About Me

header ads

ஜெயலலிதா மரணமும்... ஒரு வாரத்தில் மாறிய காட்சிகளும்!கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை... சென்னை ராஜாஜி ஹாலே மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடிப் போனது. சென்னை விமான நிலையம், இந்தியா முழுவதிலும் இருந்து வந்த பிரதமர் உள்ளிட்ட தலைவர்களால் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.
தமிழகத்தின் முதல்வராகவும், அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருந்த செல்வி ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அஞ்சலி முதல் அடக்கம் வரை எல்லாம் ஒரேநாளில் நடந்தேறின.
தமிழக அரசு சார்பில் ஒரு வார கால துக்கம் அனுசரிக்கப்படும் என அ.தி.மு.க அரசு அறிவித்தது. ஆனால் அடக்கம் செய்த ஈரம்கூட காய்வதற்குள், அடுத்த பொதுச்செயலாளருக்கு ஆள் புடிக்கத் தொடங்கி விட்டார்கள் அ.தி.மு.க-வின் ரத்தத்தின் ரத்தங்கள்.
செவ்வாய்க் கிழமை காலை, ஜெயலலிதாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது, ஓரமாக ஒடுங்கிப்போய் இருந்தார்கள் அ.தி.மு.க முன்னணியினர். கிட்டத்தட்ட ஓரம்கட்டியது போல படியில் அமர்ந்திருந்த அவர்களிடம், ஒருவித இறுக்கமே காணப்பட்டது.
அதற்குக் காரணம் ஜெயலலிதாவின் உடலை சுற்றி வட்டமிட்டிருந்த மன்னார்குடி சொந்தங்கள்தான். ஜெயலலிதாவின் உடல் அன்று மாலை அடக்கம் செய்யபட்டது.
அடக்கம் செய்யபட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா கணவர் நடராஜன், “அ.தி.மு.க என்பது அசைக்க முடியாத இயக்கம். நுாற்றாண்டுகள் அந்த இயக்கம் செயல்படும். இயக்கத்தின் அடுத்த தலைமையை காலமே முடிவு செய்யும்” என்று தெரிவித்தார்.
அடுத்த பரபரப்பு கிளம்பியது. 30 எம்.எல்.ஏ-க்களை முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க மூத்த உறுப்பினருமான செங்கோட்டையன் கையில் வைத்திருக்கிறார்.
அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்காவிட்டால், கட்சியை உடைக்கப்போகிறார் என்று உறுதி இல்லாத தகவல் ஒன்று உலவியது.
புதன்கிழமை காலை, பத்திரிக்கையாளர் சோ மறைவைத் தொடர்ந்து, முதல்வர் பன்னீர் செல்வம், சோ வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
அடுத்த சில மணி நேரங்களில் சசிகலாவும் சோ வீட்டிற்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார். அ.தி.மு.க நிர்வாகிகள் சத்தம் இல்லாமல் போயஸ்கார்டன் வீட்டுக்கு படையெடுக்கத் துவங்கினார்கள்.
திவாகரன், வெங்கடேஷ், நடராஜன் உள்ளிட்ட சசிகலாவின் உறவினர்கள் வீடுகளுக்குச் சத்தம் இல்லாமல் உள்ளே சென்று வந்தனர்.
புதன்கிழமை அன்று காவேரி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பினார் தி.மு.க தலைவர் கருணாநிதி. உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஜெயலலிதா மரணம் குறித்தும், சசிகலா மீதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வாட்ஸ்அப் ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.
முதல்வர் பன்னீர் செல்வம் காலை, மாலை ஆகிய இரு இருநேரங்களிலும் போயஸ்கார்டன் சென்றுவரத் துவங்கினார். வியாழக்கிழமை காலை போயஸ் கார்டனில் சசிகலாவின் குடும்பத்தினருடன், ஆலோசனையில் ஈடுபடத் துவங்கினார்.
மத்திய அரசு, தம்பிதுரையை முதல்வராகவோ, பொதுச்செயலாளராகவோ ஆக்க முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகின.

இதுகுறித்தும் அ.தி.மு.க வின் முன்னணி நிர்வாகிகளுடன் கார்டனில் வியாழக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார் சசிகலா. அந்த ஆலோசனையில் செங்கோட்டையன், மதுசூதனன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அன்றே செங்கோட்டையன் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார், “ஜெயலலிதா கட்டிக் காத்த இந்த இயக்கத்திற்கு நான் ஒருபோதும் துரோகம் செய்யமாட்டேன். என்பெயரில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று உருக்கமாக அதில் குறிப்பிட்டிருந்தார்.
அ.தி.மு.க வினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தி.க தலைவர் வீரமணி அறிக்கை வெளியிட்டார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று நடிகை கவுதமி மோடிக்கு கடிதம் எழுதி பரபரப்பை கிளப்பினார்.
மாலையில் சசிகலா, இளவரசி, கீரத்தனா ஆகியோரும் ஜெயலலிதா வீட்டில் பணிபுரியும் வேலையாட்கள் முக்கிய அமைச்சர்கள், எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
சசிகலாவின் காலில் முக்கிய அமைச்சர்கள் விழுந்து ஆசி பெற்றனர். அப்போதே அடுத்த பொதுச்செயலாளர் சசிகலாதான் என்ற தகவல் ஊர்ஜிதம் ஆனது.
வெள்ளிக்கிழமை காலை முக்கிய அமைச்சர்கள் அனைவரும் கார்டனில் ஆஜர் ஆனார்கள். பதினோரு மணிக்குத் துவங்கிய ஆலோசனை மதியம் வரை நீடித்தது.
பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படும் வரை யாரும் தனக்கு எதிராக இருக்க வேண்டாம் என்றும், எனது குடும்ப உறுப்பினர்கள் யாரும் கட்சிக்குள் தலையிட மாட்டார்கள் என்றும் சசிகலா தரப்பு, அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளிடம் உறுதி கொடுத்ததாக தகவல் வெளியானது.
மேலும் கட்சியில் அதிருப்தியில் இருந்தவர்களை சரிகட்டும் வேலைகளும் துவங்கியது. சனிக்கிழமை காலை தமிழகத்தின் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கபட்டது.
ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டுவது தொடர்பாக அந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கட்சியினர் மத்தியில் சசிகலாதான் அடுத்த பொதுச்செயலாளர் என்ற பேச்சு பரவலானது.
சனிக்கிழமை அன்று காலை அனைத்து அமைச்சர்களும் போயஸ் கார்டன் வீட்டில் ஆஜர் ஆனார்கள். முதல்வரின் படத்திற்கு அஞ்சலி செலுத்தியவுடன் வாசலில் நின்ற சசிகலாவிடம் கோரசாக, "நீங்கள் தான் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார்கள்.
அதன் பிறகு அனைத்து அமைச்சர்களுடன் ஜெயலலிதா சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, தலைமைச் செயலகத்தில் முதல்வர் சேரில் அமர்ந்து, அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார் பன்னீர்செல்வம். ஜெயலலிதாவிற்கு மத்திய அரசு ஒப்புதலோடு 15 கோடி ரூபாயில் நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் என்ற பலகை பன்னீர்செல்வம் அறையில் மாட்டபட்டது. மதியம் ஜெயா டி.வி-யில் பரப்பரப்பாக ஒரு காட்சியுடன் செய்தி வெளியானது.
அதில் சசிகலாவைச் சுற்றி நின்று அ.தி.மு.க- நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த அனைத்து தரப்பினரும் கையெடுத்து கும்பிட்டு மன்றாடுவது தெரிந்தது. அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் பதவிக்கு வி.கே.சசிகலா வரவேண்டும் என்று வலியுறுத்துவதாக அந்த செய்தி ஒளிபரப்பானது.
அன்று மாலை போயஸ் கார்டனில் அனைத்து அமைச்சர்களும் ஆஜர் ஆனார்கள். பதினெட்டு அமைச்சர்கள் தனித்தனியாக தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தனர். சசிகலாவே பொதுச்செயலாளராக வரவேண்டும் என்று சொல்லிவைத்தாற்போல் அனைவரும் ஒரேமாதிரி கருத்து கூறினார்கள்.
சனிக்கிழமை இரவே “கழகத்தை காக்க வந்த சின்னம்மாவே” என்று பல இடங்களில் போஸ்டர்கள் முளைத்தன என என்றால் ஜெயலலிதாவின் மீது இருந்த விசுவாசத்தின் அளவீட்டை நாம் அறிந்துகொள்ளலாம்.
அன்று சசிகலாவை சந்திக்க வந்தார் தினத்தந்தி அதிபர் பாலசுப்பிரமணியம்.ஜெயலலிதா எந்த சேரில் அமருவாரோ அதே சேரில் சசிகலா அமர்ந்து அவரை சந்தித்த புகைப்படங்களை கார்டன் தரப்பு வெளியிட்டு, அவர் இடத்தில் இனி இவர் தான் என்பதை சொல்லாமல் சொல்லி உணர்த்தினார்கள்.
ஞாயிற்றுக்கிழமை அ.தி.மு.க தலைமைக்கழகத்தில் இருந்து, அனைத்து மாவட்டத்திற்கும் தகவல் பறந்தது. அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக சசிகலா வர வேண்டும் என்று தீர்மானம் போட்டு அனுப்பும்படி உத்தரவிடப்பட்டது.
பெரும்பாலான மாவட்டங்களில் அது நடைமுறைப்படுத்தபட்டது. இந்திய ஊடகம் ஒன்றில் வி.கே. சசிகலா என்ற பெயருக்குப் பதிலாக 'சின்னம்மா' என்று ஒளிபரப்பினார்கள். அ.தி.மு.க-வின் பொதுக்குழு இந்த மாத இறுதிக்குள் கூட்டப்படும் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. பொதுக்குழுவில்தான் இறுதியான முடிவு அறிவிக்கப்படும்.

Post a Comment

0 Comments