Header Ads

Breaking News

வாழும் சரித்திரம் தலைவர் ஹக்கீம்; ரவூப் ஹக்கீம் அல்லது சக்கர வியூகம்


மன்சூர்  ஏ காதர்
பிரதி செயலாளர் நாயகம்
ஸ்ரீ லங்கா  முஸ்லிம் காங்கிரஸ்

வாழும் சரித்திரம் தலைவர் ஹக்கீம், ரவூப் ஹக்கீம் அல்லது சக்கர வியூகம்                                                
                                I

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் தன்னிடம் சட்டத் துறையில் ஜூனியராகக் கடமை புரிந்த அந்த இளம் சட்டத்தரணியின் துறைசார் ஆற்றல் பற்றி மிகச் சரியான ஒரு கணிப்பைக் கொண்டிருந்தார். எனினும் தானும் அந்த அரசியல் இயக்கத்தில் இணையப் போகின்றேன் எனறு தன் சீனியரிடம் தெரிவிக்கப்பட்ட அந்த ஜூனியரின் விருப்பமானது அஷ்ரஃப் அவர்களை ஒரு வகையில்  ஆச்சரியத்துக்கு உள்ளாக்கிற்று.


ஏனெனில் அரசியலில் நுழைகின்ற எல்லோருமே தங்களுக்கான பாராளுமன்ற இருக்கை பற்றிய ஒரு கற்பனை வரைபடத்தைக் கீறிக் கொண்டே அதில் காலடி எடுத்து வைப்பது பெரும்பாலும் வழக்கத்தில் இருந்தது.

அதிலும் முக்கியமாக மத்திய மாகாணத்தைச் சேர்ந்த அந்த இளம் சட்டத்தரணியானவர் அங்கு கவர்ச்சி கரமான தலைமையாகத் திகழ்ந்த ஏ.ஸீ.எஸ். ஹமீட் அவர்களின் அதிகாரம் மிக்க அமைச்சுப் பதவியாலும் ஆங்கிலப் புலமையாலும் கவரப்பட்டிருக்க வேண்டியதே முறையானதாகும். அத்துடன் இலங்கை முஸ்லிம்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்களின் அரசியல் கட்;சியாக ஐ.தே.க.வையே கருதினர்.

எனவே இயல்பாகவே மத்திய மாகாணத்தில் அரசியலுக்குப் புதியவர்களான யாராவது  முஸ்லிம்கள் ஐ.தே.க.வினதும் ஏ.ஸீ.எஸ். ஹமீட் அவர்களினதும் தோள்களிலும் ஏறி நின்றே தங்களின் உயரத்தை வெளியுலகுக்குக் காட்டலாம் என்பதே அப்போது எழுதப்படாத விதி.

இத்தகைய இயல்பான - இலகுவான வழி முறைகள் புலனுக்குத் தெரிய அதனை விடுத்து கரடுமுரடாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்த அரசியல் இயக்கத்தில் இணையத் துடிப்பது உண்மையில் அவ்விளைஞனின் மனதிலுள்ள சமூக அக்கறையின் வெளிப்படே என்பதை அஷ்ரஃப் தெளிவாகப் புரிந்து கொண்டார். மேலும், அப்போது அஷ்ரஃப் அவர்களின் அரசியல் செல் நெறியை நோக்கிப் பயணம் செய்வது ஒரு தற் கொலைக்குச் சமானமக எண்ணப்பட்ட காலத்தில்; மத்திய மாகாணத்தைச் சேர்ந்த இவர் இணையவும் அர்ப்பணிப்புடன் செயற்படவும் முன் வந்தமையை அஷ்ரஃப் பெரிதும் உற்சாகத்துடன் அங்கீகரித்தார்,

அதனால் 1990ஆம் ஆண்டு கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்துள் நடைபெற்ற கட்சியின் பேராளர் மகாநாட்டின்போது ரவூப் ஹக்கீம் என்ற அந்த இளைஞர் கட்சியின் பொதுச் செயலாளராக தலைவரால் அறிவிக்கப்பட்டார். சபை அந்த கரு கரு என்று தாடி வைத்திருந்த அந்த மெல்லிய இளைஞனை ஒரு முறை வைத்த கண் வாங்காமல் பார்த்தது.

தான் பாராளுமன்றம் செல்லுதல் என்பதை விடவும் தன் சமூகத்தின் அரசியல் மற்றும் புவியியல் இருப்பை முதன்மைப்படுத்தும் அந்த இளைஞனின் அர்ப்பணிப்பை சமூகம் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்ததுடன் அந்த இளைஞனின் தனிப்பட்ட உயர்விலும் அஷ்ரஃப் பெரிதும் அக்கறைப்பட்டார்.

றவூப் ஹக்கீம் அவர்களின் மும்மொழிப் பாண்டித்தியமும் புத்திக் கூர்மையும் நிதானமும் தலைமையை நேர்மையாக விசுவாசிக்கும் உயர் குலப்பண்பும் அஷ்ரஃப் அவர்களிடத்தே இவருக்கு உன்னதமான ஓர் இடத்தை உருவாக்கிற்று. இத்தகைய பண்புசால் ஒருவருக்கு அஷ்ரஃப் உன்னதமான ஓர் இடத்தை வழங்கியமை ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விடயமுமன்று. விசேடமாக தவிசாளராகவும் வலக்கரமாகவும் இருந்த சேகு இஸ்ஸதீன் அவர்களின் வெளிச் செல்கையின் பின்னர் தலைமைத்துவம் புத்திக் கூர்மை மிக்க ஆலோசனைகளைப் பெறுவதில் சற்று தேக்க நிலை இருப்பதனைக் கண்டது. அந்த இடைவெளி ஓரளவாகுதல் நிரப்பப்பட இளைஞர் ரவூப் ஹக்ககீம் பயன்பட்டார் என்பது மிகையான கூற்றன்று.

அப்போது 1994இன் ஆரம்ப காலப்பகுதியில் மிக நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் பிரதேச சபைத் தேர்தலுக்கான முஸ்தீபுகள் முடுக்கி விடப்பட்டிருந்தன. 1989 ஆம் ஆண்டில் இந்திய அமைதிப்படை பாதுகாப்பு இடைவெளி நிரப்பபடாமல் வெளியேறக்கூடாது என்ற அஷ்ரஃபின் அறிவிப்பின் பின்னர் முஸ்லிம்கிடையே ஏற்பட்டிருந்த சரிவை நிமிர்த்திக்கொள்ள மு.கா. இத்தேர்தலைப் பயன்படுத்தவும் வேண்டியிருந்தது.
தலைவர் அஷ்ரஃப் பிரேமதாஸ ஜனாதிபதியாவதைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறி இலங்கை சமூகத்திடம் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்த நிலையிலும் கூட பிரேமதாஸவின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மு.கா வைச் செல்லாக் காசாக்குவதில் தமது அதிகாரம் முழுவதையும் பாவித்த காலமது.

அது மட்டுமன்றி அக்காலத்தில் புலிகள் முஸ்லிம்களை மாற்றுக் கண் கொண்டு பார்த்தும் மு.காவை தனது எதிரியின் இயக்கமாகவும் கருதியும் வந்த - மு. கா வுக்கு மிகுந்த சோதனைகள் அந்தக் காலத்தில் நிறைந்திருந்தது. சேகு இஸ்ஸதீன் கட்சியில் இருந்து இடை விலகியவுடன் தனியே முஸ்லிம் கட்சி என்ற பெயரில் மாற்று இயக்கம் ஒன்று உருவாகி தென் கிழக்கு முஸ்லீம்களிடையே ஒரு வகையான உளவியல் பிரதேச வாதம் தலை தூக்க வித்திட்டிருந்தது. அப்படி கஷ்டமான காலத்தில் செயலாளர் சுமை ரவூப் ஹக்கீம் அவர்களின் தோள் மீது சுமத்தப்பட்டிருந்தது.

குறித்த பிரதேச சபைத் தேர்தவுக்கான வேட்பு மனுக்களின் நிறைவு நாளுக்கு முதல் நாள் இரவு வேட்பு மனுக்களை இறுதியாக சரிபார்த்துக் கொள்ள தலைவர் அஷ்ரஃபின் குடும்ப உறுப்பினர் ஒருவரின் சம்மாந்துறை வீட்டில் ஒரு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நெருக்கடிகளின் காரணமாக தலைவர் அஷ்ரஃபுக்கு தலைவலி ஏற்பட அந்த வீட்டின் விறாந்தை வழியாக முன் மண்டபத்துக்கு அவர் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த விறாந்தையில் கிடந்த பாயில் ஒரு மெல்லிய இளைஞன் தலையணைக்குப் பதிலாக தன் வலக்கரத்தை உபயோகித்தவாறு ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்தார். அவருக்கும் விறாந்தையின் சுவருக்குமிடையே ஆவணப் பையொன்று இருந்தது. யாராவது அந்த ஆவணப்பையைத் தொட்டால் தூங்குபவர் எழுந்து விடத்தக்கவாறு அந்தப்பை கவனமாக வைக்கப்பட்டிருந்தது. உடனே அதனை நோட்டமிட்ட அஷ்ரஃப்  அவருக்குப் பின்னால் வந்தவரிடம் Do you know about this boy who is sleeping on a mat? என்று வினவ அவரும் நம்முடைய றவூப் ஹக்கீம் அல்லவா? என்று கூறினார். அதற்கு மீண்டும் அஷ்ரஃப் அவரின் பின்னணி உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டுவிட்டு பின்வருமாறு தொடர்ந்து கூறினார்.

இலங்கையில் விரல்விட்டு எண்ணத்தக்க செல்வந்தர்களில் ஒருவரின் மகளைத் திருமணம் செய்த மருகன் இவர். இப்படி பாயில் தலையணையும் இல்லாமல் தன்னிடம் வழங்கப்பட்ட ஆவணங்களை கவனமாக அரவணைத்தபடி படுத்துக் கிடக்கின்றார். எனக்கு இதனைப் பார்க்க வயிறு பற்றுகின்றது. அதுமட்டுமன்றி நாளை அதிகாலை நாலு மணிக்கு வாகனமும் இல்லலாமல் பஸ்ஸிலே சென்று திருகோணமலை கச்சேரியில் இந்த வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய இவர் பணிக்கப்பட்டுள்ளார். இப்படிப்பட்ட தியாகத்தழும்புள்ள இளைஞர்கள் நமது இயக்கத்தில் இருக்கும் வரை நமது போராட்டம் தோல்வி அடையப் போவதில்லை என்று தலைவர் மனம் நெகிழ்ந்து கூறினார். அப்படி ஒரு பலமான நம்பிக்கையை அஷ்ரஃப்  ரவூப் ஹக்கீம் மீது கொண்டிருந்தார். மேற்படி சம்பவத்துக்கு சம்மாந்துறையில் பல வாழும் சாட்சிகள் உள்ளன.  

நடந்து முடிந்த 1994ஆம் ஆண்டின் பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் பின்னர் மு.கா ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாற்றம் பெற்றபோது அன்று மிக மிக அருந்தலாகப் பெற்றுக்கொண்ட  தேசியப் பட்டியல் உறுப்புரிமையை அஷ்ரஃப், ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு வழங்க முன் வந்தார். அது மட்டுமன்றி எத்தனையோ சீனியர்கள் அக்கட்சியில் எம்.பிக்ளாக இருக்கத்தக்க பாராளுமன்ற உப சபாநாயகருக்கு அடுத்த அந்தஸ்திலுள்ள பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் பதவியை ரவூப் ஹக்கீமுக்கு வழங்கி அஷ்ரஃப் அழகு பார்த்தார். இந்த இரு நியமனங்களின் பின்னர் ஏற்பட்ட பல்வகைக் காய்ச்சல்களை விரட்டியப்பதற்கு ஹக்கீமின் தன்னிகரில்லா திறனும் உழைப்பும் தலைவருக்குப் பெரிதும் உதவியாயிற்று.

இந்த இரண்டு நியமனங்களாலும் தலைவர் அப்போது பூரண திருப்தியுடன் காணப்பட்டார். பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் மற்றும் வெளியேயும் மட்டுமன்றி சர்வதேச அரங்குகளிலும் கூட ரவூப் ஹக்கீம் ஜொலிக்கின்றார் என்று பிறரிடம் தலைவர் மனம் நெகிழ்ந்து பாராட்டியமைக்கு இக்கட்டுரை ஆசிரியார் வாழும் சாட்சிகளில் ஒருவராவார்.

தலைவர் தன்னால் சமூகமளிக்க அவகாசமில்லாத ஆனால் பார்வையாளராக அன்றி பங்கு பற்றுனராக கலந்து கொள்ள வேண்டிய சர்வதேச மாநாடுகளுக்கும் மற்றும் உயர் சபைகளுக்கும் ஹக்கீம் அவர்களை மாத்திரம் அனுப்புவதையே வழக்கமாக்கிக் கொண்டார். இப்போது ஹக்கீம் அவர்களை இலக்குப் படுத்தும் விமர்சனமான 'தனக்குப் பகரமாக கட்சிக்குள் கிழக்கில் யாரும் தலையெடுப்பதை இவர் விரும்புவதில்லை' என்ற விமர்சனம் குறிப்பாக இஸ்ஸதீன் அவர்களின் வெளியேற்றத்தின் பின்னர் அஷ்ரஃப் அவர்கள் மீதும் கிழக்குக்கு வெளியே வழங்கப்பட்ட இத்தகைய நியமனங்களினால் ஏற்படத் தொடங்கியது.  

தலைவர்  அஷ்ரஃப் அவர்கள் ஹக்கீம் மீது கொண்டிருந்த பாரிய நம்பிக்கைக்கு மற்றுமொரு  சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த சம்பவத்தை தனது கழுத்துக்கு ஏற்பட்ட சுருக்குகளின்போது ஹக்கீம் நினைத்திருந்தால் நல்ல வியாபாரச் சரக்காக அதனைப் பாவித்திருக்க முடியும். ஆனால் அவரின் உயர்ந்த குணம் இன்றுவரை தனது அரசியல் இலாபத்துக்காக அவர் அதனை உபயோகிக்கவே இல்லை.

அஷ்ரஃப் அவர்கள் ஒருமுறை தனக்கு நெருக்கமான ஒரு போராளியுடன் புத்தளம் நோக்கிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு மிக மோசமான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருந்தன. அந்த நேரத்தில் கூடச் சென்ற போராளி இது தொடர்பாக அவருடன் உரையாடிக் கொண்டு வந்தார். ஒரு கட்டத்தில் அந்தப் போராளி வினவினார் 'சேர் நமது சமூகத்துக்காக உலகின் மிக ஆபத்தான பேர்வழிகளையெல்லாம் நீங்கள் பகைத்துக் கொண்டுள்ளீர்கள். அல்லாஹ் உங்கள் உயிரை மேலும் மேலும் பாதுகாத்து இந்தப் போராட்டத்தின் ஜீவ நாடியை ஆபத்துக்கள் இன்றிக் காப்பாற்ற வேண்டும். உங்கள் அருமையான முகத்தைப் பார்த்து இந்தக் கேள்வியை நான் கேட்கக் கூடாது. எனினும் நீங்கள் தந்த பயிற்சி எனக்கு அதற்கான தைரியத்தைத் தந்துள்ளது என்று கூறியவராக அவர் பின்வரும் வினாவை அஷ்ரஃபிடம் எழுப்பினார். இந்தப் பயங்கரமான எதிரிகளால் உங்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து நிகழ்ந்தால் நமது சமூகமானது நட்டாற்றில் விடப்பட்டு விடுமே என்ற தன் நியாயமான ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தினார்.

அதற்கு தலைவர் அஷ்ரஃப் பதிலளிக்கையில் அவர்கள் ஆபத்தானவர்கள் என்பதற்காக நமது சமூகம் சார்ந்த அபிலாஷைகளை பிரஸ்தாபிக்க வேண்டிய இடத்தில் பிரஸ்தாபிக்க வேண்டிய தருணத்தில் பிரஸ்தாபிக்காமல் விட்டு விடுவதா? எனக்கு அவ்வாறு அவர்களால் ஆபத்தொன்றும் நிகழப் போவதில்லை என்றே நான் நம்புகின்றேன். ஆனால், எல்லாவற்றையும் மீறி எனக்கு ஏதாவது நிகழ்ந்தால் நான் விட்ட இடத்தில் இருந்து இந்த சமூகத்தை வழி நடாத்திச் செல்தற்கான பயிற்சியையும் தைரியத்தையும் முதிர்ச்சியையும் ரவூப் ஹக்கீமில் நான் ஏற்படுத்தியுள்ளேன் என்று அஷ்ரஃப்  அவரிடம் கூற அதற்கு மீண்டும் அந்தப் போராளி அவர் சின்னப் பொடியனல்லவா அவரை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா என பதில் வினாத்தொடுக்க அஷ்ரஃப்  பின் வருமாறு கூறினார்.

நாம் எல்லோரும் சேர்ந்து கட்சியை ஆரம்பித்தபோது தலைமைப் பதவியை எனக்குத் தந்தீர்கள். அப்போது  நாற்பது வயதையும் நான் தாண்டவில்லை. நமது எதிரிகளான சீனியர் மார் ' சிறு பிள்ளை செய்யும் வேளாண்மை விளைந்தும் பயன் தராது'  என்று நம்மைக் கேலி செய்யவில்லையா? எனக்கூறி அவர் மத்திய மாகாணத்தைச் சேர்ந்தவர்தான். தீவு அடங்கலிலும் உள்ள முஸ்லிம்கள் அவர்களின் பாரம்பரியத் தலைமைகளைப் புறந்தள்ளிவிட்டு இந்த மட்டக்களப்பானை தங்களின் அரசியல் தலைமையாக வரலாற்றில் முதற் தடவையாக ஏற்றுக் கொள்கையில் நம்மவர் மட்டும் பிரதேசவாதத்தின் அடிப்படையில் சிந்திக்க எவ்வாறு மனம் வருகின்றது? என்று அஷ்ரஃப்  கூறினார்.

ஆனால் துரதிஷ்டவசமாக அன்னாரின் மறைவின் பின்னர்; 1994இல் இருந்து அதிகாரத்தின் சுவையை அனுபவித்தவர்கள் கட்சியானது குடும்பத்தினதும் அவர்களின்  சம்மந்தக்கார ஆட்களினதும் சொத்து என்பதை உறுதி செய்யவே  செயற்பட்டனர். இதனால் ஆளும் கட்சியுடன் பேரம் பேசும் சக்தி தூரப்பட்டுக் கொண்டே போனது.

                               II        

புத்தாயிரமாம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் பாவனையிலுள்ள அரசியல் கலைச் சொற்களுள் வியூகம் என்னும் பதப் பிரயோகமானது சற்றுக் கூடுதலான பாவனையிலும் மேலதிகமான கருத்து உருவாக்கத்துக்குப் பயன்படுவதாகாகவும் பிரயோகத்தில் காணப்படுகின்றது. இச்சொல் சிங்களத்தில் கூட இதே கருத்துக்கும் நோக்கத்துக்கும் பாவிக்கப்படுகின்றது.

வியூகம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு மதுரைத் தமிழ் அகராதியும் வர்த்தமான தமிழ் அகராதியும் ஏனைய சிலவும் உடல், கூட்டம், படை எடுப்பு,  விலங்கின் கூட்டம் என்ற பொருள்களைக் குறித்துள்ளன. க்ரியாவின் தமிழ் அகராதியோ தாக்குவதற்காக அல்லது தற் காத்தலுக்காக ஒரு குறிப்பிட்ட முறையில் ஏற்படுத்திக் கொள்ளப்படும் ஒழுங்கு என விரிவாக்கியுள்ளது.

எனினும் பரணி சார்ந்த அல்லது போரியல் சார்ந்த தமிழ்க் காப்பியங்களோ ஆழமாகவும் விரிவாகவும் அர்த்த புஷ்டியானதாகவும் இப்பதத்தைக் கையாண்டுள்ளன. இச்சொல் பெரும்பாலும் சமஸ்கிருதத்தில் இருந்தே ஏனைய மொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருத்தல் கூடும். போரியல்சார் தமிழ்க் காப்பியங்கள் எதிரியின் சகல புகலிடங்களையும் போர்த் தளங்களையும் தனித் தனி வளையங்களாகச் சூழ்ந்து இறுதியில் அத்தனை வட்டங்களும் எதிரியின் எல்லா முனைகளையும் சேர்ந்த ஒரு பெரும் வட்ட வளையமாக்கிச் சூழ்கின்ற ஒரு பாரிய முற்றுகை எனும் அர்த்தத்தில் இப்பதத்தைப் பிரயோகிக்கின்றன. இதனையே சக்கர வியூகம் என்றும் கூறப்படுகின்றது.

இத்தனை பாரிய அர்த்தத்தைக் கொண்ட இப்பதப் பிரயோகமானது சில இடங்களில் சில தில்லு முல்லுக்
காரர்களின் திட்டங்களைப் பற்றிப் பேசினாலும் அதிகாரத்தைக் கைப்பிடிக்கின்ற ஒரு போராட்டத்துக்கான மாதிரித் திட்டமிடுகை என்ற அர்த்தத்தில் இன்று பாவிக்கப்படுகின்றது. அரசியல் வேட்டையாட ஆயத்தமனவர்கள்தான் தனது இலக்கை அடையும் வரை எவ்வகையான எதிர்ப்புக்கள் தோன்றக் கூடும் என்பதை விரிவாக ஆராய்ந்து அவ்வெதிர்ப்புக்களை தனது மாற்று நடவடிக்கைகளினால் முறியடித்து எல்லா எதிரிகளையும் ஒருங்கே முற்றுகையிட்டு அடிபணிய வைக்கும் சூழ்ச்சித் திட்டத்துக்கும் இப்பதம் பாவிக்கப்படுகின்றது. இதனால்தான் போலும் தேர்தலை இரத்தம் சிந்தாத யுத்தம் என்றும் யுத்தத்தை இரத்தம் சிந்தும் அரசியல் என்றும் கூறுகின்றனர்.

                              III

தலைவர் அஷ்ரஃப் அவர்களின் அகால மரணத்தின் பின்னர் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்ட அன்றிரவே கட்சித் தலைமை தொடர்பான சதித் திட்டங்கள் தீட்டப்படத் தொடங்கிற்று. அதன் இரகசியம் என்னவென்றால் கட்சித் தலைமைதான் அஷ்ரஃப் வகித்த மந்திரிப் பதவிக்கான வாரிசு என்று அர்த்தப்பட்டு உள்ளதனாலாகும். மறுதினம் மரண வீட்டிற்கு வெளிநாட்டுத் தூதரகங்களின் அதிகாரிகள் விஜயம் செய்ய இருப்பதனால் செயலாளர் நாயகமான ரவூப் ஹக்கீம் தலைவரின் வாசஸ்தலத்தில் பிரசன்னமாகி இருப்பது அவசியம் என எடுத்து உரைக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர் அங்கு பிரசன்னமாகி வந்துள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

அதே நேரம் தாறுஸ்ஸலாமில் கட்சித் தலைவரைத் தெரிதல் எனும் தலைப்பில் கட்சித் செயலாளருக்குத் தெரியாமல் கூட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.

ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்ததாகக் கருதப்பட்ட Kitchen politics தலைவரின் அமைச்சுப் பதவி ஹக்கீமுக்கு வழங்கப்படக் கூடாது என்று தீர்மானம் எடுத்திருந்தது. எனினும் சில சதித்திட்டங்களை மீறி; இறுதியில் அமைச்சுப் பதவி ஹக்கீமிடம் வந்து சேர்ந்தது.

பின்னர் 2001ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தங்களைச் செய்ததில் இருந்து கட்சி ஹக்கீமின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வரப்பட்டு விட்டது. ஆயினும் தேர்தல் கேட்பதுவும்  வெல்வதுவும் ஒரு கட்சியில், ஆனால் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வுக்கு முன்னரே கட்சி மாறுதல் என்று பல கூத்துக்கள் இக்கட்சியில் அரங்கேறிக் கொண்டிருந்தன. அத்துடன் ஹக்கீமின் மிக நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்தவர்களே பிராந்திய புவிசார் அரசியல் கோட்பாட்டாளர்களின் மாய வலையுள் சிக்கி கட்சிக்கும் அதன் தலைமைக்கும் துரோகம் செய்தனர்.

இதனால் அதிகார அரசியல் என்பதில் ஹக்கீம் தோற்றுப்போனதுபோல் தோன்றினாலும் இயக்க அரசியல் என்பதில் கட்சியின் உண்மையான போராளிகளின் துணையுடன் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக தமது ஆளுமையை அவர் நிறுவிக் காட்டியுள்ளமைக்கு நாம் பல்வேறு எடுத்துக் காட்டுக்களைக் கூறலாம்.

அண்மைக் காலங்களில் இவரின் அரசியல் எதிரிகள் ரவூப் ஹக்கீம் வகுத்த வியூகங்கள் எல்லாமே தோல்வியிலேயே முடிந்துள்ளன. ஆகவே, இவர் சமூகத்துக்குத் தலைமை தாங்க முற்றிலும் தகுதியற்றவர் என்று பொது மக்களிடம் கூறி வருகின்றனர். உண்மையில் இவர் வியூகம் வகுப்பதில் வல்லவர் இல்லையா? தலைமை தாங்கக் கூடிய புத்திசாலித்தனமும் சாதுரியமும் குறைந்த ஒரு தலைவரா? என்பவை பற்றி இன்றைய நிலையில் சிந்தித்துப் பார்ப்பதும் நமது மக்கள் அறிவூட்டப்படுவதும் அவசியமாகும்.

                              IV

தலைவரின் மரணத்தின் பின்னர் ஜனாதிபதி சந்திரிக்கா எடுத்த நிலைப்பாட்டினைத் தொடர்ந்து எழுந்த அரசியல் சூழலால் தவிர்க்கமுடியாமல் இவர் எதிர்ப்பு அரசியலை நோக்கியே நகர்த்தப்பட்டுள்ளார். ஜனாதிபதி சந்திரிக்கா மு.கா வை தன் சுண்டு விரலுக்குள் கட்டுப்படுத்த பெரிதும் ஆசைப்பட்டார். அதற்கு ரவூப் ஹக்கீம் உடன்படாத நிலையில் இக்கட்சிக்குள்ளே மாற்றுத் தலைமையை சந்திரிக்கா பலப்படுத்த நடவடிக்கை எடுத்தார். அதன் விளைவாகவே அமைச்சுப் பதவியை வழங்குவதற்கு அவர் பல்வேறு வழிகளில் பின் வாங்கினார்.

மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதி சந்திரிக்கா அஷ்ரஃபின் மனைவியாருக்கே அப்பதவி வழங்கப்ட வேண்டும் என்று விரும்பினார். ஆனால் மக்களின் எதிர்பார்ப்பு மாறாக இருந்தும் அதனை தன் அதிகாரப் பலத்தின் மூலம் அடக்கிவிட அவர் முயன்றார்.

அது முடியாமல் போகவே வழங்கப்ட்ட அமைச்சுப் பொறுப்பை ஜனாதிபதி சந்திரிக்கா திரும்பப் பெற்று மு.கா தலைமையை அவமதித்தார். இதனால் எதிர்ப்பு அரசியலானது மு.கா வின் பிரதான அரசியல் போக்காக மாறிற்று. ஆகவே 2001ஆம் ஆண்டைய தேர்தலின்போது ஐ.தே.கவுடன் ஒப்பந்தம் செய்து ஆட்சி மாற்றத்துக்கான முக்கிய சக்கரத்தின் ஆழியாக  ஹக்கீம் மாறினார். கட்சிகள் என்ற அடிப்படையில் பொது முன்னணியும் மு.கா வும் எதிர் எதிர் முகாம்களில் இருந்தே அரசியல் செய்தமையால் 2005ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த அவர்களின் வேண்டுகோளை உடன்பாடாகப் பரிசீலிக்க முடியவில்லை. காரணம் சந்திரிக்கா அரசின் மேலாதிக்கக் குணமேயாகும். அது கட்சிப் பகையாக தோற்றம் பெற்றுவிட்டது.

ஜனாதிபதித் தேர்தல் 2005இல் நடைபெற்றபோது அதில் தவிர்க்க முடியாமல் ரணில் விக்கிரமசிங்ஹவை வெல்லவைப்பதான வியூகங்களை வகுப்பதில் ரவூப் ஹக்கீம் பிரதான பங்காளியாக இருந்தார் என்பது நாடறிந்த விடயம். ஆனால் பிரதேச விஸ்தரிப்பு வாதம் விரித்த வலையை பிரபாகரன் தனக்கு விரிக்கப்பட்ட செங்கம்பள வரவேற்பாக தப்புக்கணக்குப் போட்டு அந்த செங்கம்பளத்தில் நடை பயிலுகையில் அது செங்கம்பளம் அல்ல தனக்கு விரிக்கப்பட்ட இலத்திரனியல் வலை என்பதைப் புரிந்து மூச்சுவிட முன்னர் எல்லாம் தலை கீழாய் மாறி விட்டது.  அதனால் தோற்றது ரணில் மட்டுமல்ல தமிழரின் போராட்டமுமே. இதனையும் ஹக்கீமின் வியூகமே பிழைத்ததாகப் பிரச்சாரப்படுத்துவது கிட்டத்தட்ட அவர்களின் அறிவீனத்துக்கு அவர்களே வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு நடவடிக்கையே.

இந்தத் தேர்தலின் பின்னர் பதவிக்கும் பணத்துக்கும் விலைபோகக்கூடிய மு.கா பிரதிநிதிகள் வாங்கப்பட்டனர். இதனை ஹக்கீமின் வியூகத்துக்கான முதலாவது தோல்வி என அழைக்க முடியுமா? ரணில் விக்கிரமசிங்ஹ பிதமராக நியமிக்கப்பட்டு ஓராண்டின் பின்னர் தனது கேள்விக்கு உட்படுத்தப்பட முடியாத நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி சந்திரிக்காவினால்  பாராளுமன்றம் கலைக்கப் பட்டமையை ஹக்கீமின் வியூகத்துக்கான தோல்வி என அழைக்க முடியுமா?

தமிழ் மக்களின் போராட்டத்தின் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அதனைக் கொச்சைப்படுத்தாமல் நோர்வேயின் மத்தியஸ்தத்துக்கிருந்த சர்வதேச முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டவராய் ஹக்கீம் செயல்பட்டார். அப்போது பிராந்திய விஸ்தரிப்பு வாதமானது இந்த சர்வதேசக் காய் நகர்த்தல்களுக்கு எதிராகச் செயற்பட்டது. தீர்வு சாத்தியமானால் அதில் முஸ்லிம்களின் பங்கும் உறுதி என்ற நிலைமையில் நமக்கான அதிகார அலகு பற்றிய பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதே சமூகத்தலைமையின் தலையாய பணி என்பதை ஹக்கீம் புரிந்து கொண்டு செயற்பட்டார்.

இதனை பொறுப்புள்ள தலைமையின் உத்தம செயற்பாடு என்பதா அல்லது ஹக்கீமின் வியூகத்துக்கான படு தோல்வி என அழைப்பதா?

சந்தர்ப்ப நிர்ப்பந்தங்களின் காரணமாகவும் எதிர்ப்பு அரசியலைத் தவிர்க்கும் பொருட்டும் கையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்சியையும் பாதுகாக்கும் பொருட்டும் ஆட்சியாளர்களுடன் சமரசப்பட்டு அபிவிருத்தி வேலைகளை ஏனைய பிரதேசங்களுக்கும் கிடைக்கச் செய்யவும் வேண்டி 2007இல் ஒரு நல்லுறவு ஏற்பட்டது. ஆனால் ஏனைய முஸ்லீம் அமைச்சர்களின் தொடர்ச்சியான நச்சரிப்பினால் நிறைவேற்று அதிகாரம் மு.காவினரின் தன்மானத்துடன் விளையாடியமையாலும்; ஆட்சியை விட்டு சில உறுப்பினர்களைப் பலி கொடுத்து மு.கா  வெளியேறிற்று. ஒரு சமூகத்தின் தலைமை தனது சுய கௌரவத்தை சோரம்போக அனுமதிக்காமல் இருப்பதை எவ்வாறு தோற்றுப்போன வியூகம் என்று பெயரிடுவது?

பிழைப்புவாத அரசியல் செய்வதற்கு வியூகம் என்று ஒரு பெயர் வைப்பது ரொம்பவும் அபத்தமானதாகும். ஏனெனில் முஸ்லிம்களின் ஒற்றுமையைக் காட்டிக் கொடுத்து முஸ்லீம்களின் அபிலாஷைகளைப் பலஹீனப்படுத்தி அதன் மூலம் அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கோண்டு மற்றக் கிராமங்களைத் தவிர்த்து தனது ஊரை மாத்திரம் பிரமாண்டமாகவும் தேவைக்கதிகமாகவும் அபிவிருத்தி செய்துவிடுகின்றனர். அதனால் தவிர்க்க முடியாமல்  ஊர் மக்கள் வாக்களிக்கின்றனர் என்பது உண்மை. ஆனால் ஒற்றுமையாக மு.கா வுக்கு வாக்களிக்கும் முஸ்லீம்களின் வாக்குகள் இன்றுள்ள தேர்தல் முறையினால் கபளீகரம் செய்யப்படுகின்றன.

போதாக்குறைக்கு வாக்கு எண்ணுமிடத்தில் கொழும்பிலிருந்து பிரதானிகள் வந்து பிரசன்னம் செய்து தங்கள் அதிகார எல்லையின் கதிர் வீச்சுக்களை மறைமுகமாக எடுத்துக் காட்டி மாவட்டத்தின் தலைமை அதிகாரிக்கு ஓர் உளவியல் அச்சுறுத்தலில் ஈடுபடுகின்றனர். இதுதான் வியூகம் என்று சிலரால் பேசப்படுகின்றது.

மு.கா வை அழித்தொழிக்க சபதமெடுத்துள்ள உள் நாட்டுச் சக்திகளும் மற்றும் பிராந்திய வல்லரசுகளும் மட்டுமன்றி சர்வதேசத்துடனும் கூடிக் குலாவியிருந்த சிறு கட்சிகள் இன்னும் அவருடனேயே ஒட்டிக் கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி மஹிந்தவின் வெற்றி அந்த சிறு கட்சிகளின் வெற்றியாக மொழி பெயர்க்கப்பட்டு ஒரு ஆபத்தாக அது வளர்ந்து வந்தது.
இதனிடையே அடுத்த ஜனாதிபதித் தேர்தலும் வந்தது.

மீண்டும் அவரை வெல்ல வைப்பதானது தனது எதிரிகள்ன் கரங்களில் அதிகாரத்தைத் தட்டில் வைத்துத் தாரை வார்ப்பதாகவே அமையும் என்றே மு.கா கருதியது. ஆகவே, இதற்கான மாற்று வழியைத் தேர்ந்தெடுப்பதே மு.கா வின் முன்னாலுள்ள ஒரே ஒரு ஒப்ஷனாகும்.

ஆனால் இது மிகவும் சிக்கலான கணித முடிச்சு ஆகும். இந்த முடிச்சினை அவிழ்ப்பதற்கு உள்நாட்டிலும் பிராந்தியத்திலும் மற்றும் சர்வதேசத்திலும் பல்வேறுபட்ட முடிச்சுக்கiளை மு.கா அவிழ்த்தாக வேண்டும்.

ஒரு நாட்டின் எதிர்கட்சியானது எதிhவரும் காலங்களில் அது ஆட்சியைப் பிடிப்பதாயின் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்று அரசியல் ஞானிகள் கண்டு பிடித்தார்களோ அவற்றை முழுமையாகக் கொண்டிருக்கின்ற ஒரு கட்சியாகவே ஐ.தே.க.வை இலங்கை மக்கள் காண்கின்றனர். சர்வதேச அரங்கில் ரணில் ஒரு தீட்சண்யமான தலைமையாகக் கருதப்பட்டாலும் உள்ளுர் அரசியலில் அவர் ஒரு விகடகவியாகவே பார்க்கப்படுகின்றார்.

அதனால் ரணில் அவர்களை உள்ளுர் அரசியல் வாடிக்கையாளர்களிடம் சந்தைப்படுத்த மஹிந்தவின் எதிர்ப்பாளர்களால் முடியவே முடியாது என்ற நிலைதான் வெளிச்சமானது. எனவே மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு மாற்றுத் தலைமை 'உற்பத்தி' செய்யப்பட்டே தீர வேண்டிய ஒரு நிலை தீர்க்கமாகத் தோன்றிற்று.

இந்தக் கட்டத்தில்தான் சரத் பொன்சேகா என்றொரு பாத்திரம் இராணுவத் தளத்தில் இருந்து அரசியற் தளத்தை எட்டிப் பார்த்தது. போருக்குப் பின்னரான சிங்கள அரசியற் சூழலில் சரத் பொன்சேகாவை சந்தைப்படுத்துவது ரணிலின் அளவுக்கு கஷ்டமானதன்று. ஆனால் ரணில் என்ற பூனைக்கு மணி கட்டும் தைரியம் கட்சிக்கு உள்ளேயும் வெளிளேயும் யாருக்கும் இருக்கவில்லை.

இந்த இடத்தில்தான் சரத் பொன்சேகாவுக்கு ஹக்கீம் என்ற பாத்திரத்தின் அரசியல் பாரம் தெரியவருகின்றது. மஹிந்த அரசில் தனக்கு ஒரு கதாநாயகப் பாத்திரம் இருப்பதாக கற்பனையில் வாழ்ந்த சரத் பொன்சேகா ஹக்கீம் அவர்களிடம் ஏற்கனவே தான் ஒரு அரச ஊழியன் என்பதையும் மறந்து தமது இராணுவப் புத்தியைக் காட்டத் தவறவறவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.

அப்படிப்பட்ட சரத் பொன்சேகா தனது பழைய பாவங்களுக்கு தௌபா செய்தவராக ஹக்கீமை அணுகினார். பாவ மன்னிப்புக்கு இரப்பவரின் பாவங்களை மன்னிக்க வேண்டியது தனது கடமை என்பதைப் புரிந்துள்ள ஹக்கீம் அவருடன் சேர்ந்து அரசியல் செய்வதற்கு இணங்கினார்.

ஆனால் ரணில் என்ற பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற வார்த்தையின் பின்னாலுள்ள வினாக்குறி அப்படியே இருந்தது. இந்தப் பணியை செய்து முடித்துத் தருமாறு ஹக்கீம் சரத் பொன்சேகா உட்பட எல்லோராலும் வேண்டப் பட்டடார்.
ரணில் அவர்களைப் பக்குவமாக அணுகி அவர் அந்தப் பூனைக்கு மணியைக் கட்டிவிட்டார். ரணில் அவர்களில் அடிப்படையான அரசியல் இலக்கு எதுவோ அதனை இன்னோருவர் தட்டிப்பறிக்க
அவரை இணங்கச் செய்வது ஒரு சாதாரணமான இராஜதந்திரக் காய் நகர்த்தல் அல்ல.

எனினும் எப்டியோ மஹிந்த மீண்டும் ஜனாதிபதி ஆகிவிட்டார். சுரத் பொன்சேகா கைது செய்யப்படும்போது  அவரின் கூட ரணிலைத் தவிர இருந்த மற்றவர் யார் என்பது நாட்டு மக்கள் அனைவருக்குமே தெரிந்த விடயம். இராணுவத் திமிங்கிலங்கள் புடை சூழ அவர் கைது செய்யப்படும் போது அப்படி சரத் பொன்சேகாவைக் கைது செய்வதற்கு இராணுவத்துக்கு அதிகாரம் கிடையாது என்று தைரியமாக முழங்கியதை இந்த நாடே தொலைக் காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தது.

பின்னர் நடந்து முடிந்த நிகழ்ச்சிகளால் அரசுடன் மீண்டும் சமரசம் காண வேண்டிய ஒரு தேவை மு.கா வுக்கு எழுகிறது. தலா ஒவ்வொரு எம்.பிக்களை மாத்திரம் கொண்டிருக்கின்ற சிறு கட்சித் தலைவாகளின் ஓயாத அட்டகாசம் இணக்க அரசியலின் ஒற்றையடிப் பாதைக்கு மு.கா வை  இழுத்துக்கொண்டு போயிற்று.  அது மட்டுமன்றி வெள்ளை வேன் வராவிட்டாலும் மு.கா. எம் பிக்கள் கடத்தப்படவது கிட்டத்தட்ட உறுதியாயிற்று.
இதேவேளை சந்தர்ப்ப வசமாக 18ஆவது அரசியலமைப்பின் திருத்தம் வேண்டிய தேவை அரசுக்கு எழுந்தது. அரசின் இந்தப் பலவீனத்தில் தங்கள் குதிரை வண்டி குடை சாயாமல் பார்த்துக் கொள்ளத்தக்க சந்தர்ப்பம் ஒன்று மு.காவை நாடி வந்தது. இந்தச் சந்தர்ப்பத்திலே ஹக்கீம் தன்னை சுதாகரித்துக் கொண்டார்.

கட்சியைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் இன்னும் நீண்ட ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்யும் வாய்ப்புள்ள ஜனாதிபதியைப் பகைத்துக் கொள்ளாமல் இருப்பதற்கும் இந்த சந்தர்ப்பத்தை ஹக்கீம் நன்கு பயன்படுத்திக் கொண்டார். இதனால் ஒரு தேன் நிலவு கைகூடிற்று.

அதன் பின்னர் கிழக்கு மாகாணசபை கலைக்கப்படுவதற்கான முஸ்தீபு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இங்கே மு.கா எவ்வாறு தேர்தலை எதிர்கொள்வது என்பது பெரும் இடியப்பச் சிக்கலாயிற்று.

அரசுடன் சேர்.. சேர்.. என வற்புறுத்திய மக்கள் தனியாகக் கேள்.. தனியாகக் கேள்.. என நச்சரித்தனர். தழிழர் தலைமையை ஹக்கீம் அனுசரித்து நடந்த போழ்துகளில் அவரை சந்தேகத்துடன் பார்த்த அதே மக்கள் சம்மந்தனுடன் கூட்டுச் சேர் என்று வற்புறுத்தினர்.

எனினும் திருமணம் செய் திருமணம் செய் என்று வலியுறுத்திய அதே பெற்றோர் இப்போ தலாக் சொல் என மாறிக் கட்டளை இடுவது போன்ற ஒரு சங்கடத்தை ஹக்கீம் எதிர்கொண்டார். வெளிப்படையாகச் சொன்னால் அரசுடன் எப்படிப் பிணங்குவது என்பதில் ஒரு தடுமாற்றம் ஹக்கீமுக்கு ஏற்பட்டது.

எல்லோரினது வேண்டுகோளையும் ஒரு பக்கத்தில் வைத்து விட்டு ஹக்கீம் கி.மா.ச. தேர்தல் சம்மந்தமாக ஒரு பொறிமுறையை அரசுடன் சேர்ந்து வடிவமைக்க அதிக பட்ச விட்டுக் கொடுப்புக்களுடன் முன்வந்தார். ஜனாதிபதி கூட ஹக்கீமின் நிலைப் பாட்டை மிகுந்த மகிழ்ச்சியுடன் அங்கீகரித்தார். எனினும் வேட்பு மனுத்தாக்கலுக்கு முதல் நாள் வரை இழுத்தடிக்கப்பட்டு பின்னர் பொறிமுறை நிராகரிக்கப்பட்டைமையினால் ஹக்கீம் உற்சாகத்துடக் தனியே போட்டிக்குத் தயாரானார். சிறு சிறு பின்னடைவுகள் காணப்பட்டாலும் மு.கா வின் வெற்றி அதற்குப் பேரம் பேசும் சக்தியை வழங்கிற்று.

எனினும் தழிழர் கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சிணமைக்கவே எல்லோரும் விரும்பினர். இந்தக் கருத்திலேயே பெரும்பாலான புத்தி ஜீவிகள் உடன்பாடு கண்டனர். ஒரு காலத்தில் ரணிலை விட்டு வெளியேற மாட்டார் என விமர்சித்த அரசியல் எதிரிகள் இப்போது தனது அமைச்சுப்பதவியைப் பாதுகாக்க மஹிந்தவை விட்டு வெளிவரமாட்டார் என விமர்சிக்கின்றனர்.

மேற் கூறப்பட்ட அத்தனை விமர்சனங்கiயும் சாதகமாக்கி மு. கா தலைமை ஜனாதிபதியுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. ஜனாதிபதியும் தன்னிழலில் மறைந்த கட்சிகளை எவ்வாறு பகைத்துக் கொள்வது என்ற சிந்தனையில் மூழ்கி பத்து நாட்களைக் கடத்திய நிலையில் மு.கா தலைமை அதிக பட்டச விட்டுக் கொடுப்புகளுடன் ஒரு ஆவணத்தைத் தயார் செய்து மகிந்தவிடம் சமர்ப்பித்திருந்தது. அத்துடன் ஆவணம் சமர்ப்பிக்கப்பட்ட அன்று இரவு 12.00 மணிவரை தான் எந்த முடிவையும் எடுக்கப் போவதில்லை என்றும் அரசுக்கு அறிவித்திருந்தது. அதாவது அதற்குப் பிறகு 'எங்களை மன்னிக்க வேண்டும்' என்ற வாசகம் அதில் ஒழித்துக் கொண்டிருந்தது.

இப்போது ஜனாதிபதி சுதாகரித்துக் கொண்டார். மு.கா முதலமைச்சர் நியமனத்தில் விடாப்பிடியாக இல்லாது ஐ.ம.சு. முன்னணியின் நேரடி முஸ்லிம் உறுப்பினருக்கு விட்டுத்தரத் தயாரானதும் இரண்டு அமைச்சு மு.காவுக்க சாத்தியமாயிற்று.

இந்த நாட்டின் தேர்தல் முறைகளைப் புரிந்துகொண்டு சாதகப் படுத்தும் கணித மூளை நாங்களே என்று தம்பட்டம் அடித்தவர்களின் உள்ளக விளையாட்டுக்கள் இநத முறை பி;ப 2.30 வரை கட்டுப்பாட்டுக்குள் இருந்து. ஆனால் அதன் பிறகு அவர்களின் விலங்குகள் உடைக்கப்பட்டு விட்டன. இன்று மறு தினம் எல்லா வாக்குகள் எண்ணி முடியும் வரை அந்த நிலை தொடர்ந்திருந்தது.

எனினும் நடந்து முடிந்துள்ள நிகழ்ச்சிகளைக் கொண்டு பார்த்தால் முதலமைச்சருக்கான வியூகம் அமைத்தவர்களின் ஆசை ஸ்கலிதமாகிப் போய்விட்டது. நியமிக்கப்பட்ட முதலமைச்சர் ஹக்கீமின் ஆசீர்வாதத்துடனேயே காரியமாற்ற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமை வெளிச்சம். இது ஹக்கீமின் முதலாவது வியூகமாகும்.

அதிக பட்ச விட்டுக் கொடுப்புக்களுடன் வழங்கப்படவுள்ள இரண்டு அமைச்சுக்களும் மிக முக்கியமானவையாகும். இதனை தன் எதிராளிகள் கபளீகாரம் செய்யாதவாறு பார்த்துக் கொள்வதற்கான இரண்டாவது வியூகமும் ஹக்கீமினால் வகுக்கப்பட்டு விட்டது.

கிடைக்ககூடிய ஏனைய பதவிகள் வெறும் அரசியல் ஆடம்பரங்களே தவிர வேறில்லை. ஆக எதிராளிகள் தாண்டிவர முடியாத ஒரு அரசியல் முள்வேலியாக தனது சக்கர வியூகத்தை ஹக்கீம் அமைத்துள்ளார் என்பது உறுதியாகத் தெரிகின்றது.
அது மட்டுமன்றி அரசாங்கத்தைச் சூழவர சர்வதேச சமூகம் அமைத்துள்ள நெருப்பு வளையம் அசாதாணமானது என்பதும் இதனைத் தாண்டிச் செல்ல ஹக்கிம் போன்ற இராஜ தந்திரிகளின் தயவு மஹிந்த அரசுக்கு அவசியம் என்பதும் வெளிப்படையானதே.

ஆகவே, இனியும் ரவூப் ஹக்கீம் என்பவர் அப்பாவித்தனமான தலைமை அன்று என்பதை இனி வரலாறு ஒத்துக் கொள்ளப்போவதில்லை என்பது மட்டும் உறுதி.


No comments