Header Ads

Breaking News

வழக்கு தொடர மஹிந்த அணி முயற்சிபோர்க்குற்ற விசாரணைகளுக்காக யுத்தத்தை முன்நின்று வழிநடத்திய இராணுவத் தளபதிகளையும், தலைவர்களையும் வெளிநாடுகளுக்கு அனுப்பும் வகையிலான சட்டத்தை நிறைவேற்றும் நல்லாட்சி அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக மாவட்ட ரீதியாக வழக்கு தொடர்வதற்கு ஒன்றிணைந்த எதிர்கட்சி தீர்மானித்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கம் இந்த சட்டத்தை செயல்படுத்தினால் சிலி நாட்டு ஜனாதிபதிக்கு நேர்ந்ததுபோலவே ஸ்ரீலங்கா நாட்டுத் தலைவர்களும் போர்க்குற்ற விசாரணைக் கூண்டில் நிற்கவேண்டிய நிலைமை ஏற்படும் என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
உள்நாட்டவர்களை முடக்கும், வெளிநாட்டவர்களை மகிழ்விக்கும் நாட்டை பாதிக்கும் வரி வேட்டையை நிறுத்துக எனும் தொனிப் பொருளில் கொழும்பில் நேற்றைய தினம் விசேட செயலமர்வு ஒன்று நடைபெற்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையின் கீழான ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மற்றும் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது உரையாற்றிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் “வெளிநாட்டு நீதிபதிகளை ஸ்ரீலங்காவுக்கு கொண்டுவராமல் எமது நாட்டு இராணுவத்தினரையும், யுத்தத்திற்குத் தலைமைதாங்கிய தலைவர்களை வெளிநாட்டு போர்க் குற்ற நீதிமன்றத்திற்கு அனுப்பும்படியான முயற்சிகள் இடம்பெறுகின்றன.
அங்கு சென்றபின்னர் என்ன நடக்கும்? சிலி நாட்டு முன்னாள் ஜனாதிபதி ஓகஸ்டோ பினோசேட் சத்திரகிசிச்சைக்காக லண்டனுக்குச் சென்றிருந்தபோது 10 நாட்களின் பின்னர் கைது செய்யப்பட்டார்.
சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட சம்பவமே எமது நாட்டு தலைவர்களுக்கும் ஏற்படலாம். சர்வதேச பிரகடனமொன்றை ஸ்ரீலங்கா நாட்டு சட்டக் கட்டமைப்பிற்குள் உள்வாங்குவதற்கான முயற்சிகளே இடம்பெறுகின்றன.
இதனை செய்ய பிரித்தானியா, கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நோர்வே, சுவீடன், டென்மார்க், ஸ்கென்டினேவியா, இந்தியா ஆகிய நாடுகள் இந்த சட்டத்திற்கு இடமளிக்கவில்லை. இந்தியா 2007ஆம் ஆண்டு இந்தப் பிரகடனத்திற்கு ஒப்பந்தம் செய்தபோதிலும், அதனை இதுவரை அமுல்படுத்தவில்லை.
குறித்த நாடுகள் தத்தமது இராணுவத்தினர் மீது அதீத கௌரவம் வைத்திருப்பதால் இதனை அனுமதிக்காது. ஆனால் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்குவந்த 2015ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே இதனை அமுல்படுத்த இணங்கிவிட்டது.
எனவே இதற்கெதிராக புத்தகங்கள் எழுதுகிறோம். ஏற்கனவே வழக்கு தாக்கலும் செய்திருக்கின்றோம். தற்போது நாட்டின் ஏனைய மாவட்டங்களிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகளைத் தொடரவும் எதிர்பார்க்கின்றோம்” என்றார்.
இதேவேளை அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், கடந்த இரண்டு வருடங்களாக ஒத்திவைக்கப்பட்டுவரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை அரசாங்கம் மீண்டும் ஒத்திவைத்தால் அதற்கெதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
“உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை மீண்டும் ஒத்திவைக்க முயற்சித்தால் அரசியல்வாதி என்ற வகையில் இல்லாமல் சட்ட பேராசிரியர் என்ற வகையில் தனிப்பட்ட ரீதியில் உச்சநீதிமன்றத்திற்குச் செல்வேன். இது கொடுமையாகும்.
இந்த நாட்டை எவ்வாறு ஆட்சிசெய்யமுடியும்? எல்லா தேர்தலையும் அரசாங்கம் ஒத்திவைக்கிறது.
மக்கள் தத்தமது கருத்துக்களை வெளியிட முடியாமல், மக்களின் உரிமைகள் தடுக்கப்படுகிறது. தேர்தலொன்று நடத்தப்பட்டால் நல்லாட்சி அரசாங்கம் தோல்வியடைந்து சுனாமியைப் போல அள்ளுண்டுப்போகும். குப்பைகளை அகற்றுவதைக்கூட பிரதேச சபைகளால் செய்யமுடியாதிருக்கிறது.
டெங்கு நோயினால் 83 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டும், 200க்கும் மேற்பட்டோல் பலியாகியும் இருக்கின்றனர். இந்த நிலையில் அரசாங்கத்தினால் தேர்தலுக்கு எவ்வாறு முகங்கொடுக்க முடியும்? எனவேதான் போலியான காரணங்களை வைத்து நாள்கழித்துக் கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.

No comments