாமுத்தின் அவர்களுக்கும் இன்றும் நன்றியுள்ளவனாகவே இருக்கிறேன். இருந்தும், சாய்ந்தமருது தமது பிரதேசத்திற்கென தனியான ஒரு பிரதேச சபை ஆட்சியை வலியுறுத்தி பெரும் போராட்டத்தை வெற்றிகரமாக நடாத்தியிருப்பது கவலையளிக்கிறது. 

இந்தப் போராடத்திற்குப் பின்னணியாக வெறும் பிரதேசவாதமே கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக கூறப்படும் கதையில் எள்ளளவும் உண்மை இருக்காது என்பதே எமது நம்பிக்கையாகும். எனவே இதற்கான உண்மையைக் கண்டறிய நதி மூலம் ரிஷி மூலம் தேடிச் செல்ல வேண்டிய எந்த அவசியமுமே இந்த விடயத்தில் இல்லை. ஏனெனில்,  குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தின் சீரணிக்கச் சிரமமான சுயலாப சூதாட்டங்களும் தன்னாதிக்க தகிடு தத்தங்களும் மிக நீண்டகாலமாக சாய்ந்தமருதை சலிப்படையச் செய்து வந்துள்ளமை சரித்திரத்தின் பக்கங்களாகும். 

அத்தோடு கல்முனை மாநகர எல்லைக்குள் கல்முனை முஸ்லிம்களை விடவும் சனத்தொகையில் அதிகமுள்ளவர்கள் சாய்ந்தமருது முஸ்லிம்களே என்பதும் கவனத்திற்கு எடுக்காமல் விடப்பட்ட ஒரு உறுத்தும் உண்மையாகும். கல்முனை மாநகர வளங்களின் பங்கீடு சாய்ந்தமருதுக்கு அரும்பூட்டாகவே வழங்கப்பட்டு வந்துள்ளன என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாமல் இல்லை. இது அழிக்க முடியாத, நினைக்க வருத்தமான கசப்பான வரலாறாகும். மேலதிகமாக அரசியல் பதவிகளின் பங்கீட்டு முறைகள் பற்றிய எந்த அர்த்தபு~;டியான ஏற்பாட்டையும் அணுகுமுறையையும் அடிப்படையாகக் கொள்ளாமல் தான்தோன்றித்தமாக, தற்குறித்தனமாக தமக்கே அனைத்தையும் தக்க வைத்துக்கொள்ள அந்தக் குறிப்பிட்ட பிரதேசம் நடந்து கொண்டுள்ளதான குமைச்சல்கள் குமட்டலை ஏற்படுத்தக்கூடியன. கல்முனையில் எம்.பி. இருக்கும் நிலையிலேயே சாய்ந்தமருதின் மேயர் பதவியை வெட்டி பங்கு போட்டு கல்முனைக்கு வழங்கப்பட்டமை முன்யோசனையற்ற முயற்சியாக உள்ளது. அதனால் இன்று கல்முனை மாநகரம் கன்னாபின்னாவென்று உருக்குலைந்து நிர்வாணமாய் நிற்கிறது. நான்காக துண்டாடப்பட்டுள்ள கல்முனை மாநகரத்தின் எல்லைகளை பிரிக்கும் போது கல்முனை டவுணையும், பெரும் நிலப்பரப்பையும் தமிழர்களுக்கான பிரதேசத்தோடு சேர்த்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எதிர்பார்க்கப்படும் ஒன்றாகும். 

அந்தப் பிரச்சினையில் கல்முனை முஸ்லிம், தமிழர்களுக்குள் கடுப்புகள் அதிகரித்து சமாதான வாழ்வு சங்கடமாகிப் போகும் சாத்தியமே கண் முன் நிழலாடுகிறது. இன்று நாளை என்று இல்லாவிட்டாலும், வடகிழக்கிற்கு அதிகாரம் வழங்கப்படும் போது கல்முனை டவுணுடன் கூடிய தமிழர் பிரதேசம் கல்முனை மாநகரசபையாக ஆக்கப்படுவது சாத்தியமற்ற விசயம் என்று கூறமுடியாது. அத்தோடு துண்டுகளாக உடைக்கப்படும் போது கல்முனையின் கரையோர மாவட்டத்திற்கான கனவை கலைக்க வேண்டி ஏற்படும். மாநகரமாக இருந்து இப்போது கல்முனை நகரமாகக் கூட இல்லாமல் போய் மேலாடை இழந்து மாநகர சபையையும் பறிகொடுத்த பின்னர் கரையோர மாவட்டத்தை கல்முனை பெறுவது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போலாகி விடும். 

அதனால், கல்முனையைப் பார்க்க இப்போது இன்னும் தகுதி கூடி இருக்கும் சம்மாந்துறையோ அல்லது அக்கரைப்பற்றோ தான் கரையோர மாவட்டத்திற்கு உரிமைகோரக்கூடிய பிரதேசங்களாக மாறிவிடும். பேராசை பெரும் தரித்திரியம் என்பது தொடர்ந்தும் சோதித்து விடாதிருக்க, கல்முனை மாநகரின் பெருமையையும், பொலிவையும் தக்க வைத்துக்கொள்ள, முஸ்லிம் தலைமைத்துவத்தின் கோட்டையாய் கல்முனை மாநகரத்தையே மீண்டும் மிளிரச் செய்ய, நிர்வாக, அபிவிருத்தி, அனுகூலங்களை கல்முனை அதிகரித்து அடைந்து கொள்ள, கல்முனை மாநகரம் துண்டுகளாக அல்லாமல் ஒன்றிணைந்ததாய் ஒற்றுமையாய் இருப்பது அவசியமாகும். 

அதனை உறுதிப்படுத்த இப்போதுள்ள இறுதி உபாயம் இது ஒன்றே ஒன்றுதான். கல்முனை மாநகரத்தின் எம்.பி. பதவி, மேயர் பதவி, பிரதி மேயர் பதவிகளை அண்மைப் பிரதேசங்களையும் சேர்த்து அறிவூர்வமாக சிந்தித்து தாராள மனப்பான்மையோடு பகிர்ந்து கொள்வது பற்றி கல்முனையும் சாய்ந்தமருதும் சம அந்தஸ்தில் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிக்க வேண்டும். 

ஒரு தவணையில் கல்முனைக்கு எம்.பி. கிடைக்கும் போது அந்தத் தவணையில் சாய்ந்தமருதுக்கு மேயர் பதவியும் அடுத்த தவணையின் போது கல்முனைக்கு மேயர் பதவியும் சாய்ந்தமருதுக்கு எம்.பி. பதவியும் என்று இரு முக்கிய பிரதேசங்களுக்குமிடையில் எழுத்திலான ஒப்பந்தம் செய்யப்பட்டு சத்தியவாக்கெடுப்போடு நிறைவேற்றப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். 

அத்தோடு எம்.பி. பதவியின் இறுதி வருடம் மருதமுனைக்கும், பிரதி மேயர் பதவியின் முதல் இரண்டு வருடங்களும் தமிழர்களுக்கும் பின்னுள்ள வருடங்கள் நற்பிட்டி முனைக்கும் என்பதையும் ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தமிழர்கள் அதனை ஏற்க மறுப்பின் அந்த இரண்டு வருட பிரதி மேயர் பதவியும் சேர்த்து மருதமுனைக்கு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதிகாரங்கள் தமிழ் பிரதேசம் உட்பட பகிர்ந்து கொள்ளப்படுவதன் மூலம் கல்முனை மாநகரத்தின் முக்கியத்துவத்தையும் மதிப்பு மாண்பையும் இன ஒற்றுமைக்கான உதாரணத்தையும் அதிகரிக்க முடியும் என்பதுடன் கரையோர மாவட்டத்திற்கான தகுதியையும் கல்முனை மாநகரம் பெறமுடியும். 

இந்த மொத்த விடயத்தையும் கல்முனையே ஆரம்பித்து சாய்ந்தமருதோடு பேசி முடித்துக் கொள்ள வேண்டும். இதுவே கடைசி உபாயமாகவிருக்கும். இனி இறைவன் விட்ட வழி என்றும் கூறினார். 

எஸ்.எம்.  இத்ரீஸ்


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages