Header Ads

Breaking News

சமஸ்டியே நமது இலக்கு , அதை அடையவே இடைகால அறிக்கை ; படித்துவிட்டு வாருங்கள் - சுமந்திரன் எம்.பிஅரசியலமைப்பு இடைக்கால அறிக்கையில் தமிழர்களுக்கு எதுவும் இல்லை என்று கூறுபவர்கள் முதலமைச்சராக இருந்தாலும் அமைச்சர்களாக இருந்தாலும் அல்லது தேசியக் கொடியை ஏற்ற முடியாது என போலித் தேசியம் பேசுபவர்களாக இருப்பினும் அவர்களுடன் நேரடியாக விவாதிப்பதற்கு தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

விவாதிக்க வருபவர்கள் இடைக்கால அறிக்கையை முதலில் முழுமையாகப் படித்துவிட்டு வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், தமிழ் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளைத் தெரியாதவர்களே மக்கள் மத்தியில் குழுப்பநிலையை உருவாக்குகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி நிமலன் சௌந்தர நாயகத்தின் 17 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் இன்று சிறப்புரையாற்றுகைலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
நிமலன் சௌந்தரநாயகம், 2000.11.07 அன்று மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்டமை தெரிந்ததே. அன்னாரின் பதினேழாம் ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் கடைப்பிடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முறக்கொட்டான்சேனை தேவபுரம் இலங்கை கிறிஸ்தவ சமுக மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், இலங்கை தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்ம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நிமலன் சௌந்தர நாயகம் மரணித்து 17 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் அவரை  இதுகாலவரை நினைவுகூராத தமிழரசுக்கட்சி தற்போது தேர்தல் காலம் நெருங்கும்போது நினைவுகூரல் நிகழ்வினை நடாத்துவது குறித்து சில இளைஞர்கள் இக்கூட்டத்தில் தமது அதிருப்தியை வெளியிட்டனர். இதனால் சிலநிமிட நேரம் அமளி துமளி ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பேசுகையில்,
“சமஷ்டி குறித்து யாரும் பயப்படத் தேவையில்லை, சமஷ்டியை முதலில் அறிமுக்படுத்தியவர்கள் சிங்களவர்கள். இதை முதலில் பிரித்தானியர்களுக்கு பரிந்துரை செய்தவர்கள் கண்டிய சிங்கவர்கள். இது சிங்கள மக்களுக்கு எதிரானது என எவரும் கூற முடியாது. இந்த விடயங்களை அவர்கள் பயப்படாமல் இருக்கும் வகையில் கூற வேண்டும்.
ஒரு நாட்டின் அரசியலமைப்பு மக்கள் பார்த்து பயப்படும் ஒன்றாக இருக்க கூடாது. சொற்களைக் கண்டு பயந்தால் அந்த செற்களைத் தள்ளி வைத்துவிட்டு உள்ளடக்கங்களைப் பார்கக்க வேண்டும். 70 ஆண்டுகளாக எமது மக்களின் அபிலாசைகளாக இருந்த எங்களை எமது மாநிலத்தில் ஆட்சி செய்கின்ற அதிகாரம் இருக்கிறதா இல்லையா? ஏன பார்க்க வேண்டும். சொற்களை வைத்து போலித் தேசிய வாதம் பேசாதீர்கள். அனைத்துப் பாராளுமன்ற சட்டங்களும் மாகாணசபை நியதிச் சட்டங்களும் துணைநிலை சட்டவாக்கங்களும் சிங்களத்திலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் இயற்றப்படுதல் வேண்டும் என உபகுழு அறிக்கையிலே தெழிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டதில் சிங்கள மொழி மேலோங்கும் என கூறப்படவில்லை. வருகின்ற சட்டத்திலே மூன்று மொழிகளுக்கும் சம அதிகாரம் வழங்கப்பட வேண்டும். எங்களுடைய மக்களின் அடிப்படை விடயங்கள் இடைக்கால அறிக்கையில் மறுக்கப்பட்டுள்ளன என எவராலும் கூற முடியாது. நாங்கள் தற்போது அரைவாசி தூரம்தான் வந்துள்ளளோம். இது சரிவரும் சரிவராமலும் போய்விடலாம். சரிவராமல் போய்விடுமோ என்ற பயத்தினாலே இப்போதே வெளிவாருங்கள் என்று கூறும் மூடர் யார்? மூடத்தனமாக மக்களை வீணாக உசுப்பேத்தி அவர்களுக்குள்ளே வீணான பீதியை செலுத்தி இதுகாலவரை நாங்கள் இழந்த இழப்புகளுக்கு மாற்றீடாக ஒரு அரசியல் தீர்வு கிடைக்க வருகின்ற சந்தர்ப்பத்தை நாங்களே மழுங்கடித்து எங்கள் தலையில் நாங்களே மண்ணைப் போட வேண்டும் என்று சொல்லுகின்றவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்.
இது எங்களுடைய மக்களுடைய உள்ளக் குமுறல், கட்சிகள் சம்மந்தமான விடயமும் அல்ல. எந்த அரசியல் கட்சியின் பெயரினால் வந்திருந்தாலும் கூட இறுதியாக மக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை அபிலாசைகள் இவைகள்தான். இந்த இலக்கை அடைந்துகொள்வதற்க நிமலன் சௌந்தரநாயகம் அவர்களும் பயங்கரமான சூழ்நிலையிலும் அரசியலில் இறங்கினார். அவரும் தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இது போல பலரும் தமது உயிரை மாய்த்துக் கொண்டார்கள். பல விதமான நிகழ்வுகள் நடைபெற்றன.
நாங்கள் பாராம்பரியமாக வாழ்ந்துவந்த பிரதேசத்திலே மிடுக்கோடு ஒரு நாட்டுக்குள்ளே சிங்கள மக்களோடு சேர்ந்து வாழுகிறார்கள், சம உரிமையோடு வாழுகிறார்கள் என்ற சரித்திரித்தை படிக்க வேண்டுமா ஏன்பதை சிந்தித்துப் பாருங்கள். இலங்கைத் தீவிலே வாழுகின்ற தமிழ் மக்களுக்கு நிறைவான ஒரு அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது சொகுசான வாழ்க்கை காத்திருக்க அதனைப் புறம் தள்ளி அரசியல் என்னும் சாக்கடைக்குள் புகுந்து தனது உயிரை மாய்த்துக்கொண்டவர் நிமலன் சௌந்தரநாயகம் என்பதனைச் சொல்லிவைக்க விரும்புகிறேன்.” என்று குறிப்பிட்டார் அவர்.

No comments