Comments System

header ads

புலமைப்பரிசில் பரீட்சை பெற்றோரும் அதிகாரிகளும் கவனத்தில் கொள்க - எம். ஏ.எம். அஸ்ஹர் மு ன்னாள் உதவி கல்வி பணிப்பாளர்



தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகி பல மாணவர்களும்,ஆசிரியர்களும், பெற்றாரும் மிக சந்தோஷமாக இருக்கும் வேளை சிலர் தாங்கள்,தங்களது பிள்ளைகள்,மாணவர்கள் சித்தியடையத் தவறிவிட்டனரே என்னும் கவலையிலுள்ளனர்.

இப் பரீட்சையானது பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களைச் சேர்ப்பதற்குத் தெரிவு செய்வதற்கும், குறைந்த வருமானமுள்ள பெற்றார்களது பிள்ளைகளுக்கு உதவிப் பணம் வழங்குவதற்காகவுமே பல தசாப்த காலமாக நடைபெற்று வருகின்றது.இதற்காக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் மாவட்ட அடிப்படையில் தெரிவு செய்யப்படுகின்றனர்.
மாவட்ட அடிப்படையில் வெட்டுப்புள்ளி தீர்மானிக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே இத் தெரிவு நடைபெறுகின்றது.மாவட்டத்தின்  சனத்தொகை தோற்றியோர் எண்ணிக்கை , மொழி மூலம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே மாவட்டத்திற்கான எண்ணிக்கை கணக்கிடப்படுகின்றது.

இதில் பாஸ்,பைல் என்ற பதம் இல்லை.பெற்றார்கள் இதனை உபயோகித்து சிலர் தம் பிள்ளை பைல் என கவலையடைகின்றனர்.
உண்மையில் வெட்டுப் புள்ளிக்கு குறைந்தவர்கள் சித்தியடையத் தவறியவர்கள் என எண்ணலாகாது.இவர்கள் குறித்த நோக்கத்திற்கு தெரிவு செய்யப்படவில்லை.அவ்வளவுதான்.தெரிவு செய்யப்பட்டால்தான் வைத்தியர்,பொறியியலாளர் மற்றும் உயர் படிப்பு படிக்கலாம் என்ற கருத்து களையப்பட்டு தெரிவு செய்யப்படாத மாவர்களுக்கு வழிகாட்டல் வேண்டும்.
பல வருடங்களாக இப் பரீட்சையை நிறுத்த வேண்டும் என்னும் கருத்தை முன்னெடுத்த போதிலும் இன்னும் நிறுத்தப்படவில்லை.இப்போதும் கல்வி அமைச்சர் நிறுத்தப்படுவதற்கான கருத்தையும் தெரிவித்துள்ளார்.

 இது ஒரு புறமிருக்க பாடசாலைகள் வருடா வருடம் புலமைப் பரிசில் பரீட்சை யில் வெற்றி பெற்ற மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாராட்டும் விழாக்கள் வைப்பது வழக்கம்.சில வேளை இந் நிகழ்ச்சி நிரல் பரீட்சை முடிவு வெளியாகி அடுத்தடுத்த மாதங்களிலும், அதனையும் அடுத்த வருடத்திலும் நடைபெறுவது கண்கூடு.
வலயக் கல்வி அலுவலகங்களில் இக்காலங்கிளில் அதிகாரிகளைச் சந்திப்பதும் சிரமமே.ஏனெனில் தொடர்ந்து ஒவ்வொரு பாடசாலைகளிலும் வைபவங்கள் நடைபெறுவதுதான்.

வைபவங்கள் நடாத்தப்படுவது பிழையில்லை.கட்டாயம் . மாணவர்கள்,ஆசிரியர்கள் பாராட்டப்படல்  வேண்டும். ஆனால் பாராட்டப்படும் முறையில்தான் மாற்றம் வேண்டும்.
ஒரு மாணவன் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளி பெற்றுவிட்டால் அந்த மாணவனுக்காக அவனது பெற்றார் செலவு செய்யும் தொகையை சற்று கணக்கிட்டுப்பாருங்கள்.ரியுசன் பீஸ் வேறு,புத்தக ம், ஒப்படைகளுக்கான செலவு,தெரிவு செய்யப்பட்ட குற்றத்திற்காக தன்னைப் பாராட்ட வழங்க வேண்டிய பாராட்டுச் செலவுத் தொகை பல ஆயிரங்கள். இது எ் வகையில் நியாயம்.கற்றுக்கொடுத்த ஆசிரியர் நன்மைக்காக இலவசமாக கற்றுக் கொடுத்தாரா?விழா என்ற போர்வையில் பல ஆயிரங்கள் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளிடமிருந்து அறவிட்டு யார் யாரெல்லாம் விழாவில் கலந்து விருந்துண்ணுகின்றனர்.இதனால் பண விரயம் ம்ட்டுமல்ல பாடசாலைகளில் கல்வி நடைபெறும் காலமும் பாதிக்கப்படுகின்றது.ஒரு வலயத்தில்  வருடாந்தம் சுமார் 50க்கு மேற்பட்ட பாடசாலைகளில் விழா எடுக்கும்போது அனைத்துக்கும் வலயக் கல்விப் பணிப்பாளர் செல்ல வேண்டியுள்ளது.அலுவக கருமத்திலும் பாதிப்புத்தான்.
பாடசாலை அதிபர்கள் இவ் விழாவை தனித்தனியாக நடாத்தாது கோட்ட ரீதியில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் பால பாடசாலைகளை இணைத்து மாணவர்களின் நிதியிலன்றி ஊரிலுள்ள உதவுவோரிடமிருந்து பொது நிறுவனங்கள் ஊடாக பிரமாண்டமான விழாக்களை ஒழுங்கு செய்யலாம்.இதில் அதிபர் ஆசிரியர்கள்,மாணவர்கள்,இதற்குழைத்தவர்கள் பாராட்டப்படலாம்.

Post a Comment

0 Comments