விருது பெற்றவர்களை பிரதி அமைச்சர் பைஷால் காசிம் வாழ்த்தினார்தேசிய ரீதியிலும், மாகாண ரீதியிலும் மூன்று விருதுகளைப் பெற்ற நிந்தவூர் ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு.
            ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
தேசிய ரீதியில் 'தேசிய நீலப் பசுமை ஜனாதிபதி வெள்ளி விருது-2017 யில் இரண்டாமிடத்தையும், கிழக்கு மாகாண உற்பத்தித் திறன் விருது-2016யில் முதலாமிடத்தையும் பெற்று கிழக்கு மாகாண சுகாதாரத் துறைக்குப் பெருமையைச் சேர்த்த நிந்தவூர் ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரையும் பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வு நேற்று மாலை நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

வைத்தியசாலை அபிவிருத்திக் குழுத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.நசீர் அஹமட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, சாதனையாளர்களைப் பாராட்டி கௌரவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.அலாவுதீன், பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.இஸ்ஸதீன் உள்ளிட்ட சுகாதார சேவை உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்வைத்தியசாலைக்கு 2011ம் ஆண்டிலும் உற்பத்தித் திறன் முதலாமிட விருதொன்று கிடைத்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

 
மொத்தம் மூன்று விருதுகளும் கிடைக்கக் காரணமாகவிருந்து உழைத்த வைத்திய அத்தியேட்சகர் திருமதி.சக்கிலா ராணி இஸ்ஸதீன், ஏனைய வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள், ஏனைய பணியாட்கள் அனைவருக்கும் பிரதியமைச்சரால் சான்றிதழ், நினைவுச் சின்னம் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதேவேளை வைத்திய அத்தியேட்சகர் திருமதி.சக்கிலா ராணி இஸ்ஸதீனின் தன்னலங்கருதாச் சேவையைப் பாராட்டி வைத்தியசாலை உத்தியோகத்தர்களும், அபிவிருத்தி குழுவினரும், பிரதியமைச்சர் பைசால் காசீமும் பொன்னாடை போற்றி, நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவித்தனர்.
 
பிரதியமைச்சர் பைசால் காசீம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- ' அரசாங்கம் இந்த வருடமும் சுகாதாரத் துறைக்கே அதிக பணத்தை ஒதுக்கியுள்ளது. அரசு எவ்வளவு பணத்தை ஒதுக்கினாலும், நாம் என்னதான் விருதுகளைப் பெற்றாலும் நோயாளர்கள் திருப்திப்படவேண்டும். அவர்கள் திருப்திப்படும் வகையில் நமது வைத்தியசேவைகள் அமைய வேண்டும். நோயாளர்கள் குறை கூறக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன். உதாரணமாக காலஞ் சென்ற வைத்தியர் முருகேசுப்பிள்ளை அவர்களது அணுகு முறையை நாமனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என நான் அன்பாக வேண்டுகிறேன்' எனக் கேட்டுக் கொண்டார்.

Post a Comment

0 Comments